உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை-

அமெரிக்காவில் திலக்மாரப்பன உரையாடல்- சீனா செல்கிறார் மைத்திரி

பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிப்பதிலும் இழுபறி- ரணில் அரசாங்கம் விசனம்
பதிப்பு: 2019 மே 12 15:13
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 12 17:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பையடுத்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திங்கட்கிழமை சீனாவுக்குச் செல்லவுள்ளார். ஆசிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை பீஜிங்கில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் உரையாற்றுவதற்காகவே மைத்திரிபால சிறிசேன சீனாவுக்குச் செல்கிறார். 47 ஆசிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், பிரமுகர்கள் உட்பட இருநூறுபேர் மாநாட்டில் கலந்துரையாடவுள்ளனர். அதேவேளை, மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை சீன அதிபர் ஷி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை மைத்திரிபால தனித்தனியாகச் சந்திக்கவுமுள்ளார்
 
மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ள மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது நாளை திங்கட்கிழமை காலை இலங்கையின் முப்படைகளின் தளபதிகளோடு உரையாடுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் முப்படைகளின் தளபதியாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேன பதவி வகிப்பதால், சீனாவுக்குச் செல்லும் போது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான அரசாங்கத்துடன் கருத்து மோதல் உள்ளது. இதனால் பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமல் முப்படைத் தளபதிகளிடம் பொறுப்புக்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து உரையாடுவாரென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் நின்றிருந்தார். அவர் சிங்கப்பூர் செல்லும் போதும் பதில் பாதுகாப்பு அமைச்சராக எவரையுமே நியமிக்கவில்லை.

இதனால் சீனா செல்லும்போதும் பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்கும் வாய்ப்பு இல்லையெனவும், சிலாபத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பாக இலங்கைப் பொலிஸ் மா அதிபருக்கு சகல உத்தரவுகளையும் ஜனாதிபதி பிறப்பித்துள்ளாரெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் வற்புறுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல் செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவில் உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக்குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.