தமிழ்த் தேசிய அரசியல்- தாயக மக்களின் சுயமரியாதை-

ஊடகத்துறையை மலினப்படுத்தும் youtube தளத்தில் இயங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகள்

கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத நிலையில் ஊடக அமைப்புகள்
பதிப்பு: 2020 மே 26 15:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 26 16:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#media
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகத்துறையின் தொழிற்தகுதி (Professional Qualification) மேம்படுத்தும் நோக்கில் சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம் ஆகிய ஊடக அமைப்புகள் பெரும் முயற்சியை எடுத்திருந்தன. குறிப்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் பதிவு இலக்கம் இன்றி எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்துறைப் பட்டம் பெற்றவர்கள் மருத்துவராகப் பணிபுரிய முடியாது. அதேபோன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் பதிவு இலக்கம் இல்லாமல் சட்டத்தரணியாகப் பணியாற்ற முடியாது. பொறியியலாளர்கள், பட்டயக் கணக்காளர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் அந்தந்த சங்கங்கள் மூலமான அங்கீகாரம் இன்றி அந்தத் தொழில் ஈடுபட முடியாது என்றவொரு விதி உண்டு.
 
2006 ஆம் ஆண்டு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சியில் ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையும் நடைமுறைக்கு வரவில்லை

இலங்கை அரசாங்கம் அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே அதுபோன்றதொரு. இலங்கை நாடாளுமன்றதால் அங்கீகரிக்கப்பட்ட ஊடக அமைப்பு ஒன்றின் மூலமான பதிவு இலக்கம் இன்றி ஊடகத்துறைக்குள் யாரும் பணியாற்ற முடியாதென்ற கருத்தை முன்வைத்துக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னரே உரையாட ஆரம்பித்து விட்டோம்.

ஏனெனில் இந்த ஊடக அமைப்புகளின் முயற்சியினால் ஊடகத் தொழிற்தகுதியை மேம்படுத்தும் நோக்கில் 2003 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இதழியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் பத்திரிகைப் பேரவைக்குப் பதிலாக பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் (Press Complaints Commission) ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டும் ஒரே நேரத்தில் டென்மார்க், சுவீடன், நேர்வே அரசுகளின் நிதியுதவியில் தொடங்கப்பட்டன. ஆனால் எதிர்பார்த்தளவு இதழியல் கல்லூரியின் மூலம் பலாபலன்கள் இல்லை. அத்தோடு நிதி நெருக்கடியும் ஏற்பட்டது. இலங்கை அரசாங்கமும் இதழியல் கல்லுரியை ஊக்குவிக்கப் பெரியளவில் விரும்பியிருக்கவில்லை.

தற்போது கூட பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு செயற்படும் நிலையிலும், இலங்கைப் பத்திரிகைப் பேரவையும் அரசாங்கம் செயற்படுத்துகிறது. ஏனெனில் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்.

இவ்வாறான நிலையிலும் ஊடக அமைப்புகள் கடந்த ஜனவரி மாதம் கூட கொழும்பு இதழியல் கல்லுாரியில் நடத்திய சந்திப்பில் இலங்கை மருத்துவர் சங்கம் போன்றதொரு அமைப்பை உருவாக்குவது குறித்துப் பேசியிருந்தன. மூத்த ஊடவியலாளர் லக்ஸ்மன் குணசேகர அந்தக் கருத்தை முன்மொழிந்து வலியுறுத்தியிருந்தார்.

யாழ் பல்கலைக் கழகத்திலும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கொரனப் பிரதேச வளாகத்தில் இயங்கும் இதழியல் பிரிவும் ஊடகத்துறையில் BA தரச் சான்றிதழ் பட்டத்தை வழங்குகின்றன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களைப் புள்ளி அடைப்படையில் இந்த ஊடகப் பட்டப்படிப்புக்குத் தெரிவு செய்கின்றனர்.

ஆனால் இங்கே பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறும் மாணவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே ஊடகத்துறைக்குள் விரும்பி வருகின்றனர். அதாவது செய்தித் துறைக்குள் வருகின்றனர்.

ஏனையோர் அந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி அரச உத்தியோகம் பெறுகின்றனர். அதனைத் தவறு என்றும் கூற முடியாது. ஏனெனில் ஊடகத்துறையில் வேலை வாய்ப்புக்கான கேள்வி மிகவும் அரிது. அப்படி வேலை கிடைத்தாலும் வேதனம் குறைவு, அத்தோடு தொழில் பாதுகாப்பும் நிச்சயமில்லை.

எந்த நேரத்திலும் தூக்கி வெளியே வீசப்படலாம் என்ற அச்ச நிலை. எனவே அவர்கள் அரச உத்தியோகம் அல்லது தனியார் துறையில் வேறு வேலைகளை நாடிச் செல்வதில் தவறென்றும் கூற முடியாது. இப்படியானதொரு நிலையிலும் நாங்கள் தொடர்ந்தும் ஊடகத்துறையின் தொழிற்தகுதியை மேம்படுத்தப் பாடுபட்டுக் கொண்டேயிருக்கிறோம்.

ஏற்கனவே பிரதான இலத்திரனியல் ஊடகம் மற்றும் செய்தி இணையத்தளங்கள் போன்றவற்றுக்கு ஊடக ஒழுக்க விதிகள் எதுவுமே இல்லாத நிலையில், அதற்கென்று தனியான ஊடக ஒழுக்க நெறிகளை உருவாக்க, 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஊடகச் சட்டத்துறைப் பேராசிரியர் ஒருவரை அழைத்துக் கலந்துரையாடியிருந்தோம்

2006 ஆம் ஆண்டு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முயற்சியில் (இந்தச் சங்கம் இலங்கை நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது) ஊடகவியலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அப்போது தொழில் அமைச்சராக இருந்த காமினி லொக்குகே அந்த நகல் சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்ற பின்னர் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்தார்.

அதுவும் பெரும் இழுபறிக்கு மத்தியில். அப்போது நாடாளுமன்றச் செய்தியாளராக இருந்த நானும் ஆர்.பிரியதர்ஷினி, அத்துல விதானகே உள்ளிட்ட சில ஊடகவியலாளர்களும் அமைச்சர் காமினி டொடங்கொடவைச் சந்தித்து அதனை சமர்ப்பிக்குமாறு வற்புறுத்தியிருந்தோம்.

அவ்வாறே சமர்ப்பிக்கப்பட்டுச் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த ஓய்வுதீயச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. ஏதேதோ சாக்குப் போக்குகளைக் கூறி அரசாங்கம் அதனைத் தட்டிக்கழிக்கிறது. முழு நேரப் பணியில் ஈடுபடும் பிராந்தியச் செய்தியாளர்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது அந்தச் சட்டத்தின் உள்ளடக்கம்.

இவ்வாறு கண்டபடி யாரும் ஊடகத் தொழிலில் ஈடுபட்டு ஊடக ஒழுக்க விதிகளையும் ஊடக அறத்தையும் நாசம் செய்வதைத் தடுக்க ஊடகத் தொழிற்தகுதியை உறுதிப்படுத்துவது, ஓய்வூயதித் திட்டத்தைச் செயற்படுத்துவது என்ற இரு வகையான வாஞ்சையோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சமீபகாலமாக youtube தளத்தில் சில தமிழ்த் தொலைக்காட்சிகள் தோன்றி ஊடகத் தொழிலை மலினப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.

ஏற்கனவே பிரதான இலத்திரனியல் ஊடகம் மற்றும் செய்தி இணையத்தளங்கள் (New Media ) போன்றவற்றுக்கு ஊடக ஒழுக்க விதிகள் எதுவுமே இல்லாத நிலையில், அதற்கென்று தனியான ஊடக ஒழுக்க நெறிகளை உருவாக்க, 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஊடகச் சட்டத்துறைப் பேராசிரியர் ஒருவரை அழைத்து வந்து கலந்துரையாடியிருந்தோம். நகல் விதிகளையும் தயாரித்திருந்தோம்.

ஆனால் அந்த முயற்சி கூடக் கைகூடவில்லை. பிரதான இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்று அந்த முயற்சியை விரும்பவில்லை. அரசாங்கமும் பெரியளவில் ஒத்துழைக்கவில்லை. இதனால் அந்த முயற்சி இன்றுவரை முடிவுறாமலேயே தொடருக்கின்றது.

இந்த நிலையில் தற்போது youtube தளத்தில் சில தமிழ்த் தொலைக்காட்சிகள் வந்து ஊடக அறத்தைக் கபளீகரம் செய்கின்றன. மூன்று பிரச்சினைகளை இந்தத் தொலைக்காட்சிகள் உருவாக்குகின்றன. ஒன்று ஏற்கனவே பிரதான ஊடகங்களில் (Mainstream Media) பணியாற்றுகின்ற அனுபவம் மிக்க ஊடகவியலாளர்கள, திறமையானவர்கள் வெளியேற்றிப் புதியவர்களை, அனுபவம் இல்லாதவர்ளை அந்த இடத்தில் குறைந்த கீழுழைப்புக்கு அமர்த்தி வேலை செய்விக்கலாம் என்ற சிந்தனை சில பிரதான ஊடக நிறுவன நிர்வாகிகளிடம் உண்டு.

ஆகவே அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் youtube தளத்தில் இயங்கும் தொலைக் காட்சிகளில் பணியாற்றும் அனுபவமே இல்லாத புதியவர்கள், ஊடக அனுபம் இல்லாதவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. இந்த youtube தளத் தொலைக் காட்சிகள் பிரதான ஊடகங்கள் போன்று ஒருபோதும் நீண்டகாலம் நிலைக்கக் கூடியதுமல்ல. ஆனால் குறிப்பிட்ட அந்தக் காலத்துக்குள் ஊடகத்துறையை குறிப்பாகச் செய்தித் துறையை மலினப்படுத்திவிட்டு ஊடகத்துறையே தொழிலாகக் கொண்டவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டுச் செல்லப்போகின்றன.

விதிகளை உருவாக்க அரசாங்கம் ஊடக அமைப்புகளுக்கு அனுமதியளிக்கவில்லை. அரசாங்கம் உருவாக்கும் விதிகள் ஊடக சுதந்திரத்திற்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் ஆபத்தானது என்பதால், ஊடக அமைப்புகள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. விதிகளை உருவாக்குவது பற்றி ஊடக அமைப்புகளோடு அரசாங்கம் மனம் திறந்து பேசத் தயாராகவுமில்லை

இரண்டாவதாக அரசியல், பொருளாதார. உலக அறிவுகள் எதுவுமேயின்றி அரசியல்வாதிகள், அரசியல் விமர்சகர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் அனுபவம் மற்றும் விபரங்கள் தெரியாத புதியவர்கள் நேர்காணல் செய்கின்றனர். இதனால் தமிழ் அரசியல்வாதிகள் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில் விபரங்களே தெரியாத செய்தியாளர் என்று கூறப்படுகிற ஒருவருக்கு நேர்காணல் வழங்கினால், தான் நினைத்ததைச் சொல்லிவிட்டுப் போகலாம் அல்லது தப்பிவிடலாமென்று இவர்கள் கருதுகின்றனர். (சமீபத்தில் மூத்த அரசியல்வாதி சீ.வி.கே.சிவஞானத்தை youtube தளத் தொலைக்காட்சி ஒன்று நேர்காணல் செய்திருந்ததை அவதானிக்கலாம்)

(முன்பொரு காலத்தில் மூத்தவர்களோடு இணைந்துதான் புதியவர்கள் யாரையும் நேர்காணல் செய்ய முடியும். அனுபவம் இல்லாமல் மூத்த அரசியல்வாதிகளை நேர்காணல்ல் செய்ய பிரதம ஆசிரியர் அனுமதிக்கமாட்டார்)

மூன்றாவதாக, ஈழத் தமிழர்களின் அரசியல் பொருளாதார, பண்பாட்டு வரலாறுகள் அழிவடைந்து, சிதைவடைந்து பேவதற்கும், மறப்பதற்கும், மறைப்பதற்கும் மற்றும் 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சம்பவங்களை மாத்திரமே ஈழத் தமிழர் அரசியல் பிரச்சினைகளாகக் காண்பிக்கும் நிலையும் உருவாகி வருகின்றது.

அத்துடன் வடக்குக் கிழக்குக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள உள்வீட்டுப் பிரச்சினைகள், குடும்பச் சண்டைகள் போன்றவற்றை நிகழ்ச்சிகளாக இந்த youtube தளத் தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன. இதனால் எழுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் என்பது மாறி, இதுதான் தமிழர்களின் பிரச்சினை என்ற முடிவுக்கு எதிர்காலச் சந்ததிகள் வரக்கூடிய ஆபத்தான நிலையும் தோன்றியுள்ளது.

மது போதையில் அல்லது வேறு காரணங்களுக்காக வீதியில் விழுந்து கிடக்கும் ஒருவரைக் கூட நேரலையில் காண்பித்து, ஏதோ உதவி செய்வது போன்று அவரும் அவரது உறவினர்களும் அவமானப்படுத்த்ப்படுகின்றனர். இதுதான் தமிழச் சமூகமா என்று ஏனையோர் ஏளனம் செய்யும் அளவுக்கு இந்த youtube தளத் தொலைக்காட்சிகள் பிழையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன.

ஊடக ஒழுக்கம், ஊடக அறம் குறைந்த பட்சம் youtube தளத் தொலைக்காட்சிகளை நடத்துவோரின் மனச்சாட்சி கூட அங்கே இல்லை. youtube தளத் தொலைக்காட்சிகள், பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களை (Mainstream Media) விடவும் மிக வேகமாக மக்களைச் சென்றடைகின்றன. ஆகவே தரமற்ற காட்சிகள், செய்திகள், தகவல்கள் என்பதற்கும் அப்பால் தவறான முன் உதாரணங்கள், தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய பிழையான விம்பங்கள் உலகத்துக்குப் போய் சேருகின்றன.

ஊடக மொழிப் பயன்பாடுகள் எதுவுமேயில்லை. அவ்வப்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றும் மொழி உச்சரிக்கப்பட்டு சாதாரணமாகப் பேசப்படுகிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி எது, அரசியல் சமூக நிகழ்சிகள் எது என்ற வித்தியாசங்களும் இல்லை.

குறிப்பட்டுக் கூறக் கூடிய ஒரு சில youtube தளத் தொலைக்காட்சிகள் சமூக விடங்களைப் பொறுப்புடன் செய்கின்றன. டென்மார்க்கில் இருந்து செயற்படும் youtube தளம் ஒன்று சமகால உலக அரசியல், பொருளாதார ஒழுங்குகள் பற்றி ஆழமான விமர்சனங்களை முன்வைத்து வருவதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

சில பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கூட சமகாலத்தில் பல குழறுபடிகள் உண்டு. ஆனாலும் அங்கு பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்களுக்குச் சில அழுத்தங்கள், நிர்வாகத்தின் அரசியல் தேவைகள் என்று சில நிபந்தனைகள், கட்டளைகள் இருக்கின்றன. அவற்றைத் தவிர்க்கவும் முடியாது-

ஆனால் பிரதான விடயங்களில் இருந்து அங்கு பணியாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தவறுவதில்லை. உலகத்தில் உள்ள அனைத்துப் பிரதான ஊடகங்க நிறுவனங்களிலும் இந்தப் பிரச்சினைகள் உண்டு. ஆனாலும் ஊடக அமைப்புகள் அல்லது மூத்த ஊடகவியலாளர் ஒருவரினால் கூட அந்தப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முடியும். ஆனால் புதிதாக முளைத்துள்ள இந்த youtube தளத் தொலைக்காட்சிகளில் பணியாற்றுவோருக்கு யாரால்தான் அறிவுரை கூற முடியும்?

முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டம், அதனையடுத்து மேலும் முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டம் என்று ஏறத்தாழ எழுபது ஆண்டுகளைக் கடந்த அரசியல் போராட்டம் இது. ஆகவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், எப்படியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதோடு, இன்றைய உல அரசியல், பொருளாதாரத் திட்டங்களின் போக்கு என்ன என்பது தொடர்பாகப் பிரதான அச்சு ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் தமது ஆசிரியர் தலையங்கங்களில் சுட்டிக்காட்டுகிறார்களா இல்லையா என்பதை இங்கு நான் கேள்விக்குட்படுத்தவில்லை.

ஆனால் உரிய தமிழ்த் தலைமை அற்றவொரு அரசியல் சூழலில், அந்த வரலாற்றுக் கடமை பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கே உண்டு. குறிப்பாக பூகோள அரசியல் சூழலுக்கு ஏற்ப தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகள் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து எழுத வேண்டிய பொறுப்பு பிரதான அச்சு ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களுக்கே உண்டு.

இப்படியானதொரு நிலையில், புதிய தகவல் தொழில் நுட்பத்தின் ஊடான youtube தளத் தொலைக்காட்சிகள், வீதியில் விழுந்து கிடப்பவனையும் குடும்பச் சண்டைகளையும் நேரலைகளில் காண்பித்து, இதுதான் தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினையென்று சித்தரிக்கும்போது, நிச்சயம் இலங்கை அரசாங்கம் இந்த youtube தளத் தொலைக்காட்சிகளை வரவேற்கும். இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்களோடு நேர்த்து சமீபகாலமாக செய்தி இணையத் தளங்களும் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் youtube தளத் தொலைக்காட்சிகள் பதிவு செய்யப்படுவதில்லை. அதற்கான ஏற்பாடுகளும் அங்கு இல்லை.

ஊடக மொழிப் பயன்பாடுகள் எதுவுமேயில்லை. அவ்வப்போது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றும் மொழி உச்சரிக்கப்பட்டு சாதாரணமாகப் பேசப்படுகிறது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி எது, அரசியல் சமூக நிகழ்சிகள் எது என்ற வித்தியாசங்களும் இல்லை

செய்தி இணையத் தளங்கள் (New Media) பதிவு செய்யப்படுன்றன என்பதற்காக சில இணையத் தளங்கள் ஊடக அறத்தைச் சரியாகப் பேணுகினறது என்றும் கூறுவதற்கில்லை.

எவ்வாறாயினும் ஈழத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரக் கருத்துருவாக்கங்களைத் தடுக்கும் நோக்கில், இலங்கை அரசாங்கம் ஊடகத்துறையை மலினப்படுத்தி வரும் youtube தளத் தமிழ்த் தொலைக்காட்சிகளை பதிவு செய்து ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான வாய்புகள் அதிகமாகவேயுள்ளன.

ஆனால் சில சிங்கள youtube தளத் தொலைக்காட்சிகள் பிரதான சிங்கள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைவிட, பௌத்த தேசியவாதக் கண்ணோட்டத்தில் நிழக்ச்சிகளைத் திட்டமிட்டுத் தாயரிக்கின்றன. ஜனாதிபதி சடத்தரணி எம்.ஏ.சுமந்திரனைச் சமீபத்தில் நேர்காணல் செய்தது சிங்கள youtube தளத் தொலைக்காட்சி ஒன்றுதான். பிரதான சிங்கள இலத்திரனில் ஊடகம் அல்ல.

இலங்கை அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் ஊடக அறம் தவறிச் செயற்படும் youtube தளத் தொலைக்காட்சிகளையும் செய்தி இணையத் தளங்களையும் கட்டுப்படுத்தவே முடியாது என்பதுதான் ஊடக அமைப்புகளின் நிலைப்பாடு.

இயல்பான முறையில் விதிகளை உருவாக்க அரசாங்கம் ஊடக அமைப்புகளுக்கு அனுமதியளிக்கவில்லை. அரசாங்கம் உருவாக்கும் விதிகள் ஊடக சுதந்திரத்திற்கும் ஊடக ஜனநாயகத்துக்கும் ஆபத்தானது என்பதால், ஊடக அமைப்புகள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை. விதிகளை உருவாக்குவது பற்றி ஊடக அமைப்புகளோடு அரசாங்கம் மனம் திறந்து பேசத் தயாராகவுமில்லை.

அதாவது பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களே இதற்குக் காரணம். இந்த நிலைதான் youtube தளத் தொலைக்காட்சிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது போலும்.