உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்- வாகனங்கள் எரிந்து நாசம்

காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதி
பதிப்பு: 2019 மே 05 23:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 06 23:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Negombo
#violence
#Muslims
#EasterAttackSl
#Lka
கொழும்பில் இருந்து முப்பத்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் உள்ள தைக்கா வீதியில் முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் சிலருக்கிடையே இன்றிரவு ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் தீயிடப்பட்டதாகவும் நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்தனர். தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்கள இளைஞர்களே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனால் நீர்கொழும்புப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது. இலங்கைப் பொலிஸ் திணைக்களம் இன்றிரவு எட்டு மணியில் இருந்து நாளை திங்கட்கிழமை காலை 7 மணிவரை ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.
 
வன்முறை இடம்பெற்ற பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸாரும் இலங்கை முப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இலங்கைப் படையினர் முன்னிலையிலேயே முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்கள் தீயிடப்பட்டன.

அடிதடியினால் சிலர் காயமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்கள அரசியல் பிரமுகர்கள் சிலர் சம்பவ இடத்தில் காணப்பட்டனர். ஆனாலும் சிங்கள இளைஞர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடுகளை சுற்றிவளைத்துள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களோடு வாய்த்தர்க்கம் புரிந்த முஸ்லிம்களை வீடுகளுக்குச் செல்லுமாறு இலங்கைப் படையினர் உத்தரவிட்டனர்.

ஆனால், சிங்கள இளைஞர்கள் வீதியில் நின்று முஸ்லிம்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இலங்கைப் படையினர் அதனைத் தடுக்கவில்லையெனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, பிந்திக்கிடைத்த தகவலின்படி, முஸ்லிம் பிரதேசமான பலகத்துறைக்குச் செல்லும் வீதிகள் அனைத்தும் வழி மறிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப் படையினர் சிங்கள இளைஞர்கள் எவரையும் கைது செய்யவில்லையெனவும் கூறப்படுகின்றது.