இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடந்த தாக்குதலின் பின்னரும்

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை - ஞாயிறு ஆராதனைகளைத் தவிர்க்குமாறு பேராயர் கோரிக்கை

பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகைகளும் நிறுத்தப்படும் சாத்தியம்
பதிப்பு: 2019 மே 02 16:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 03 00:02
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Terroristattackssrilanka
#SriLankancardinal
#CatholicChurch
#MalcolmRanjith
இலங்கையின் தலைநகர் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியான நீர்கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு பிரதேசங்களில் சென்ற 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் இதுவரை கிறிஸ்தவ மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களில் நம்பிக்கை தரும் உத்தரவாதங்கள் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காததால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயங்களுக்குச் செல்ல வேண்டாமென இலங்கைக் கத்தோலிக்க திருச்சபையின் போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரியுள்ளார். தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகள் நடத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வியாழக்கிழமை முற்பகல் அனைத்து மறைமாவட்ட ஆயர்களுக்கும் அறிவித்துள்ளார்.
 
மேலும் சில தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாமென வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல் ஒன்று கூறியுள்ளதால், அதன் காரணமாக ஞாயிறு ஆராதனைகளைத் தவிர்க்குமாறு பேராயர் கேட்டுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிப் பூஜைகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் ஆராதனைகளுக்குச் செல்ல வேண்டாமென பேராயர் கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்பதியடைந்துள்ள பேராயர் கர்தினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய குண்டு துளைக்காத வாகனத்தையும் ஏற்க மறுத்திருந்தார்.

தங்கள் பாதுகாப்பை விட, மக்கள் பாதுகாப்பே முக்கியமானதெனவும் பேராயர் இலங்கை அரசாங்கத்திடம் கூறியிருந்தார். உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் பேராயர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும் பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்குச் செல்ல வேண்டாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிக்கலாமென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

குருநாகல் குளியாப்பிட்டியில் உள்ள பள்ளிவாசல் மீது புதன்கிழமை இரவு சில நபர்கள் கற்களை வீசித் தாக்கியுள்ளதாகவும் அதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும் குளியாப்பிட்டி பொலிஸார் கூறியிருந்தனர்.