இந்தோ - பசுபிக் பிராந்தியப் பூகோள அரசியல் போட்டிக்கு மத்தியில்

டில்லிக்கு என்ன சொல்ல வேண்டும்? தீர்மானிக்க வேண்டிய தமிழ்த் தரப்பு

அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்தே இந்தியாவுக்குச் செல்ல வேண்டும்?
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 25 16:07
புதுப்பிப்பு: செப். 05 03:32
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Geopolitics
#Tamil
#National
#Alliance
#India
#US
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளனர். கடந்த மே மாதம் இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திரமோடி சில நாட்களிலேயே இலங்கைக்குப் பயணம் செய்திருந்தார். அப்போது கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்த மோடி புதுடில்லிக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று இந்தியாவுக்குச் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறுகின்றார். ஆனாலும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கையுடன் இந்தியாவுக்குத் தற்போது ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்பாகவே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
 
இந்த நிலையில் புதுடில்லி செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அல்லாமல் தமிழ்த் தரப்பாக ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு செல்லக் கூடிய நிலைமை ஒன்றை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டுமென அவதானிகள் கருதுகின்றனர்.

கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, போன்ற கட்சிகள் இந்தியாவுடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக் கூற வேண்டும். அறிக்கை வெளியிட வேண்டும்

அத்துடன் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் தமது பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்ப இலங்கையில் அரசியல் மாற்றங்களும் அமைய வேண்டுமென இந்திய மத்திய அரசு கூறுவதைக் கேட்பதைவிட, தமிழ்த் தரப்பாக இந்தியாவுக்கு என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்தே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

ஆனால் இவ்வாறான தீர்மானம் எடுப்பதற்கும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் அழைத்துச் செல்வதற்கும் சம்பந்தன் விரும்புவாரா என்பது கேள்விதான். அழைத்து வாருங்கள் என்று இந்தியா சொன்னாலும் தமிழரசுக் கட்சியின் பழமைவாதக் கொள்கை அதற்கு இணங்குமா என்பதும் சந்தேகமே.

1985 ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாகச் சென்று பேசியிருந்தன. எனவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து பத்து ஆண்டுகளின் பி்ன்னரான சூழலிலாவது அவ்வாறான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஒன்றை தற்போதைய பூகோள அரசியல் ஏற்படுத்தியுள்ளது.

இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா அரசியல், பொருளாதார, இராணுவ நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. அமெரிக்காவும் இந்தியாவை நன்கு பயன்படுத்துகின்றது.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரான சூழலில் அமெரிக்காவும் இந்தியாவும் தமது பூகோள அரசியல் தேவைக்காக இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதுடன் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள்ளேயே ஏதாவது ஒரு தீர்வை முன்வைத்து விடலாம் அல்லது அது இலங்கையின் உள்ளகப் பிரச்சினை என்ற நிலைப்பாட்டில் இரு நாடுகளும் செயற்படுவதை 2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான நகர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

வடக்குக் - கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை இலங்கை மீறிவிட்டதாக இன்று வரை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடுகளுமே பேசவில்லை. எனினும் காஷ்மீர் மாநிலத்துக்குரிய சிறப்பு அதிகாரங்களை இந்திய மத்திய அரசு இரத்துச் செய்துள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது

இவ்வாறானதொரு நிலையில் புதுடில்லிக்குச் செல்லவுள்ள தமிழரசுக் கட்சியை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியா சொல்வதையே செவிமடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எனவே கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, போன்ற கட்சிகள் இந்தியாவுடன் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக வெளிப்படையாகவே கருத்துக் கூற வேண்டும் அறிக்கை வெளியிட வேண்டும்.

அத்துடன் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இயக்கமாக தமிழ்ப் பிரதிநிதிகள் குழு ஒன்று புதுடில்லிக்குச் செல்ல வேண்டும் என சிவில் அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சர்வதேச உடன்படிக்கை மூலமே காஷ்மீர் மாநிலத்துக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்குக் - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருந்தமையும் சர்வதேச ஒப்பந்தமே. அதாவது இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது சர்வதேச ஒப்பந்தமாகும். அதன் மூலமே இலங்கைத் தீவில் மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்த மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை இலங்கை மீறிவிட்டது என்று இன்று வரை இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடுகளுமே பேசவில்லை. எனினும் காஷ்மீர் மாநிலத்துக்குரிய சிறப்பு அதிகாரங்களை இந்திய மத்திய அரசு இரத்துச் செய்து்ள்ளமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீர் விகாரம் தொடர்பாகப் பேச வேண்டும் எனவும் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றது.

எனினும் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பாக இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் நின்று கொண்டு தீர்வை முன்வைக்கலாமென்ற கருத்தையே அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கின்றன.

மறுபுறத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்துடன் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரங்களையே தன்னிச்சையாகப் பறித்தெடுத்த இந்தியா, ஈழத் தமிழர்களுக்கு எப்படி இறைமையோடு கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்குமாறு இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

ஆனாலும் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்குள் ஈழத் தமிழர் விவகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய தேவை தற்போது இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்துமா சமுத்திரத்தில் இலங்கைத் தீவை முக்கியத்துவம் வாய்ந்த நாடாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை சிங்கள ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ளனர்.

ஒரு புறம் சீனாவின் பக்கபலத்துடனும் மறுபுறம் அமெரிக்காவின் செல்வாக்கோடும் செயற்பட்டு அந்த இரு நாடுகளின் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையை, குறிப்பாக வடக்குக்- கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை விட்டுக் கொடுத்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையைப் பிரதான சக்தியாக மாற்றுவதே சிங்கள ஆட்சியாளர்களின் தற்போதைய நிலைப்பாடு

குறைந்த பட்சம் தென்னிந்தியாவிற்குள் கூட இலங்கை ஒரு முக்கிய சக்தியாக மாற வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டிருக்கின்றனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலேயே இந்த எண்ணக் கரு உருப்பெற்றிருந்தது.

ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இதற்கு இந்தியாவிடமே தலைமைப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை ஒரு முக்கிய சக்தியாக மாற வேண்டும் என்ற எண்ணக்கருவை சிங்கள ஆட்சியாளர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.

அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை கூட இதன் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்ற நிபந்தனைகளை இலங்கை முன்வைத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. பௌத்த மகாநாயக்கத் தேரர்களும் அதனை அமெரிக்கத் தூதுவரிடம் வலியுறுத்தியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஒரு புறம் சீனாவின் பக்கபலத்துடனும் மறுபுறம் அமெரிக்காவின் செல்வாக்கோடும் செயற்பட்டு அந்த இரு நாடுகளின் பூகோள அரசியல் தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இலங்கையை, குறிப்பாக வடக்குக்- கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதிகளை விட்டுக் கொடுத்து இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையைப் பிரதான சக்தியாக மாற்றுவதே சிங்கள ஆட்சியாளர்களின் தற்போதைய நிலைப்பாடு.

இதன் காரணமாகவே இந்திய மத்திய அரசு இலங்கையோடு பனிப் போர் ஒன்றை நடத்துகின்றது. நரேந்திரமோடி இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உடனடியாகப் பயணம் செய்தமை கூட இலங்கைக்கான எச்சரிக்கையாகவே சிங்கள ஆட்சியாளர்களினால் நோக்கப்பட்டது.

மாலைதீவு எப்படி இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றதோ அதேபோன்று இலங்கையும் இருக்க வேண்டும் என்ற செய்தியையே நரேந்திரமோடி கொழும்புக்கு வந்ததன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கொடுத்திருந்தார்.

இந்திரகாந்தி காலத்தில் இருந்து இந்தியாவை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் புனைகதைகளை நம்பி இந்தியா ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் அவசியமற்ற அச்சமான சூழல் ஒன்றைத் தாமே உருவாக்கிச் செயற்பட்டதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பு எடுத்துக் கூற வேண்டும்

எனவே இந்தப் பனிப்போருக்கு மத்தியில் தமிழ்த்தரப்பு இராஜதந்திரமாகச் செயற்பட்டு ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதன் பின்புலத்திலேதான் அடுத்தவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லிக்குப் பயணிக்கும்போது, அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு செல்லவேண்டுமென அவதானிகள் கருதுகின்றனர்.

இந்திராகாந்தி காலத்தில் இருந்து இந்தியாவை சிங்கள ஆட்சியாளர்கள் எப்படி ஏமாற்றினார்கள் என்பது குறித்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் புனைகதைகளை நம்பி இந்தியா ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலையில் அவசியமற்ற அச்சமான சூழல் ஒன்றைத் தாமே உருவாக்கிச் செயற்பட்டதனால் இன்று ஏற்பட்டுள்ள விளைவுகள் தொடர்பாகவும் தமிழ்த் தரப்பு எடுத்துக் கூற வேண்டும்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் சாதாரண கட்சி அரசியலுக்குள் நின்று மோதுப்படாமல், தோ்தல் அரசியலுக்கான தயார்ப்படுத்தல்களில் மாத்திரம் ஈடுபடாமல் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தின் அனுபவங்கள் ஊடே இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளை எப்படி அணுகுவது என்ற நிலையை தமிழ்த் தரப்பு உருவாக்க வேண்டிய காலகட்டமிது.

இலங்கை அரசியலில் பௌத்த மகாநாயக்க தேரர்கள் செல்வாக்குச் செலுத்துகின்றனர் என்பதை தமது இலங்கை குறித்த அரசியல் அனுபவத்தின் ஊடே அறிந்து கொண்ட அமெரிக்கா, இன்று மகாநாயக்கத் தேர்களையும் சந்தித்து விளக்கமளித்து வருகின்றது.

மகாநாயக்கத் தேரர்களோடும் பேசினால் மாத்திரமே இலங்கைத் தீவில் தமது பூகோள அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது போன்று வடக்குக்- கிழக்கில் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளோடும் பேசி அவர்களின் அரசியல் விடுதலைக்குரிய ஏற்பாடுகளை செய்தால் மாத்திரமே தமது அரசியல் நலன்களை எட்ட முடியும் என்ற அவசியத்தை உணர்த்த வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் இந்தோ- பசுப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலைமை ஒன்று இருந்தது.