தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில்

யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிக்கு தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு என்ற பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

பாடசாலைகளைச் சூழ இலங்கை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்கள் தகவல்
பதிப்பு: 2019 மே 05 14:03
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மே 07 21:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Jaffna
#ChundikkuliLadiesCollege
#Warningletter
#NTJ
#Srilanka
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குலை அடுத்து இயல்பு நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த நிலையில், இலங்கையின் அரச பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர், நாளை ஆறாம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ்ப்பாண மாவட்ட தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிக்கு, அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாடசாலை வட்டாரங்கள், கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
 
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் ஆயுததாரிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அப்பாவிப் பொது மக்கள் உட்பட வெளிநாட்டவர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.எஸ் இஸ்லாமியவாதிகள் உரிமை கோரியிருந்தனர்.

இதன் பின்னர் இலங்கை முழுவதும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம் கடும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுமிருந்தனர்.

தற்போது, விடுமுறையில் உள்ள அரசாங்க பாடசாலைகளை நாளை திங்கட்கிழமை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், நேற்றுச் சனிக்கிழமை தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு - யாழ்ப்பாண மாவட்டம் என்று குறிப்பிடப்பட்டு, முகம்மது உமர் ரியாஸ் (பிரதீப்) என்ற முஸ்லிம் நபர் ஒருவரது பெயரில், யாழ்ப்பாணம் சுண்டிக்குழி மகளிர் கல்லூரி அதிபருக்கு, எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் “இந்த தேசம் அல்லாஹ்வின் தேசம், இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது, சிலுவை தூக்கும் மாணவர்களைக் கொல்லுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடிதம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதைக் குழப்பும் நோக்கில், இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதா என்ற அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தக் குழப்ப நிலையானது, எதிர்வரும் மே 18 ஆம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்துவதற்கான சதி நடவடிக்கையா எனப் பலரும் கூர்மை செய்தித் தளத்திடம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பாக ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளைச் சூழ, பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக, பாடசாலை வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.