திருகோணமலையில் இடம்பெற்ற கலந்துரையாடல்-

பொதுசன அபிப்பிராயங்களை சிவில் சமூக அமைப்புகள் உருவாக்க வேண்டும்

அரசியல் தீர்வு தொடர்பாக சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளும் எழுகின்றன
பதிப்பு: 2019 டிச. 01 15:50
புலம்: திருகோணமலை ஈழம்
புதுப்பிப்பு: டிச. 03 20:17
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#gotabayarajapaksa
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க்கட்சிகளின் செயற்பாடுகள் பலவீனமடைந்துள்ளதால், சிவில் சமூக அமைப்புகள் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பொதுசன அபிப்பிராயங்கள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் சிதறுண்டு தமது வசதி வாய்புகளுக்கு ஏற்ற முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் கட்டமைப்பை ஏற்றுச் செயற்படுவதால் அரசியல் தீர்வுக்கான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன.
 
இந்த நிலையில் திருகோணமலையில் உள்ள தென்கயிலை ஆதீன குருமுதல்வர், கத்தோலிக்கத் திருச்சபையின் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் ஆகியோரைப் போசகர்களாகக் கொண்ட தமிழ் சமூகச் செயற்பாட்டாளர்கள் இணையம் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாக்குகள் சிதறுப்படாத வகையில் கட்சிகள் ஒரு நிலைப்பாட்டோடு செயற்பட வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அந்த ஒருமித்த நிலைப்பாடு அவசியம் என்று கருத்துருவாக்கிகள் வலியுறுத்துகின்றனர்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கல்வியாளர்கள், கருத்துருவாக்கிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அத்துடன் அரசியல் தீர்வு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் இந்தக் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டன.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக்- கிழக்கு மாகாணங்களில் மக்களின் வாக்குகள் சிதறுப்படாத வகையில் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டோடு செயற்பட வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அந்த ஒருமித்த நிலைப்பாடு அவசியம் என்று கருத்துருவாக்கிகள் வலியுறுத்துகின்றனர்.

அதேவேளை 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை அரசாங்கம் தமிழ்த் தரப்பு என்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறுவதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென தமிழ் நாளேடுகள், செய்தி இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த பத்தி எழுத்துக்களில் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் ஈழத் தமிழ் மக்கள் வாழ முடியும் என்ற கருத்துக்களையும் அதற்கேற்ற முறையில் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும் இது ஆபத்தானதொரு சூழல் என்றும் அரசியல் அவதானிகள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

அரசியல் தீர்வு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் இந்தக் கலந்துரையாடலில் முன் வைக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கம், தமிழ்த் தரப்பு என்ற அடிப்படையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் அவதானிகள் ஏலவே கூறியுள்ளனர்.

வடக்குக்- கிழக்கு மாகாணத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடும் தமிழ்க் கட்சிகள் தமது கட்சி நலன்கள் என்பதைவிட தேச நலன், தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற நோக்கத்தோடு செயற்பட வேண்டுமென்ற சிந்தனைகள் கருத்துருவாக்கிகளினால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.

சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தல் என்ற அடிப்படையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் தேர்தல் கட்சிகள் எனும் நிலையைக் கடந்து சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு தேர்தல் கட்சிகள் எனும் நிலையைக் கடந்து தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற ஒரே நிலைப்பாட்டில் தமிழ்க் கட்சிகளைச் செயற்பட வைப்பதற்கான பொதுசன அபிப்பிராயங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையே தற்போதைய அரசியல் சூழல் கோடிகாட்டுகின்றது.