வடமாகாணம்

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் தற்காலிகமாகப் பதவி நீக்கம் - மைத்திரியின் செயலகம் கடிதம்

காரணம் தெரியவில்லை என்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்
பதிப்பு: 2019 மே 06 16:14
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 07 20:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#UniversityofJaffna
#UOJ
#Vicechancellor
#Temporarydismissal
#EasterAttackSl
#Srilanka
#lka
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளெங்கும் இராணுவமயமாகக் காட்சியளிக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவத்தால் தேடுதல் நடத்தப்பட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன், கொழும்பு நிர்வாகத்தினால் தற்காலிகமாகப் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.
 
ஆனால் உபவேந்தர் பதவி விலக்கப்பட்டமைக்கும் மாணவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென பல்கலைக்கழக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்காலிகமாக பதவி விலக்குவதாக கொழும்பு காலிமுகத்திடலிலுள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து, சென்ற ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட கடிதத்தின் பிரதி யாழ் பல்கலைக்கழகப் பதிவாளருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், தற்காலிகமாகப் பதவி விலக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவுமே கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதனால் உபவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன், இன்று திங்கட்கிழமை கொழும்புக்குச் சென்றுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

உபவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன், பதவி நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவுமே தெரியவில்லையென பல்கலைக்கழக பேராசிரியர்கள், மூத்த விரிவுரையாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளனர்.

உபவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன், சிறந்த கல்வியாளர் என்றும், ஆனாலும் நிர்வாக விடயங்களில் அவர் செயற்றிறன் அற்றவரென (Inefficiency) அறிந்து கொண்டதால், அவரை தற்காலிகமாகப் பதவியில் இருந்து இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கொழும்பு வோட் பிளேசில் உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

ஆனால், பதவி விலக்கப்பட்ட உபவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன், அமைதியான, அடக்கமான நிர்வாகியென (A modest, quiet administrator) பெயர் குறிப்பிட விரும்பாத யாழ் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

பேராசிரியர் விக்னேஸ்வரனின் உப வேந்தர் பதவிக்காலம் நிறைவடைய இன்னமும் ஒரு ஆண்டு மாத்திரமே உள்ள நிலையில் அவர் தற்காலிகமாகப் பதவி விலக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னர், இலங்கையின் பல பாகங்களிலும் பதற்றம் தொடரும் நிலையில், பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் காலவரையறையின்றி இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சென்ற மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ .எஸ் இஸ்லாமியவாதிகளை தேடுவதாகக் கூறிக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கை இராணுவம், யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் சோதனை நடத்தி, இரு மாணவர்களைக் கைது செய்தமை நியாயமற்றதென யாழ் பல்கலைக்கழக சட்டபீடத் தலைவர் கலாநிதி குமாரவேல் குருபரன் குற்றம் சுமத்தியிருந்தார்.