வடக்குக்- கிழக்கு

ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான ஆவணத்தில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கைச்சாத்திட்டன

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியது- திம்புக் கோட்பாட்டின் அடிப்படை தவறியது ஏன்?
பதிப்பு: 2019 ஒக். 14 23:25
புதுப்பிப்பு: ஒக். 15 23:13
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் முயற்சியினால் இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போது எட்டப்பட்ட பொது இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே கூட்டு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை மாலை கையொப்பமிடப்பட்டுள்ளது. இன்று ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட பேச்சுக்களின் முடிவில், இன்று மாலை 6.30க்கு பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஐந்து சுற்றுப் பேச்சுக்களிலும் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் திம்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணத்தைத் தயாரித்திருக்கலமெனவும் திம்புப் பேச்சுக்களின்போது கடைப்பிடித்த முரண்பாட்டில் உடன்பாடு என்ற நிலைப்பாட்டைப் பின் பற்றியிருக்கலாமெனவும் கூர்மை ஆசிரிய பீடம் கருதுகின்றது

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர், நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், ரெலோ இயக்கத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

ஆனாலும் ஐந்து சுற்றுப் பேச்சுக்களிலும் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்த ஆவணத்தில் கையொப்பமிட மறுத்து கலந்துரையாடல்களில் இருந்து வெளியேறியது.

பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணத்தில் இலங்கை அரசாங்கம் தயாரித்த ஒற்றையாட்சிக்குரிய புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால வரைபை நிராகரிப்பதாக ஆவணத்தில் கூறப்பட வேண்டுமெனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்த கருத்தை ஏற்க ஏனைய கட்சிகள் மறுத்துவிட்டன.

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது என்ற குறிப்பையாவது பதிவு செய்தால் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் எனக் கேட்டுக் கொண்டபோதும் ஏனைய ஐந்து கட்சிகளும் இணங்கவில்லையென முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நிராகரித்து தமிழ் மக்களின் இறைமையோடு தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென ஐந்து தமிழ்க் கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் முதல் பந்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே மைத்திரி- ரணில் அரசாங்கம் தயாரித்த ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்புக்கான வரைபை நிராகரிப்பதாக ஏன் குறிப்பிட்டிருக்க முடியாதென்ற வினாக்களும் எழாமில்லை

ஆனால் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால வரைபு கைவிடப்பட்ட விடயம் என்றும் அது பற்றி ஆவணத்தில் கூறப்பட வேண்டிய அவசியம் இல்லையென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளது. எனினும் ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய ஐந்து தமிழ்க் கட்சிகளும் இந்த ஆவணத்தின் அடிப்படையில் கொழும்பில் பிரதான சிங்களக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்களை சந்திப்பதென முடிவெடுத்துள்ளன.

இதேவேளை, ஒற்றையாட்சிக் ஆட்சிக் கட்டமைப்பை நிராகரித்து தமிழ் மக்களின் இறைமையோடு தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்க வேண்டுமென ஐந்து தமிழ்க் கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் கோரிக்கையின் முதல் பந்தியில் கூறப்பட்டுள்ளது. எனவே மைத்திரி- ரணில் அரசாங்கம் தயாரித்த ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் யாப்புக்கான வரைபை நிராகரிப்பதாக ஏன் குறிப்பிட்டிருக்க முடியாதென கூர்மை ஆசிரிய பீடம் கேள்வி எழுப்புகின்றது.

குறைந்த பட்சம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தாக அல்லது அந்த விடயத்தை முன்னணி நிராகரிப்பதாகவேனும் ஆவணத்தில் குறிப்பிட்டிருக்கலாமே என்ற கேள்விகளும் எழாமலில்லை.

பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஐந்து சுற்றுப் பேச்சிலும் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கருத்தை அறிக்கையாகச் சமர்ப்பித்திருந்தன. அந்த அறிக்கைகளையும் குறித்த ஆவணத்துடன் இணைத்து கலந்துரையாடல்களில் பங்குபற்றிய ஒவ்வொரு கட்சிகளின் தனிப்பட்ட நிலைப்பாடு எனக் குறிப்பிட்டு ஆவணத்தின் பின் இணைப்பாகப் பதிவு செய்திருக்கலாம் என்பதையும் கூர்மையின் ஆசிரிய பீடம் சுட்டிக்காட்டுகின்றது.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர்களை உருவாக்குவதில் கொழும்பில் உள்ள இந்திய அமரிக்கத் தூதரகங்கள் தீவிரமாக ஈடுபட்டன என்பது ஏலவே வெளியான செய்திகள். இந்த நிலையில் இந்த ஆவணத்துக்கு அல்லது ஆவணம் தயாரிக்கப்பட்டபோது சர்வதேச உத்தரவாதம் ஏதும் பெறப்பட்டதா? அல்லது குறைந்தபட்சம் அவர்களோடு ஏதும் கலந்துரையாடல் இடம்பெற்றதா என்ற கேள்விகளையும் கூர்மை ஆசிரியபீடம் முன்வைக்கின்றது

இந்தியாவின் ஏற்பாட்டில் 1985 ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுக்களில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் அனைத்து விடுதலை இயக்கங்களும் முரண்பாட்டில் உடன்பாட்டோடு பங்குபற்றி ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான அடிப்படைக் கோட்பாடு ஒன்றை தயாரித்திருந்தன.

எனவே ஐந்து சுற்றுப் பேச்சுக்களிலும் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் திம்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணத்தைத் தயாரித்திருக்கலாமெனவும் திம்புப் பேச்சுக்களின்போது கடைப்பிடித்த முரண்பாட்டில் உடன்பாடு என்ற நிலைப்பாட்டைப் பின்பற்றியிருக்கலாமெனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, தேர்தலில் போட்டியிடவுள்ள சிவாஜிலிங்கம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு அப்பால், அவரை ஒரு குறியீடாகக் கருதி பொது வேட்பாளராக ஏற்று தமிழ்மக்களை அவருக்கு வாக்களிக்கச் செய்திருக்கலாம். அந்த அடிப்படையில் இந்த ஆவணத்தைத் தயாரித்து பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களிடம் கையளித்துமிருக்கலாம் என்ற கருத்துக்களும் எழுகின்றன.

இந்த ஆவணத்தின் இறுதியில் ஈழத் தமிழர் அரசியல் விடுதலை குறித்த தமது கோரிக்கைகளை நிறைவேற்ற மூன்று மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மூன்று மாதங்களி்ல் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையானால் அதன் பின்னர் ஐந்து தமிழ்க் கட்சிகளும் ஒன்று கூடிப் பேசுவார்களா? அது பற்றிய தயாரிப்புகள், திட்டங்கள் இவர்களிடம் இருக்கின்றதா என்ற வினாக்களும் எழுகின்றன.

அத்துடன் இந்த ஆவணம் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டுக் கையொப்பமிடப்பட்டுள்ளது. அது நல்லது. ஆனால் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களிடம் கையளிக்கப்படும்போது தமிழ் மொழியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் ஆங்கில மொழியிலும் பதிவு செய்யப்படுமா? ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த ஆவணத்திலும் ஐந்து தமிழ்க் கட்சிகளும் கையொப்பமிடுவார்களா? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.

கடந்த எழுபது ஆண்டுகளாக அரசியல் விடுதலைக்காகப் போராடி வருகின்ற ஈழத் தமிழா்களின் தலைமைகளோடு சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது எழுத்து மூலமாகச் செய்து கொண்ட உடன்படிக்கைகளையே கிழித்தெறிந்தவர்கள் அல்லது கைவிட்டனர் என்று சொல்லாம். எனவே இவ்வாறானதொரு நிலையில் அதுவும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பத்தாண்டுகள் கடந்தவொரு சூழலில் ஐந்து தமிழ்க் கட்சிகள் கையொப்பமிட்டு வழங்கிய இந்த ஆவணத்தைச் சிங்கள ஆட்சியாளா்கள் கிழித்தெறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்த ஆவணம் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நோக்கமாக் கொண்டமைந்தது என்ற தோற்றப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமலும் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்காக மாத்திரம் தயாரிக்கப்பட்ட ஆவணமாகவும் இல்லாமல், இலங்கை ஒற்றையாட்சி அரசை நோக்கி முன் வைக்கப்பட்ட ஆவணமாகவே ஐந்து தமிழ்க் கட்சிகளும் இதனை வெளிப்படுத்த வேண்டும்

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதி வேட்பாளர்களை உருவாக்குவதில் கொழும்பில் உள்ள இந்திய அமெரிக்கத் தூதரகங்கள் தீவிரமாக ஈடுபட்டன என்பது ஏலவே வெளியான செய்திகள். இந்த நிலையில் இந்த ஆவணத்துக்கு அல்லது ஆவணம் தயாரிக்கப்பட்ட போது சர்வதேச உத்தரவாதம் ஏதுவும் பெறப்பட்டதா? அல்லது குறைந்தபட்சம் அவர்களோடு எதுவும் கலந்துரையாடல் இடம்பெற்றதா என்ற கேள்விகளும் எழாமலில்லை.

எனவே இந்த ஆவணம் ஜனாதிபதித் தேர்தலை மாத்திரம் நோக்கமாக் கொண்டமைந்தது என்ற தோற்றப்பாட்டை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தாமலும் சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்காக மாத்திரம் தயாரிக்கப்பட்ட ஆவணமாகவும் இல்லாமல், இலங்கை ஒற்றையாட்சி அரசை நோக்கி முன் வைக்கப்பட்ட ஆவணமாகவே ஐந்து தமிழ்க் கட்சிகளும் இதனை வெளிப்படுத்த வேண்டும்.

இது ஒரு வரலாற்று ஆவணம் என்றும் ஈழத் தமிழர்கள் பலர் கருதுகின்றனர். அதனையும் கருத்திலெடுத்துச் செயற்படுத்த வேண்டிய அவசர அவசியமும் ஐந்து தமிழக் கட்சிகளுக்கும் உண்டு.