உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து

குருநாகல் குளியாப்பிட்டி பள்ளிவாசல் மீது கல்வீச்சு- பாடசாலைக்கும் சேதம்

பொலிஸார் விசாரணை - ஸாஹ்ரான் ஹாசீமின் சகோதரி மட்டக்களப்பில் கைது
பதிப்பு: 2019 மே 01 23:28
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 02 21:24
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#kuliyapitiya
#kurunegala
#Srilanka
#Batticaloa
#Attackonmosque
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், குளியாப்பிட்டிப் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இன்று புதன்கிழமை பிற்பகல் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏதண்டவெல பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின்போதே இந்தக் கல்வீச்சுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியதுடன் அங்கிருந்த தளபாடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பக்கத்தில் இருந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பள்ளிவாசல் மீது கற்களை வீசிய அடையாளம் தெரியாத நபர்கள், பள்ளிவாசலுக்கு அருகாக இருந்த பாடசாலையில் உள்ள பூச்சாடிகளைத் தூக்கி வீசியுள்ளனர். பாடசாலைக் கட்டடத்திற்கும் சிறிய சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குளியாபிட்டியப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பள்ளிவாசல் மற்றும் ஹோட்டலில் உள்ள சிசிரி கமராவின் உதவியுடன் சந்தேக நபர்களைத் தேடுவதாகவும் பொலிஸார் கூறினர்.

இலங்கையில் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த ஐ.எஸ் இஸ்லாமியவாதியும் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவருமான ஸாஹ்ரான் ஹாசீமின் சகோதரி இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருபத்தைந்து வயதான ஹாசீம் மதனியா என்ற இளம் பெண், மட்டக்களப்பு புதிய காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹாசீம் மதனியாவை அவரது வீட்டில் கைதுசெய்தபோது, அவரிடம் இருந்து இருபது இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஸாஹ்ரான், ஹாசீமின் ஆகிய இரண்டு சகோதரர்களும், அவரது தந்தையான முகமட் ஹாசீமும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல், துப்பிக்கிப் பிரயோகங்களின்போது கொல்லப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகரா ஏலவே கூறியிருந்தார்.