வடக்குக் -கிழக்கு ஈழத் தமிழர்களின்

இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாக மாற்றப்படுகிறது

சீனாவைக் கட்டிப்போட அமெரிக்காவும் இந்தியாவும் கையாளும் உத்தி கோட்டாபய ராஜபக்சவுக்கு வசதியாகவுள்ளது
பதிப்பு: 2020 ஜன. 15 23:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 17 02:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத் தமிழ் மக்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை வெறுமனே இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், இலங்கையின் ஜனநாயக உரிமைக்கான போராட்டமாகவும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் மாற்றியமைத்து வருகின்றன. கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அதாவது ராஜபக்ச குடும்பம் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இவ்வாறான செயற்பாடுகளில் இந்த நாடுகள் தீவிரமாக ஈடுபடுகின்றன. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இரண்டு வாரங்களில் இந்தியா சென்றிருந்தபோது புதுடில்லியில் வைத்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான பேச்சுக்களைப் பேச வேண்டிய அவசியமேயில்லை என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
 
பூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்குக் இணைப்பு- சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன

தனது ஐந்து வருடகால ஆட்சியில் வடக்குக்- கிழக்குப் பகுதியை அபிவிருத்தி செய்து அதன் மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு முடிவு காணுவேன் என்று கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் வைத்து நம்பிக்கை வெளியிட்டிருந்தார். உறுதியளித்துமிருந்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அமெரிக்கா, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகள, தற்போது கோட்டாபய ராஜபக்சவைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக பல உத்திகளைக் கையாண்டு வருகின்றன. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்களைத் தவிர்ப்பது.

கோட்டாபய ராஜபக்சவும் இந்த இரு நாடுகளும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலை அதாவது இனப்பிர்ச்சினைத் தீர்வுக்கான அழுத்தங்கள் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்பதோடு, ஜெனீவா மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் கைவிடப்பட வேண்டும் அல்லது அது பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோணத்தில் சில நிபந்தனைகளை முன்வைப்பதாகவே கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் தமது பூகோள அரசியல் நலன்சார்ந்து அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளும் தற்போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான பேச்சுக்களைத் தவிர்த்து அதாவது வடக்குக் கிழக்கு இணைப்பு உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை பற்றிய பேச்சுக்களைக் கைவிட்டு இலங்கையின் பொறுப்புக் கூறல் என்ற சொல்லாடல் மூலமாக மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்று பேச ஆரம்பித்துள்ளன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியில் இருந்து அதாவது மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் வருகையின் பின்னரான சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளில் கூட வடக்குக்- கிழக்குத் தமிழ் மக்கள் என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டு இலங்கை மக்கள், இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்ற வாசகங்களையே காண முடிந்தது.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்த எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கம் அமைக்கப்படும் வரை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெலடுத்திருந்தன

ஆனால் அந்த வாசகங்கள், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்த பின்னர் மேலும் மெருகூட்டப்பட்டு மேலதிகமாக இலங்கையின் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் அல்லது ஜனநாயகத்துக்கான முன்னுரிமை என்ற வாசகங்களே அதிகமாகப் பேசப்படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்புக்கு வந்து சென்றிருந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸ், (Alice Wells) ஜப்பான் இராஜாங்க அமைச்சர் கோசோ ஜமோற்றோ (Kozo Yamamoto) ஆகியோர் அவ்வாறுதான் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தனர்.

கொழும்புக்கு வருகை தந்திருந்த சீன வெளியுறவு அமைச்சர் வோங் ஜெய், (Wang Yi) ரஷிய வெளியுறவு அமைச்சர் செறிஹி லவ்றோ (Sergei Lavrov) ஆகியோர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்ற வாசகங்களைக் கூறாமல் இலங்கையின் இறைமை, ஒற்றுமை ஆள்புலம் என்ற வாசகங்களையே முதன்மைப்படுத்திக் கூறியிருந்தனர்.

இனப்பிரச்சினை பற்றிய எந்தவொரு பேச்சுக்களையும் சீன, ரஷிய நாடுகளின் பிரதிநிதிகள் உச்சரிக்கவில்லை. சீன, ரஷிய நாடுகள் ஈழத் தமிழர்களின் போராட்ட விடயங்களில் அன்றில் இருந்து இன்று வரை கருத்துக் கூறியதுமில்லை. மாறாக இலங்கையின் அணுகுமுறையோடு சேர்ந்து அல்லது தமது நலன் சார்ந்து நேரடியாகவே இலங்கையோடு பயணித்திருந்தன. ஆகவே கொழும்புக்கு வந்த இடத்தில் அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றிப் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

ஆனால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முற்றுமுழுதாக ஈழத் தமிழர்களின் நலன்சார்ந்து செயற்படுவது போலக் காண்பித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுடன் கடந்த எழுபது ஆண்டுகள் பயனித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஜெனீவா மனித உரிமைச் சபையில் ஒப்பாசாரத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்த இரு நாடுகளும் கையெடுத்திருந்தன.

அதன் மூலம் இலங்கையில் சீனாவுக்குக் அதிகம் கால் பதிக்க இடமளித்திருந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்தன. அதன் பின்னர் அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்சவை இந்த இரு நாடுகளும் வேறொரு கோணத்தில் அணுகி மீண்டும் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்குக் கொண்டு வந்தன.

கோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்களச் சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன

இந்த நிலையில் தற்போது சீனா என்றொரு நாட்டை இலங்கையில் இருந்து அகற்றும் நோக்கில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான குறிப்பாகக் கோட்டாபய ராஜபக்சவுக்கான ஆதரவுத் தளத்தைக் கொடுத்துக் கொண்டு இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு விவகாரத்தை இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையாகவும் இலங்கையில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கோசத்துடனும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றன.

சில சமயங்களில் கோட்டாபய ராஜபக்ச தாம் நினைத்ததைச் செய்யத் தயங்கினால் அல்லது தவறினால் அமெரிக்காவும் இந்தியாவும் ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளையும் சிங்கள சிவில் சமூக அமைப்புகளையும் தூண்டிவிட்டு இலங்கையில் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம் என்று கூறி அழுத்தத்தைக் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன

வேண்டுமானால் அந்த ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தின் மூலமாக 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கியது போன்று தமக்கு வசதியான ஆட்சி மாற்றம் ஒன்றையும் இந்த நாடுகள் செய்யத் தயங்காது என்ற கருத்துக்களும் எழாமில்லை.