நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல் - புகைப்படக் கருவியும் சேதம்

நீதிமன்ற தீர்ப்பின் பின் சம்பவம்
பதிப்பு: 2019 மே 28 00:13
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: மே 28 20:30
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Srilanka
#Journalist
#Kumanan
#Slpolice
#Attackonjournalist
#Neeraviyadipillaiyarkovil
#lka
#buddistmonk
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக காணப்படும் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக சம்பவ இடத்துக்கு செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
 
இன அழிப்பு போரின் பின்னரான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட பல செய்திகளை உடனுக்குடன் வெளிக்கொண்டுவந்த காரணத்தால் பல தடவைகள் இலங்கை இராணுவத்தாலும் பொலிஸாராலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன், இன்றைய தினமும் தாக்குதலுக்கு உள்ளானதுடன் குறித்த ஊடகவியலாளரது புகைப்படக் கருவியை சேதமாக்கிய பொலிஸார் மோசமான வாரத்தைப் பிரயோகங்களால் தன்னை அச்சுறுத்தி எச்சரிக்கை விடுத்ததாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்களது காணிகள் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களது வழிபாட்டுத் தலங்களை அழித்து அவற்றில் பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சியில் இலங்கையின் பௌத்த பிக்குகள் கங்கணம்கட்டி செயற்படுகின்றனர்.

இதன் ஒரு கட்டமாகவே, முல்லைத்தீவு – நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அத்துமீறி விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்தின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களை உடனடியாக அகற்றுமாறு, முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை ஆகியற்றின் அனுமதியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் வீதியோர பெயர்ப்பலகையை நாட்டுவதற்காகச் சென்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும், செம்மலைக் கிராம மக்களும் பௌத்த பிக்கு மற்றும் விகாரைக்கு பாதுகாப்பாக நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரால் தடுத்துநிறுத்தப்பட்டு பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவு பொலிஸார் ஆலய அபிவிருத்தி வேலைகளுக்காகவும் வழிபாட்டுக்காகவும் சென்ற மக்களை நிலத்தில் அமர்த்தி விசாரணை செய்ததுடன் மக்களின் விபரங்கள் தொடர்பாக பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நகர்த்தல் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணையில், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது நேற்றைய தினம் வழிபாடுகளுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்கும் சென்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தினருக்கு பொலிஸாராலும் பௌத்த பிக்குவினாலும் இடையுறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை ஆதாரம் காட்டி சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி, வழக்கின் தீர்ப்புக்கு அமைய பௌத்த பிக்குவால் மாற்றம் செய்யப்பட்ட கணதேவி தேவாலயம் என்ற பெயரை ஏற்கனவே இருந்ததைப் போன்று நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என மாற்றம் செய்யுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்ட போதிலும் அது இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் இரண்டு புதிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் வினவினார்.

இதன்போது இன்றைய தினமே கமராக்களை அகற்றுவதாகவும் பெயரையும் மாற்றுவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக குறித்த வேலைகளை செய்யுமாறும் மேலும் இரு தரப்பினரையும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறும் அமைதிக்கு பங்கம் ஏற்படாதவாறு செயற்படுமாறும் நீதிபதி கட்டளையிட்டதுடன், இனியும் இதனை மீறுவோர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூர்மையின் முல்லைத்தீவு செய்தியாளர் குறிப்பிட்டார்.