உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கிழக்கு மாகாணத்தில்

முஸ்லிம்களோடு தமிழர்களை மோதவிட பிக்குமார் திட்டம்

உண்ணாவிரதப் போராட்டம் என்ற பெயரில் பௌத்த ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஏற்பாடு
பதிப்பு: 2019 ஜூன் 18 20:13
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 21 03:56
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Ampara
#Batticaloa
#Hungerstrike
#Kalmunai
#Pradeshiyasabha
#EasternProvince
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களை மோதவிட்டு. மேலும் பிளவுகளை உருவாக்க பௌத்த பிக்குமார் முற்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அம்பாறை- கல்முனை பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த பிக்குமாரினால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகின்றது. இதற்கு சில தமிழ்ப் பிரமுகர்களும் தங்களை அறியாமல் உடன்பட்டுள்ளனர். வேறு சில தமிழர்கள் நன்கு திட்டமிடப்பட்ட இலங்கைப் புலனாய்வுத் துறையின் தந்திரத்தை அறியாமல் துணைபோயுள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


 
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டு, இன்று அனைத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச் சமுகத்தின் பண்பாட்டைச் சிதைத்து, முஸ்லிம் சமுகத்தையும் கேவலப்படுத்துவதே பௌத்த பேரினவாதிகளின் பிரதான நோக்கமென பெயர் குறிப்பிட விரும்பாத அருட் தந்தையொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழ்- முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச மக்கள் கூறுகின்றனர்

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றிய தலைவர் சிவசிறீ சச்சிதானந்தசிவம் சிவாச்சாரியார், பெரியநீலாவணை தேவாலய அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன், ஆகியோருடன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்தினம் ஆகியோரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றுத் திங்கட்கிழமை காலை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சைவ, கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பிரதேச மக்களும் ஆதரவு வழங்கி வருவதாக பௌத்த குருமார் கொழும்பில் உள்ள சிங்கள ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடருமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகும்

ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை திட்டமிட்டு நடத்தும் சில பௌத்த பிக்குமார், இலங்கை இராணுவப் புலனாய்வுடன் இணைந்து போர்க்காலத்தில் பணியாற்றியவர்கள் எனவும் ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனவின் உறுப்பினர்கள் எனவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது அவசியமெனில் அது குறித்து தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச வேண்டும். கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசியுள்ளனர்.

ஆனால் இதுவரையும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை. எனினும் சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரரும் மற்றும் சிலரும் அதற்காக இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாதெனவும், அது பௌத்த பேரினவாத அரசியல் நாடகம் என்றும் பிரதேச மக்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர்.

இந்தியாவில் இருந்து வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் ஊடுருவியுள்ள இந்துத்துவா அமைப்பும் இதன் பின்னணியில் செயற்படுகின்றது. பௌத்த- இந்து உறவுப்பாலம் என்று கூறிக் கொண்டு, தமிழ் மக்களுக்குள்ளேயே சமய முரண்பாடுகளை தோற்றுவிப்பதே இந்துத்துவா அமைப்பின் நோக்கம் என்று ஏலவே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

பௌத்த- இந்து என்ற அடிப்படையில் ஒற்றுமை ஒன்றைக் கட்டியெழுப்ப பௌத்த பிக்குமாரும் சில தமிழ் சைவக் குருக்களும் ஒன்றினைந்துள்ளனர். அதற்கு ஆதரவாக தமிழ்க் கிறிஸ்தவ குருமாரையும் இவர்கள் அழைத்துமுள்ளனர்.

ஆனால் இதனைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லையென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடன் தங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றும் போர்க்காலத்தில் சில தவறுகள் நடத்ததாகவும் ஆனாலும் அதனை மறந்து தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி பௌத்த- இந்துசமய உறவை வளர்க்க வேண்டுமென்றும் கூறி பௌத்த பிக்குமார் சிலர் அம்பாறையில் தமிழ்ப் பிரதேசங்களில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகள் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரிக்கப்பட்டு, அங்கு பௌத்த பிக்குமார் விகாரைகளைக் கட்டி வருகின்றனர். புத்தர் சிலைகளை வைக்கின்றனர்.

இவற்றையெல்லாம் எதிர்க்காத பௌத்த பிக்குமார், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்காக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் நகைப்புக்கிடமானதென மக்கள் கூறுகின்றனர்.

மீண்டுமொரு தமிழ் முஸ்லிம் மோதலை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தீவு முழுவதையும் பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதே பௌத்த பேரினவாதிகளின் நோக்கம். அதன் முதல் நடவடிக்கையே இந்த உண்ணாவிரதப் போராட்டமென பிரதேச இளைஞர்கள் கூறுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் செயற்பாடுகள் ஏற்புடையதல்ல. ஆனால் அதனைக் கையாள வேண்டிய வழிமுறைகள் வேறு. அதற்காக பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்து போராடுவது தற்கொலைக்கு ஒப்பானதாகுமென அவதானிகள் கூறுகின்றனர்.