உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

நீர்கொழும்பு வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு - ரணில்

இன வன்முறையல்ல குழு மோதல் என்கிறார் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
பதிப்பு: 2019 மே 06 15:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 07 20:57
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#EasterAttackSl
#Lka
#Negombo
#compensation
#Ranilwickramasinghe
#Colombo
#Srilanka
#lka
கொழும்பின் புறநகர் பகுதியான நீர்கொழும்பு பலகத்துறைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது, பொதுச் சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். சேதவிபரங்கள் தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தேசிய கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகள், மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சின் கீழ் சேதங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யப்படவுள்ளன.
 
மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று திங்கட்கிழமையே ஆரம்பமாகுமெனவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை, நீர்கொழும்பு பலகத்துறை கொச்சிக்கடை, போரதொட பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.

இது இன வன்முறையல்ல எனவும் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிடப்பட்ட முறையில் நடத்தப்பட்ட தாக்குதலென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்த வன்முறைச் சம்பவத்தில் பல வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அடித்துச் சேதமாக்கப்பட்டதுடன் தீயிட்டும் எரிக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னர், குருநாகல் மாவட்டம் குளியாப்பிட்டியில் உள்ள பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டது. தற்போது நீர்கொழும்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.