இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் சிங்களப்

பெண்களுக்குக் கருத்தடை- ஆதாரமற்ற செய்தியெனக் கண்டனம்

கைதான வைத்தியர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
பதிப்பு: 2019 மே 25 18:05
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 27 20:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Kurunegala
#Illegalcontraception
#Srilanka
#lka
#Easterattacklka
#divaina
#Media
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், முஸ்லிம் மக்கள் மீது சிங்கள ஊடகங்கள் இனவாதக் கண்ணோட்டத்துடன் செய்திகளை வெளியிடுகின்றன. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போர் நடைபெற்றபோதும் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற காலத்திலும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் பௌத்த தேசிய இனவாதச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதேபோன்ற அணுகுமுறையை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் மீது சில சிங்கள ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகள் தொடர்பாகக் கொழும்பில் இயங்கும் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
 
எண்ணாயிரம் சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமான கருத்தடை சத்திரசிகிச்சையை முஸ்லிம் வைத்தியர் ஒருவர் செய்ததாகக் கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள நாளேடு, செய்தி ஒன்றைப் பிரசுரித்துள்ளது.

ஆனால் அந்த நாளேட்டில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டதல்ல என்றும் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவுமே தமக்குக் கிடைக்கவில்லை எனவும் இலங்கைப் பொலிஸ் மா அதிபர் கூறியதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

இந்த நிலையில் குருநாகல் மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் 42 வயதான சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, என்ற வைத்தியர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் வங்கிக் கணக்கில் அதிகளவு நிதி வைப்பிலிடப்பட்டுள்ளமை தொடர்பாகவே குறித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

எனினும் குறித்த வைத்தியர் எண்ணாயிரம் பேருக்கு சட்டவிரோதக் கருத்தடை செய்ததை ஒப்புக்கொண்டதாக இன்று சனிக்கிழமை வெளியான திவயின நாளேட்டில் மற்றுமொரு தகவல் பிரசுரமாகியுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையில் பிறக்கின்ற குழந்தைகளை விற்பனை செய்து அதிகளவு பணம் சம்பாதித்துள்ளதாகவும் திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், குறித்த வைத்தியர் கருத்தடை சத்திர சிகிச்சையை செய்ததாகவும் அந்தக் குற்றச்சாட்டில் வைத்தியர் கைதுசெய்யப்பட்டதாகவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பிரிவு எதுவுமே கூறவில்லை.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் விசாரணை செய்வதாகக் கூறியுள்ளார். மேலதிகமாக எதையுமே தெரிவிக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பாக உண்மையை அறிந்து கூறுமாறு ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் திவயின பத்திரிகையில் வெளியான செய்தி உண்மைக்கு மாறனது என்றும் ஆதாரமற்ற செய்தி எனவும் கொழும்பில் உள்ள ஊடக அமைப்புகள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று சனிக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளார்.