உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு - சீனா உத்தரவாதம், ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை முப்படையினருக்காக 260 கோடி ரூபாய்கள் அன்பளிப்பு
பதிப்பு: 2019 மே 14 21:49
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 16 03:44
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#China
#Eastersundayattacksl
#lka
#MaithripalaSirisena
#XiJinping
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான சூழலில் பயங்கரவாதத் தாக்குதல்களை இல்லாதொழித்து இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இலங்கை முப்படையினரின் வினைத்திறனை ஊக்குவிப்பதற்காக 260 கோடி ரூபாய்களை வழங்கவும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இணக்கம் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இவ்வாறு உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மைத்திரிபால சிறிசேன நேற்றுத் திங்கட்கிழமை சீனாவுக்குச் சென்றிருந்தார். இன்று இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்திற்கு 150 கோடி ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த நூறு ஜீப் ரக வாகனங்களையும் வேறு உதவிகளையும் வழங்க சீன ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாகவே அமெரிக்காவும் இலங்கையில் அக்கறை செலுத்தி வருகின்றது. பாதுகாப்புத் தொடர்பாக 16 ஆம் திகதி அமெரிக்காவில் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், சீனா இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது

சீன, இலங்கைப் புலனாய்வுத் துறையினருக்கிடையே தகவல்கள் பரிமாற்றிக்கொள்ளுதல், இந்தோ - பசுபிக் பாதுகாப்பு விடயங்களில் சீன - இலங்கைக் கடற்படையினரும் முப்படையினரும் இணைந்த வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துவது போன்றவை தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் இணக்கம் ஏற்பட்டது.

அத்துடன் சமூகவலைத் தளங்களைக் கட்டுப்படுத்தல் அவதானித்தல் போன்றவற்றுக்கான தகவல் தொழில் நுட்பப் பயிற்சிகள், உதவிகள் பற்றியும், சீனத் தொழில்நுட்பக் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவது குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இராணுவரீதியான ஒத்துழைப்புகளுடன் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகிய விடயங்களை முன்னெடுப்பதற்கும் முழுமையான இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஏற்பட்டுள்ள இணக்கங்களின் பின்னர் சீன, இலங்கை இராணுவ ஒத்துழைப்புக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பையடுத்து நாளை மறுதினம் 16 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் அமெரிக்காவில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான இலங்கையின் உயர்மட்டக் குழுவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ தலைமையிலான குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குகொள்ளவுள்ளது.

இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தொடர்பாகவே அமெரிக்காவும் இலங்கையில் கரிசனை செலுத்தி வருகின்றது. அந்த அடிப்படையில் 16 ஆம் திகதி அமெரிக்காவின் வோஷிங்டன் டிசி (Washington, DC,) நகரில் கலந்துரையாடல் நடைபெறவுள்ள நிலையில், சீனா இலங்கையின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளது.