வவுனியாவில் தஞ்சமடைந்துள்ள

பாகிஸ்தான், ஆப்கானிஸ்த்தான் அகதிகளுக்கு உலர் உணவு வழங்க முல்லைத்தீவு மக்கள் ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அனுமதியைப் பெற முடிவு
பதிப்பு: 2019 மே 28 23:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 31 01:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Pakistan
#Afghanistan
#Refugees
#Vavuniya
#Poonthoddam
#Mullaituvu
#Northernprovince
#lka
#Sinhalese
#Tamils
கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை சிங்கள மக்கள் தாக்குவார்கள் என்ற அச்சத்தினாலேயே இலங்கை அரசாங்கம் அவர்களில் ஒரு தொகுதியினரை வடமாகாணம் வவுனியா - பூந்தோட்டம் முகாமில் தங்கவைத்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் இந்த மக்களை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறு கோரி நீர்கொழும்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அம்பாந்தோட்டையில் தங்க வைக்கப்பட்டபோதும் அங்கும் சிங்கள மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் வவுனியாவில் தங்க வைப்பதற்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலர் அனுமதித்தனர்.
 
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த முப்பத்து ஐந்து பேர் வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிங்களப் பிரதேசங்களில் இந்த அகதிகளைத் தங்கவைத்தால் பௌத்த சிங்களக் கடும் போக்காளர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் பிரதேசங்களில் இந்த அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் இந்த அகதிகளைத் தாக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையும் இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு

அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட குமரபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள முறிப்பு கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உலர் உணவு கொடுப்பதற்காக பூந்தோட்டம் முகாமுக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்றிருந்தனர்.

அவர்களை உலர் உணவு கொடுக்கவிடாமல் அங்கு நின்ற இலங்கை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று உலர் உணவுகளை வழங்குமாறு இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

ஆனால் 92 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து உலர் உணவுகளைக் காவிக் கொண்டு இன்று வருகை தந்ததாகவும் இலங்கை இராணுவத்தினர் மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுள்ளதாகவும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முப்பது ஆண்டுகாலப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏதிலிகளாக வவுனியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை மனிதாபிமான ரீதியில் பராமரிக்கவும் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உலர் உணவுகளைக் கையளிப்பதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் பெற்றுத்தர வேண்டுமெனவும் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

ஐ.நாவின் அனுமதியோடு உலர் உணவுகளை வழங்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, சிங்களப் பிரதேசங்களில் இந்த அகதிகளைத் தங்க வைத்தால் பௌத்த சிங்களக் கடும் போக்காளர்கள் இவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே தமிழ் பிரதேசங்களில் இந்த அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, தமிழ் மக்கள் இந்த அகதிகளைத் தாக்கமாட்டர்கள் என்ற நம்பிக்கையும் இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு. அப்படித் தாக்கப்பட்டாலும் அந்த அவமானம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களையே போய்ச் சேருமெனவும் இலங்கை அரசாங்கம் கருதியிருக்கலாமென்றும் வவுனியாப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்த அகதிகளின் செலவுகளுக்கு தலா 20 ஆயிரம் ருபாய்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கி வருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐந்நூறு அகதிகள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர்.