உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலகத் தேவையில்லை - ரணில்

ரணில் அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி நம்பிக்கையில்லாப் பிரேரணை
பதிப்பு: 2019 மே 20 22:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 21 10:55
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Easterattacklk
#Srilanka
#Rizardbadurdeen
#SrilankaParliament
#UNP
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென்ற அவசியம் இல்லையென ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். தற்கொலைத் தாக்குதல்தாரிகளுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையெனவும் ஆகவே ரிஷாட் பதவியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டிய தேவை இல்லையென்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.
 
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவது நல்லதென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடித் தீர்மானித்தனர்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்ததை அடுத்து உறுப்பினர்கள் பலர் விசனமடைந்துள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற கட்சி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அந்தக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

ரிஷாட் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்திருந்தார். அவருடைய கட்சியைச் சேர்ந்த மூன்று போரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுமிருந்தனர்.

மூன்று உறுப்பினர்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளது.

எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென அமைச்சர்கள் பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பிரேரணை வெற்றிபெற வேண்டுமானால் 113 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக வாக்களிக்கக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டை ஏற்றுச் செயற்படுகின்றமையினால் ஆதரவாக வாக்களிக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லையென தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜே.வி.பியும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக இதுவரையும் அறிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் பலர் பிரேரணையில் கையொப்பமேயிடவில்லை.

இதனால் பிரேரணை வெற்றிபெறக் கூடிய வாய்ப்புகள் இல்லையென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளை, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.