உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை-

ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான பிரேரணைக்கு ஜே.வி.பி.ஆதரவு

பதவி விலக வேண்டிய அவசியமேயில்லை என்கிறார் ரணில்
பதிப்பு: 2019 மே 27 23:20
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 28 20:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சூழலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் அதிரித்து வருகின்றன. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டுமென மூத்த அமைச்சர்கள் கூட அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தது. ஆனால் அந்தப் பிரேரணைக்கு ஆதுரவு வழங்க முடியாதெனக் கூறிவந்த மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி தற்போது ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
 
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்துக் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவையெழுந்துள்ளதாக ஜே.வி.பியின் பிரச்சாரச் செயலாளர் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட விஜத ஹேரத், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தையோ அதன் அமைச்சர்களையோ பாதுகாக்க வேண்டிய அவசியமில்யெனவும் கூறினார்.

மக்களின் அழுத்தங்களினாலேயே ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறிய விஜத ஹேரத், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் முடிவு செய்துள்ள நிலையில் ஜே.வி.பியும் இவ்வாறு அறிவித்துள்ளது.

இதேவேளை, ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென மூத்த அமைச்சர்கள் பலர் தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென்றும் குற்றங்கள் நிருபிக்கப்பட்டால் மாத்திரமே அமைச்சுப் பதவியில் இருந்து விலக்க முடியுமென்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.