மட்டக்களப்பு பொலிஸார் படுகொலை

நிரபராதியான முன்னாள் போராளி ஐந்து மாதங்களின் பின் விடுதலை

இன்னும் எத்தனை நிரபராதிகள் சிறைச்சாலைகளில் உள்ளானரோ என சமூக ஆர்வலர்கள் விசனம்
பதிப்பு: 2019 மே 11 22:00
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: மே 12 17:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Batticaloa
#Vavunativu
#Slpolice
#Ajanthan
#LTTE
#Easterattacklk
#Innocent
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில், இலங்கைப் பொலிஸார் இருவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிரபராதியான முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர், கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தன் ஐந்து மாதங்களின் பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இலங்கைப் பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் குறித்த முன்னாள் போராளிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற விடயம் அம்பலமானதை அடுத்து, அவரை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு உறுதியளித்துள்ளதாக கடந்த முதலாம் திகதி அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் குறித்த நபரது விடுதலை தொடர்பாக எவ்வித செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாதிருந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு வழங்கும் ஏனைய வாக்குறுதிகள் போன்று இதுவும் வாய்ப்பேச்சு மட்டும் தானா என்ற சந்தேகம் காணப்பட்ட நிலையில் இலங்கை ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று காலை பதில் நீதவான் வீ.தியாகேஸ்வரனது இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் ஐந்து மாதங்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து நிரபராதி என்று நிரூபனமானதை அடுத்து கதிர்காமத்தம்பி ராசகுமாரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வவுணதீவில் இலங்கைப் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் அவர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் விடுதலைப் புலி போராளியான அஜந்தன் கிளிநொச்சியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் மேலும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் கதிர்காமத்தம்பி ராசகுமாரன் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிசாரைக் கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி, கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம் சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 ஆதி திகதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நிரபராதி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் எதுவித குற்றமும் இழைக்காது 5 மாதங்களாக குறித்த குடும்பத்தலைவன் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்ததைப் போன்று இன்னும் எத்தனை நிரபராதிகள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் நிலவுதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.