1941 ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள்

மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்கள்

தமிழர் தாயகத்தில் இனப்பரம்பலில் மாற்றம் ஏற்படும் அபாயம்
பதிப்பு: 2018 ஜூன் 20 16:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 02 16:18
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை பிரிக்கும் நோக்கில், இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும். 1949 ஆரம்பிக்கப்பட்ட அல்லைத்திட்டம், 1950 இல் உருவாக்கப்பட்ட கந்தளாய் திட்டம், 1954இல் பதவியாத்திட்டம், முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மொறவேவாத்திட்டம், பெரியவிளாங்குளம் என்ற தமிழ்ப் பிரதேசத்தில் 1979 ஆம் ஆண்டு கொண்டவரப்பட்ட மகாதிவூல்வௌ திட்டம் என்ற சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும், தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில், பிரதேசங்களை தூண்டு துண்டாக உடைக்கும் நோக்கம் கொண்டவை.
 
இவ்வாறான திட்டங்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலிலும் இலங்கை ஒற்யாட்சி அரசினால் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றக் கதிரை மற்றும் அரச சலுகைளுக்கு ஆசைப்படும் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு, நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவனை உருவாக்கி, அந்தத் தலைமையின் வழிகாட்டலில் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான அவசியத்தை தற்போதைய சூழல் ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில், அன்று ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சியில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்கள், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி வரை தொடர்ந்தது.

ஆனால், இன்று மைத்திரி ரணில் ஆட்சியில், சிங்களக் குடியேற்றங்கள் என்பது அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வரவு செலவுத் திட்டத்திலும் கூட அந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், முல்லைத்தீவில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் சில வாரங்களுக்கு முன்னர் சென்று பார்வையிட்டிருந்தனர்.

வவுனியாவில் உள்ள மடுக்கந்தை தமிழ் மக்கள் வாழ்ந்திருந்த பாரம்பரிய பிரதேசம். ஆனால் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆட்சியில் எவ்வாறு சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி, இன்று முற்றுமுழுதான சிங்கள மக்களின் பிரதேசமாக மாறியிருக்கின்றதோ, அதேபோன்றதொரு நிலைமைதான் இன்று கொக்கச்சான்குளம் என்ற தமிழ்க் கிராமத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

கலாபோகஸ்வௌ என்ற சிங்கள குடியேற்ற கிராமமாக கொக்கச்சான்குளம் மாற்றமடைந்துள்ளது. கொக்கச்சான்குளம் என்பது தமிழ் மக்கள் அதிகப்படியாக விவசாயம் செய்து தமது வாழ்வாதாரத்தை கொண்டிருந்த பாரியகுளத்துடன் வயல் நிலங்களை கொண்டமைந்த கிராமமாக அமைந்திருந்தது.

வெடிவைத்தகல் என்ற பழம்பெரும் தமிழ்க் கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த இந்தக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து வவுனியாவில் பல்வேறான இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

பின்னர் மீளக்குடியமரவில்லை. அதற்கான ஏற்பாடுகளும் கொழும்பு அரசாங்கத்தால் செய்யப்படவுமில்லை. இதனால் காடுகளாக மாறிய இக் கிராமத்தில், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காடுகள் அழிக்கப்பட்டு குளங்கள் புனரமைக்கப்பட்டு அம்பாந்தோட்டையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் மூவாயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர்.

இந்தக் கிராமத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கோடு கிராமத்தின் இரு பகுதியிலும் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு வேறு பிரதேசத்தவர்கள் உட்செல்லமுடியாத வகையில் இராணுவ ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தற்போது இந்தக் கிராம் சகல வசதிகளும் கொண்ட கலாபோகஸ்வௌ என்ற சிங்கள கிராமமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இங்கு குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களும் மைத்திரி ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து சிங்கள மக்களின் விகிதாசாரம் வவுனியாலில் அதிகரித்துள்ளன. அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் கொக்குவெளி என்ற தமிழ் கிராமம் கொக்கெலிய என்ற பெயரில் மாற்றப்பட்டு அங்கு 51 இராணுவ குடியிருப்பு தொகுதி அமைக்கப்பட்டுள்ளன.

பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்த இப்பகுதியில் பேயாடிக்கூழாங்குளம் என்ற இடத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு அதற்கு பின்புறமாகவே இக்குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளமை தமிழர் விகிதாசார வீழ்ச்சிகான மற்றுமொரு பதிப்பாகும்.

இந் நிலையிலேயே யாழ் மாவட்டத்திலும் கடந்த ஆட்சிக்காலத்தில் நாவற்குழி பிரதேசத்தில் குடியேறிய சிங்கள மக்கள், தற்போது அங்கு பாரிய பௌத்த விகாரையை அமைத்து அக்கிராமத்திற்கு சிங்கள ராவய என்ற பெயர்ப்பலகைகை ஒன்றையும் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நாட்டியுள்ளனர்.

சம்பந்தன் விரும்பி ஏற்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றத்திற்கு உரமிடும் செய்பாடுகளை நிறுத்தியதாகவோ அல்லது அதனை செயற்படுத்த முனைபவர்களை தடுத்ததாகவே இல்லை.

நாவற்குழி புகையிரத நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2012ஆம் ஆண்டு வந்திறங்கிய சுமார் 12 சிங்கள குடும்பங்கள், தாம் அங்கு வாழ்ந்ததாக கூறி தமக்கு காணி தரவேண்டும் என்று கோரிக்கை லிடுத்தனர்.

அப்போது வீடமைப்பு அமைச்சராக இருந்த விமல் வீரவன்ச அந்த மக்களுக்கு அரசின் உதவியுடன் அப்பகுதியில் இருந்த அரச காணிகளை ஒதுக்கி குடியேற அனுமதித்திருந்தார்.

பின்னர் இந்தக் கிராமத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் 49 கல்வீடுகள் அமைக்கப்பட்டு சிங்கள மக்கள் நிரந்தரமாகவே குடியேற்றப்பட்டுள்ளனர். பூர்வீகமாக இருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிறிதாக இருந்த விகாரை பெரிதாக்கப்பட்டுள்ளது.

தற்போது அருகில் உள்ள காணியில் இராணுவ குடியிருப்பு அமைப்பதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜே.ஆர், சந்தரிக்கா, மஹிந்த, மைத்திரி. ரணில் என்று யார் ஆட்சியமைத்தாலும் இதுதூன் நிலைமை என்பதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே பல பட்டறிவுகள் தமிழர்களுக்கு உண்டு.

இவ்வாறாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தமிழர் பிரதேசத்தில் நடக்கும் திட்டமிட்ட குடியேற்றங்களினால் ஏற்படும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் வீகிதம் குறைவடைவதால் இலங்கை நாடாளுமன்றத்திலும் தமிழ் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பி ஏற்ற இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கில் சிங்கள குடியேற்றத்திற்கு உரமிடும் செய்பாடுகளை நிறுத்தியதாகவோ அல்லது அதனை செயற்படுத்த முனைபவர்களை தடுத்ததாகவே இல்லை.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நியமிக்கப்பட்ட வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான சிங்கள அரசாங்க அதிபர்களைக் கூட மைத்திரி ரணில் அரசாங்கம் மாற்ற விரும்பவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்கள அரச அதிபர்கள் மூலமாக, இக்குடியேற்ற திட்டங்களை தமிழர்கள் தனித்துவமாக வாழ்ந்த பிரதேசங்களுடன் இணைத்தமையினால், தமிழ்ப் பககுதிகளில் உள்ள பல உள்ளூராட்சி சபைகள் கூட சிங்களவர்களின் கைகளுக்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலேதான் அதிகளவு சிங்கள குடியேற்றங்கள் வவனியா உள்ளிட்ட வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிலையில் தற்போது மகாவலி திட்டம் பற்றி பேசப்படுகின்றது. தமிழ் விவசாயிகள் நன்மை பெற முடியும். ஆனால் மகாவலி அபிவிருத்தி திட்டம் தான் நடைமுறைப் படுத்துகின்றதா அல்லது அந்த திட்டத்தின் பெயரில் சிங்கள குடியேற்றங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதா என்பது குறித்து எல்லோரும் அச்சமடைந்துள்ளனர்.

ஏனெனில் கடந்த காலங்களில் எங்கெல்லாம் மகாவலி அபிவிருத்தி திட்டம் வந்ததோ அங்கெல்லாம் சிங்கள குடியேற்றங்கள் வந்தது. அவ்வாறே வன்னிக்கு மகாவலி தண்ணீர் வரவில்லை ஆனால் மகாவலியைக்கூறி சிங்கள குடியேற்றங்கள் வருகின்றன.

இத்திட்ட நீர் வவுனியாவுக்குள் வரும்போது இத்திட்டம் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளிக்க வேண்டும் என ஜப்பானிலிருந்து வந்த குழுவிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறியிருந்தது. எனினும் இந்தக் கோரிக்கை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள்ப்பட்டது என்பது சந்தேகமே.

அங்கு மக்களை குடியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், வன்னியில் பல பிரதேசங்களில், காணிகளற்ற விவசாயக் குடும்பங்களுக்கு இக் காணிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை. கிட்டத்தட்ட ஏழாயிரம் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அத்தனை குடும்பங்களும் இலங்கையின் தென் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களாக உள்ளமையே தமிழர் தாயகப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே நாடாளுமன்றக் கதிரை, மாகாண சபைகள். மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான கதிரைகளுக்கும் அரச சலுகைளுக்கும் ஆசைப்படும் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு, நெல்சன் மண்டேலா போன்ற ஒரு தலைவனை உருவாக்கி, அந்தத் தலைமையின் வழிகாட்டலில் தமிழர்கள் ஒன்றுபடுவதற்கான அவசியத்தை தற்போதைய சூழல் ஏற்படுத்தியுள்ளது.