உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்தது இலங்கையின்

வடமேல் மாகாணத்தில் காலவரையறையற்ற ஊரடங்கு

பதற்றம் தொடர்கிறது - மைத்திரி சீனா பயணம்
பதிப்பு: 2019 மே 13 14:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 16 03:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Policecurfew
#Muslim
#Eastersundayattacklk
#Chilaw
#Puttalam
#Mosque
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட சில பிரதேசங்களில் தொடர்ச்சியாகப் பதற்றம் நிலவுகின்றது. இன்று திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிலாபம், புத்தளம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடமேல் மாகணத்தில் காலவரையறையற்ற ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குருநாகல் - குளியாப்பிட்டியா, பின்கிரியா, டும்மலசூரியா, ஹெட்டிபொல, ரஸ்நாயக்கபுர, கொபேகன போன்ற பிரதேசங்களில் மாத்திரமே இன்று பிற்பகல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் திடீரெனப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபம் நகரில் வன்முறைகள் ஆரம்பித்ததால் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை நான்கு மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.
 
ஆனால் வன்முறைச் சம்பவங்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் அதிகரித்துள்ளதால் வடமேல் மாகாணம் முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறினார்.

வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீது சிங்கள இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டபோதும், தொடர்ந்தும் அந்தப் பிரதேசங்களில் பதற்றம் நிலவுவதால் இன்று பிற்பகல் முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டியில், முஸ்லிம்களின் சொத்துக்களுக்குப் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஹக்கீம் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று காலை நேரில் சந்தித்து தமது முறைப்பாட்டைத் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புகள் இன்றி முஸ்லிம்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாக அமைச்சர் ஹக்கீம் கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை காலை சீனாவுக்குப் பயணம் செய்துள்ளார்.

ஆசிய நாகரீகங்களின் உரையாடல் என்ற மாநாட்டில் உரையாற்றச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபடுவதுடன், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

சீனாவுக்குச் செல்வதற்கு முன்னர் பதில் பாதுகாப்பு அமைச்சராகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார்.