உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணை - மகிந்த மௌனம்

அறுபது உறுப்பினர்கள் மாத்திரமே கையொப்பமிட்டனர்
பதிப்பு: 2019 மே 15 21:49
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 16 23:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#RishadBathiudeen
#Mahindarajapaksha
#Maithripalasrisena
#Easterattacklka
#Srilanka
#Lka
#ISIS
#Muslim
இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகள் நடத்தவில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கொழும்பில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, விசாரணை சரியான முறையில் நடத்தப்படாமையினால் எதிர்க்கட்சி என்ற முறையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாதெனவும் கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச எதுவுமே கூறவில்லை.
 
குறிப்பாகத் தற்கொலைத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன மீது பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து விலகிய பூஜித் ஜயசுந்தரவும் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய ஹேமசிறி பெர்ணான்டோவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இலங்கை நாடாளுமன்றத்தில் மைத்திரிபால சிறிசேன மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் குறைகூறியுள்ளார். ஆனால் மைத்திரிபால சிறிசேன, இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியமே இல்லையென்ற தொனியில் மகிந்த ராஜபக்ச கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அதேவேளை, தற்கொலைத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் இலங்கைப் பாதுகாப்புத் துறை ஏன் பலவீனமடைந்தது என்பது குறித்தும் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் பொறுப்புக் கூறுவதில் இருந்து ஏன் விலகி நிற்கின்றனர் என்பது தொடர்பாக ஆராய்வதற்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்குமாறு பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார்.

தெரிவு செய்யப்படும் நாடாளுமன்றக் குழுவுக்கு விசாரணையை சுயாதீனமாக நடத்துவதற்கான சகலவிதமான அதிகாரங்களை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மகிந்த ராஜபக்ச கையொப்பமிட மறுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் அவரது மகன் நாமல் ராஜபக்ச பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் சமர்ப்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இதுவரை 60 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படும்போது 113 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் மாத்திரமே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியை இழக்க நேரிடும்.

இந்த நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைi மகிந்த ராஜபக்சவை மையப்படுத்தி கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதே நல்லதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழுமையான ஆதரவு வழங்குமென விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரதுமுன கட்சியில் 54 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஷரட் பதியுதீன் கூறியுள்ளார். தனக்கும் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா இல்லையா என்பது தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதுவரை எதுவுமே கூறவில்லை. பிரேரணையிலும் கையொப்பமிடவில்லையெனத் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்தப் பிரேரணை தொடர்பாக அரச தரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் பலரும் அமைதி காக்கின்றனர். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் வெற்றிபெறாதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும் செல்வாக்குகள் அதிகரிக்குமெனவும் அவதானிகள் கூறுகின்றனர்.