இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதியுடனான

மரியாதைச் சந்திப்பு- பின்னாலுள்ள இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

இலங்கை தமது சொற்கேட்டு நடக்க வேண்டுமென்ற அணுகுமுறையில் மீண்டும் இந்தியா
பதிப்பு: 2019 நவ. 23 08:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 22:04
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் சந்தித்து உரையாடியுள்ளனர். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ், அமெரிக்க தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் மார்ட்டின் கெலீ மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கான தலைவர் என்டனி ரென்சுலி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 
கொழும்பில் உள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா, இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதி தலைவர் டொஷி ஹிரோ கிதமுரா, பிரதிச் செயலாளர் தகேஷி ஒஷகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிடக் கூடாதென்ற நோக்கிலான எச்சரிக்கையாகவே ஈழத் தமிழர் விவகாரத்தை ஆயுதமாக இந்திய மத்திய அரசு கைாயளுகிறது என்ற கருத்துக்களும் இல்லாமில்லை

இந்தச் சந்திப்புகள் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறாகவே இடம்பெற்றதாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இவை புதிய ஜனாதிபதிக்கான மரியாதைக்குரிய சந்திப்புகள் என்று கூறினாலும் இந்த மரியாதைச் சந்திப்புக்களின் பின்னால் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கௌரவச் சந்திப்பு என்ற பெயரில் இந்திய வெளியுறவு அமைச்சர் புதன்கிழமை கொழும்புக்கு வருகை தந்து கோட்டாபய ராஜபக்சவுடன் உரையாடிய நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க, ஜப்பான் தூதுவர்கள் நேற்று மரியாதையின் நிமித்தம் சந்தித்தனர்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக வியாழக்கிழமை பதவியேற்ற நிலையில் அன்று மாலையே கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகள் மரியாதையின் நிமித்தம் சந்தித்திருந்தனர். எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில் அதற்கான ஒப்பந்தம் இன்னமும் கைச்சாத்தாகவில்லை.

பௌத்த குருமாரின் கடும் எதிர்ப்புகளினால் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தபோது அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இந்த நிலையில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க ஆதரவுடன் பதவிக்கு வந்தமையினால், இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடலாமென அமெரிக்கா நம்புவதாகக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு எந்த அடிப்படையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்பது குறித்து ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது

ஆனாலும் வெளிநாடுகளுடன் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட முடியாதென கோட்டாபய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியிருந்தார். பௌத்த மகாநாயக்கத் தேரர்களிடமும் அவ்வாறு உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு எந்த அடிப்படையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்பது குறித்து ஸ்ரீலங்காப் பொதுஜன பெரமுனக் கட்சி அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

ஆகவே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்கு வருகை தந்து இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்த பின்னணியில் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை மேலும் சிக்கவுள்ளது என்பதையும் இந்தச் சந்திப்புகள் கோடிகாட்டுகின்றன.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த விவகாரத்தை எப்படிக் கையாளப் போகின்றார் என்பதைத் தற்போதைக்கு கூற முடியாதென்ற கருத்துக்கள் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றன. இவ்வாறான கருத்துக்களுக்கு மத்தியில் மாற்றுக் கொள்ளை மையத்தின் பணிப்பாளர் பாக்கியஜோதி சரவணமுத்து, ஈழத் தமிழர் அரசியல் பிரச்சினையை கோட்டாபய ராஜபக்ச கையாள வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென கொழும்புக்கு வந்து சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நேரடியாகவே கூறியிருந்தார்.

புதிய ஜனாதிபதிக்கான மரியாதைக்குரிய சந்திப்புகள் என்று கூறினாலும் இந்த மரியாதைச் சந்திப்புக்களின் பின்னால் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை மறுப்பதற்கில்லை

எனினும் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் இலங்கை சீனாவின் பக்கம் சென்றுவிடக் கூடாதென்ற நோக்கிலான எச்சரிக்கையாகவே ஈழத் தமிழர் விவகாரத்தை ஒரு ஆயுதமாக இந்திய மத்திய அரசு கையாளுகிறது என்ற கருத்துக்களும் இல்லாமில்லை.

இலங்கை இந்தியாவின் சொற்கேட்டு நடந்தால் ஈழத் தமிழர் விவகாரத்திற்கான அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களை இந்திய மத்திய அரசு அதுவும் மோடி அரசு அப்படியே கைவிட்டுவிடக் கூடிய ஏது நிலைகளே அதிகமாகவுள்ளன என்ற கருத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றன. அதற்கான பட்டறிவுகளும் உண்டு.

இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் ஈழத் தமிழர்களின் விவகாரத்தை அமெரிக்க. இந்திய அரசுகள் அவ்வப்போது தமது தேவைக்கா மாத்திரமே கையாளுகின்றன என்ற கருத்துக்கள் கூர்மைச் செய்தித் தளத்தில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரைகளில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.