பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் 2600 பேரில் 2300 வடநாட்டவர்கள்

திட்டமிட்டுப் பறிக்கப்படும் தமிழ்நாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்

சமூக வலைத்தளத்திலும் இயக்கங்கள் கடந்தும் பெருந்திரள் தமிழர்கள் ஆதரவு!
பதிப்பு: 2019 மே 06 15:13
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: மே 07 03:34
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#India
#Tamilnadu
#Tamils
#TamilnaduJobsForTamils
#TamilnaduGovernment
சமீபகாலமாக, தொடர்வண்டித் துறை உள்ளிட்ட பல இந்திய மைய அரசு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டவர்களுக்குரிய இடங்கள் வடநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2019 மே 3 அன்று, திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறைப் பணிமனையை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தியது. அப்போராட்டத்தையொட்டி, சமூக வலைத்தளங்களில் "தமிழக வேலை தமிழருக்கே" மற்றும் TamilnaduJobsForTamils ஆகிய குறிச்சொற்களை (Hashtag) முன்னிறுத்தித் தொடர்ந்த பரப்புரையின் பயனால் இந்திய அளவில் பேசு பொருளாகியும் உள்ளது. ஏனைய மாநிலங்கள் 1986 முதலே மண்ணின் மைந்தர்களுக்கு வேலையை உறுதிப்படுத்தும் சட்டம் இயற்றியுள்ளார்கள் என்றும் தமிழ்நாடு அரசு இதுவரை ஏன் செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது.
 
இரண்டு மாதங்களுக்கு முன்பு, தமிழக அளவில் பறிக்கப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த சதிகளுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் பெருந்திரள் மக்கள் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. பெப்ரவரி மாதம் சென்னையில் நடந்த தன்னாட்சித் தமிழகம் மாநாட்டில், பெருகி வரும் வெளியார் வேலைவாய்ப்புகள் குறித்தும் கருத்துக்கள் பறிமாறப்பட்டதாகவும் மாநாட்டுத் தீர்மானங்களில் பிரதிபலிக்கப்பட்டதாகவும் கூர்மையின் சென்னை நிருபர் தெரிவித்திருந்தார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளின் பொழுதும் நாம் தமிழர் கட்சி உட்பட்ட பல்வேறு அமைப்புகளும் 'வடநாட்டவர்களால் பறிக்கப்படும் தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள்' குறித்த எதிர்வினைக் கருத்துக்களையும் தெரிவித்து தொடந்து பேசு பொருளாக வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி அவர்கள், "இப்போராட்டம் குறித்தச் செய்திகளை கூர்மை செய்தித்தளத்திற்காக பகிர்ந்துக்கொண்டபொழுது, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1991ஆம் ஆண்டு முதல் வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளதுடன் பல்வேறு கட்டங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

அவருடைய முழுக்கருத்துப் பகிர்வை கீழே காணலாம்:

"தமிழ்நாட்டிலுள்ள தொடர்வண்டித்துறைப் பணியிடங்களில் பணியாற்றப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,765 பழகுநர்களில் (Act Apprentice) சற்றொப்ப 1,600 பேர் வடமாநிலத்தவர் ஆவர். அவர்களில் 300 பேர் பொன்மலை தொடர்வண்டியில் பணியமர்த்தப்பட்டனர். அதில் ஒரு தமிழர்கூட இல்லை! இந்த அநீதிக்கு எதிராகவே மே 3 அன்றைய போராட்டமும், சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கத்தையும் முன்னெடுத்தோம்.

"தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் – இளைஞர் அமைப்புகளைத் திரட்டியதோடு, அவர்களை சமூக வலைத்தளப் பரப்புரையில் இணைத்து, இச்செய்தியை பேசு பொருளாக்கினோம்.

"சற்றொப்ப 90 இலட்சம் தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புத் துறை அலுவல கத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் சூழலில், தமிழ்நாட்டின் இந்திய அரசு நிறுவனங்களில் பெருமளவில் வெளி மாநிலத்தவர்கள் தொடர்ந்து பணியமர்த்தப்பட்டு வருவது தமிழ்நாட்டு இளையோரிடையே பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், இந்தப் பரப்புரை இயக்கம் வெகுவான வீச்சைப் பெற்றுள்ளது.

"தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேலுள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியில் 100 விழுக்காட்டுப் பணியிடங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தொடர்ச்சியான கோரிக்கைகள்!

"தமிழ்த்தேசியப் பேரியக்கம் 1991ஆம் ஆண்டு முதல் வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளதுடன் பல்வேறு கட்டங்களில் பல போராட்டங்களை முன்னெடுத்தும் வந்திருக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு, திருச்சி பெல் நிறுவனத்தின் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு மறியல் போராட்டம் நடத்தினோம். நம்முடைய தங்க நகை வணிகத்தை சூறையாடி, நூற்றுக்கணக்கான தமிழ்ப் பொற்கொல்லர்கள் தற்கொலை செய்து கொண்டு இறப்பதற்குக் காரணமாக விளங்கும் ஆலூக்காஸ், கல்யாண் போன்ற மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டப் போராட்டத்தை 2009இலும், 2011இலும் நடத்தினோம். பல தோழர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

"கடந்த 2014ஆம் ஆண்டு, தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டி சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டோம். 2015இல், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் – அலுவலகங்கள் அனைத்திலும் 1976ஆம் ஆண்டு நடுவண் அலுவல் மொழிச் சட்ட விதிகளின்படி தமிழைக் கட்டாய அலுவல் மொழியாக்க வேண்டுமென மனுக்கள் அளித்தோம். 2016ஆம் ஆண்டு (12.09.2016), திருச்சி தொடர்வண்டிக்கோட்டத் தலைமையகத்தை முற்றுகையிட்டோம்.

"கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர் அமர்த்தப்பட்டத்தை அம்பலப்படுத்தி, தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை வெளிக் கொண்டு வந்ததோடு, அந்த பணியமர்த்தல் ஆணையையே இரத்து செய்ய வைத்தோம். 2017 அக்டோபர் 25 தொடங்கி 31 வரை, தமிழ்நாடெங்கும் இதற்கானப் பரப்புரை இயக்கத்தையும், 31.10.2017 அன்று சென்னை - திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்தது.

"அடுத்து, 2018 பிப்ரவரி 3இல், சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து சென்னையில் “தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே!” என்ற தலைப்பில் மாநாடு நடத்தியதோடு, இதைச் செயற்படுத்துவதற்கான சட்ட வரைவை அம்மாநாட்டில் தாக்கல் செய்தோம். பிற மாநிலங்களில் எப்படியெல்லாம் மண்ணின் மக்களுக்கு வேலை அளிக்கிறார்கள் என அம்மாநாட்டில் புகைப்பட விளக்கக் கண்காட்சி நடத்தியதோடு, அதை பல்லாயிரக்கணக்கில் புத்தகங்களாக அச்சிட்டு பரப்புரை செய்தோம்.

"இப்படியான தொடர் செயல்பாடுகளின் ஒருவடிவமாகவே, 2019 மே 3 அன்று பொன்மலையில் தமிழர் மறியல் போராட்டத்தையும் தமிழகவேலை தமிழருக்கே TamilnaduJobsForTamils சமூக வலைத்தளப் பரப்புரையையும் முன்னெடுத்தது தமிழ்த்தேசியப் பேரியக்கம். இன்று, இச்சிக்கல் குறித்து ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலைக்கு அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் தள்ளப்பட்டுள்ளன. அதற்கு நம்முடைய முயற்சி ஒரு முகாமையான காரணம் என்பதை பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன்.

"இந்தக் கோரிக்கை நீதியின்பாற்பட்ட கோரிக்கை! நாம் வாழ்ந்து வரும் இந்தத் தமிழ் மண், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமக்கே உரிய தாயகம். அதனால்தான், 1956இல் மொழிவழித் தாயகமாக "தமிழ்நாடு" நமக்கான "மாநிலம்" என்ற வகையில் உறுதி செய்யப்பட்டது. இதேபோல், பிற தேசிய இனங்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான முகாமையான காரணம், அந்தந்த தேசிய இனத் தாயகங்களில் அவரவர் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், வணிக வாய்ப்புகளை உறுதி செய்து கொண்டு, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே!

"பிற மாநிலங்களில் இதை உறுதி செய்ய தனித்தனி சட்டங்கள்- ஆணைகள் செயலில் உள்ள நிலையில், இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், அதற்குக் காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் என்றும் சிலர் பேசி வரும் தமிழ்நாட்டில்தான், மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளியுங்கள் என்று உரிமை முழக்கத்தையே கெஞ்சலாகக் கேட்க வேண்டிய நிலை உள்ளது. வடமாநிலங்கள் பலவற்றில் நாம் உள்ளே நுழைவதைக் கூட தடுக்கும் வகையில் "விசா"வுக்கு இணையான கட்டுப்பாடுகளுடன் கூடிய "உள் அனுமதிச் சீட்டு" (Inner Line Permit) நடைமுறையில் இருக்கிறது.

"இந்த முழக்கத்தால் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது! 1956இல் மொழிவழி மாநிலங்கள் உருவானபோது, தமிழரின் வரலாற்றுத் தாயகத்தின் சில பகுதிகள் இந்திய அரசால் கூறுபோடப்பட்டு கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களுடன் சேர்க்கப்பட்டன. அந்த மாநிலங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களில் பெரும்பாலோர், தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடிச் சென்றவர்கள் அல்லர்! அவர்கள் அம்மண்ணின் மைந்தர்கள் ஆவர். அவர்கள் தமது வீட்டில் தமிழ் பேசினாலும், அம்மாநில மொழியை - பண்பாட்டை ஏற்றுக் கொண்டு அம்மாநில உணர்வோடு கலந்து நிற்கின்றனர். எனவே, அவர்களுக்கு எந்த முழக்கத்தால் எந்தச் சிக்கலும் இல்லை!

"ஆனால், இந்தி மொழி மாநிலங்களிலிருந்து சற்றொப்ப 1 கோடி பேர் தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பணி மற்றும் தனியார் பணிக்காக தமிழ்நாட்டில் குடியேறியுள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இதே காலகட்டத்தில் அதே இந்தி மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்று வாழும் தமிழர் எண்ணிக்கையோ வெறும் 8 இலட்சம்தான்! எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒரு கொடி இந்தி மாநிலத்தவரை வெளியேற்றினால், அங்கிருந்து வரும் சில இலட்சம் தமிழர்களுக்கு நம் மண்ணிலேயே நல்ல வேலை வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தர முடியும்! அந்தந்த தேசிய இனத்தாயகத்திலேயே அந்த தேசிய இன மக்கள் நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்த முடியும்!

"பல்வேறு போராட்டங்கள் நடத்தி - ஈகங்கள் செய்து, ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூலி உயர்வு பெற்ற உழைக்கும் தமிழ் மக்களின் போராட்டத்தை, வெறும் 150 ரூபாய் கூலி பெறும் வடமாநிலத் தொழிலாளி காலி செய்கிறார். அப்படித்தான், தொடர்ந்து கட்டுமானத் தொழில், உணவகப் பணி உள்ளிட்ட பல பணியிடங்களில் தமிழ் மக்கள் வடமாநிலத்தவரின் குறை கூலி காரணமாகப் புறக்கணிக்கப்பட்டனர். வட மாநிலத்தவரின் படையெடுப்பு காரணமாக தொடர்ந்து வறுமையில் உழன்ற தமிழ் மக்கள், இப்போது அந்தப் பணிகளைவிட்டே ஒதுங்கிக் கிடக்கின்றனர். பலர் மதுக்கடைகளில் புரண்டு கிடக்கின்றனர். சிலர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் உழழ்கின்றனர். இனி, வடமாநிலத்தவர் வைப்பதுதான் சட்டம்! அவர்கள் 1000 ரூபாய் கேட்டாலும் நாம் தந்துதான் ஆக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது.

"தனக்குப் பிறந்த மகன் ஊதாரியாக இருக்கிறான், வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றுகிறான் என்கிறபோது, ஒரு நல்ல தந்தை அவனுக்கு அறிவுரைகள் வழங்கித் திருத்த வேண்டும். அப்படித்தான், உழைப்பின் அருமை புரியாமல் மதுக்கடைகளில் புரண்டுகிடக்கும் நம் தமிழ்ப் பிள்ளைகளைத் திருத்த வேண்டுமே ஒழிய, அவர்களுக்குப் பதிலாகக் குறைந்த கூலி பெறும் வடமாநிலத்தவரை அனுமதித்து, புதிய சிக்கல்களுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடாது!

“அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க!” என்றார் நம் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். அதுபோல், அனைத்துத் தேசிய இனத் தாயகங்களிலும் அந்தந்த தேசிய இனத்தவருக்கே கல்வி - தொழில் - வணிகம் - வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என முழங்குவோம்!"

என விரிவான கருத்துக்களை கூர்மை செய்தித்தளத்துடன் அருணபாரதி பகிர்ந்துக்கொண்டார்.