உயிர்த்தஞாயிறு தாக்குலின் பின்னர் தாயகத்தில் தேடுதல் வேட்டை

கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தின் அராஜகம் தலைதூக்கியுள்ளதாக விசனம்
பதிப்பு: 2019 மே 04 11:22
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 04 21:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Srilanka
#Jaffna
#UniversityofJaffna
#UOJ
#PTA
#Tamils
#NothernProvince
கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குலின் பின்னர், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தினால் தேடுதல் என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதலை அடுத்து கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தற்கொலைத் தாக்குதலை அடுத்து தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கூடுதலான தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய, நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக வாளகத்திற்குள் நுழைந்து சோதனை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினரும் இலங்கை அதிரடிப்படையினரும் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரர்களின் படங்கள் ஆகியவை மீட்கப்பட்டதாகத் தெரிவித்து மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் கைதுசெய்து, நேற்று இரவு வரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

இதன் பின்னர் இரவு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிசாமி பீற்றர் போல் முன், முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே கைதுசெய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாகக் கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் மாணவர் ஒன்றியம் சார்பாக, சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவடிவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகியோர் முன்னிலையாகியிருந்ததாகவும் யாழ்ப்பாண செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்ட சதி என விசனம் வெளியிட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மாணவர் ஒன்றியக் கட்டடம், மாணவர் விடுதி போன்றனவற்றில் பெருமளவு இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமாக தேடுதல் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்கால் படுகொலைகளின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை இராணுவத்தினர் இரு மாணவர்களையும் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.