இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் தெரிவு

ரணில்- சஜித் இணக்கமில்லை- கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும்!

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் இல்லையெனக் காண்பிக்கவும் முயற்சி
பதிப்பு: 2019 செப். 13 15:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 14 03:42
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதமாச ஆகியோரிடையே சரியான இணக்கம் ஏற்படவில்லையெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சியின் மத்திய குழுவே இறுதி முடிவெடுக்குமென சஜித் பிரேமதாசவிடம் கூறியதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ்க் கட்சிகளை சஜித் பிரேமதாச சந்திக்கவுள்ளார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் இந்தக் கட்சிகளின் ஆதரவு அவசியம் எனவும் அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு முக்கியமானதென்றும் ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது சஜித் பிரேமதாசவிடம் கூறியிருந்தார்.

இதனால் நாளை சனிக்கிழமை சந்திக்கவுள்ள சஜித் பிரேமதாச, தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவைக் கோரவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சஜித் பிரேமதாசவுடன் அதிகாரபூர்வமாக இதுவரை பேச்சு நடத்தவில்லையென தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவாரெனக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரணில் சஜித் இருவரும் சந்தித்தபோது சுமுகமாக பேச்சுக்கள் இடம்பெறவில்லையெனவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முகத்திற்கு முகமாக அவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அலரிமாளிகையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தனது கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் இல்லையென்பதைக் காண்பிக்க கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முற்படுவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேனவும் கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள ஜய் ஹில்டன் ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை முற்பகல் பதினொரு மணிக்குச் சந்தித்து நீண்டநேரம் உரையாடியுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவை அன்று இரவு சந்திப்பதற்கு முன்னதாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. டட்லி சிறிசேனவுடனான சந்திப்பிற்காக இரண்டாம் பிரிவினரும் கலந்துகொண்டதோடு அமைச்சர் சஜித் பிரேமதாச, டட்லி சிறிசேன ஆகிய இருவரும் இந்த இரண்டாம் தரப்பிரிவினருடன் நீண்ட நேரமாகக் கலந்துரையாடலை நடத்தியிருக்கின்றனர். ஆனால் ஆழமாகப் பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை தகவல் கிடைக்கவில்லை.

டட்லி சிறிசேன தற்போது ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வருகின்றார். அதேவேளை, டட்லி சிறிசேனவுக்காக கோட்டாபய ராஜபக்ச விசேட இராப்போசன விருந்தொன்றையும் அவருடைய இல்லத்தில் வழங்கியிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சஜித் பிரேமதாசவையும் சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளமை எதற்காக? எந்த அடிப்படையில்? ஏன்ற கேள்விகள் எழாமலில்லை.