உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே மீண்டும் இராணுவத்தில்

இலங்கை ஊடகத்துறைக்கு ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தலெனக் கண்டனம்
பதிப்பு: 2019 மே 16 15:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 17 21:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Prabath
#Bulathwatte
#Srilanka
#lka
#Easterattacklka
#CID
#Journalist
#lk
#Colombo
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைத் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை விடுதலை செய்ய வேண்டுமென சிங்கள இனவாத அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இராணுவப் புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கைப் புலனாய்வுத்துறை பலவீனமடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புள்ள சந்தேகநபரான இலங்கைப் புலனாய்வுத்துறை அதிகாரி பிரபாத் புலத்வட்டே (Prabath Bulathwatte) மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இந்தத் தகவலை இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கா சென்ற பதினொராம் திகதி உள்ளூர்த் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் எந்தக் குற்றங்களையும் செய்த பின்னர், குற்றவாளிகள் சர்வ சாதாரணமாகத் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை காணப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கூட மிகவும் இலகுவாக நடத்தப்பட்டது

ஆங்கிலப் பத்திரிகையாளரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரப் பத்திரிகையின் செய்தி ஆசிரியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான கீத் நொயர், ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன் ஆகியோர் 2008 ஆம் ஆண்டு தாக்கப்பட்டமை தொடர்பாக பிரபாத் புலத்வட்டே உட்பட ஐந்து இலங்கைப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் பிரபாத் புலத்வட்டே பின்னர் இலங்கைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருந்த பிரபாத் புலத்வட்டே இலங்கை இராணுவப் புலனாய்வுப் பணியில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் பணியில் இணைக்கப்பட்டமை இலங்கையில் ஊடகத்துறைக்கு மீண்டும் பேராபத்தென ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (The Committee to Protect Journalists) (CPJ) தெரிவித்துள்ளது.

பிரபாத் புலத்வட்டே மற்றுமொரு சண்டே லீடர் ஆங்கில வாரப் பத்திரிகை ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடனும் தொடர்புள்ளவர் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டமை ஊடகத்துறைக்குப் பெரும் அச்சுறுத்தலெனவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

முஸ்லிம் பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டு கைதான நபர்கள் கூட இலங்கைப் பொலிஸாரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாத்துமுள்ளனர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, டிரிபோலி (Tripoli Platoon) படையணி என்ற பெயரில் இராணுவ புலனாய்வுப் பிரிவொன்றை மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இயக்கியிருந்தார்.

அந்தப் படையணியே ஊடகவியலாளர்களைத் தாக்குவது கொலை செய்வது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிந்ததாக, லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா, அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த பிரபாத் புலத்வட்டே மீண்டும் இராணுவப் புலனாய்வுச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை இலங்கையில் ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்தென்று இலங்கை ஊடக அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

போர்க்குற்றம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கைப் படையினரோ, இலங்கை அரசாங்கமோ இதுவரை பொறுப்புக் கூறவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனீவா மனித உரிமைச் சபை தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் தீர்மானங்களை நிறைவேற்றியபோதும், இலங்கை அரசாங்கம் அந்தத் தீர்மானங்களை உதாசீனம் செய்துவிட்டு இலங்கைப் படையினரைக் காப்பாற்றி வருவதாகக் குற்றச்சாட்டுக்களும் ஏலவே எழுந்துள்ளன.

இலங்கையில் எந்தக் குற்றங்களையும் செய்து விட்டுக் குற்றவாளிகள் சர்வ சாதாரணமாகத் தப்பிவிடலாம் என்ற நம்பிக்கை காணப்பட்டதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் கூட மிகவும் இலகுவாக நடத்தப்பட்டதென அவதானிகள் கூறியிருந்தனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த முக்கியமான ஒன்பது சந்தேகநபர்கள் இலங்கைப் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டுக் கைதான நபர்கள் கூட இலங்கைப் பொலிஸாரால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அந்தக் குற்றவாளிகளைப் பாதுகாத்துமுள்ளனர்.

இந்த நிலையில், ஊடகவியலாளர்களின் கொலை, அச்சுறுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய இலங்கை இராணுவப் புலனாய்வாளர் பிரபாத் புலத்வட்டே, மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை ஊடகத்துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பில் செயற்படும் சுதந்திர ஊடக இயக்கமும் கூறியுள்ளது.

CPJ எனப்படும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கான குழு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்குகின்றது. உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தி வரும் அமைப்பாகும்.

அத்துடன் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருவதுடன் ஊடகத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஆய்வு செய்கின்றது.