இலங்கை ஒற்றையாட்சி அரசின்

மூன்றாவது யாப்பை உருவாக்கப்போகும் ராஜபக்ச ஆட்சி

பௌத்த தேசியக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவே, ஒரே நாடு ஒரு சட்டம் என்ற கோசம்
பதிப்பு: 2020 ஓகஸ்ட் 27 14:43
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 17:42
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஒரேநாடு ஒரு சட்டம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற முதல் அமர்வில் நிகழ்த்திய அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையில் கூறியுள்ளமை ஆச்சரியப்படக் கூடியதல்ல. ஏனெனில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக மாறியபோதே இலங்கை ஒற்றையாட்சி அரசு (Unitary State) நிறுவப்பட்டுள்ளது. 1972ஆம் உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசு ஆகிய பின்னர் முதன் முதலாக உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு ஒரே நாடு ஒரு சட்டம் என்பதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பிரகடனப்படுத்தியது.
 
பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது வருடப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் அச்சத்தை ஏற்படுத்துமென்றில்லை. ஆனால் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்?

சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் முன்னணி அரசாங்கம் கொண்டுவந்த முதலாம் குடியரசு அரசியல் யாப்பின் அரச கொள்கைத் தத்துவம் பௌத்த சமயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

பிரித்தானியரால் 1947இல் அமுல்படுத்தப்படட சோல்பரி அரசியல் யாப்பில் சிறுபான்மையோர் பாதுகாப்புக்காகப் பிரத்தியேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த 29ஆவது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் முதலாம் குடியரசு அரசியல் யாப்பை சிறிமாவோ பண்டாரநாயக்கா உருவாக்கியிருந்தார்.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஐந்தில் ஆறு பெரும்பான்மைப் பலம் பெற்று 1978ஆம் புதிய அரசியல் யாப்பை உருவாக்கியது. அதுவே இலங்கையில் எழுதப்பட்ட நெகிழும் தன்மையுடை அரசியல் யாப்பு நடைமுறையில் இருப்பதால் காலத்திற்குக் காலம் ஆட்சியமைக்கும் கட்சிகள் தங்கள் பெரும்பான்மைப் பலத்தை வைத்துக் கொண்டு அரசியல் யாப்பு மாற்றங்களை அல்லது யாப்புத் திருத்தங்களை செய்வது வழமை அதுதூன் 1972-78ஆம் ஆண்டுகளில்; நடந்தது.

ஆனால் அன்று தொகுதிவாரித் தேர்தல் நடைமுறையில் இருந்ததால் மிகவும் இலகுவாக ஐந்தில் ஆறு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்ற ஜே.ஆர், 1978இல் இலங்கைக் குசுடியரசுக்கான இரண்டாவது அரசியல் யாப்பை உருவாக்கிப் பிரதமர் ஆட்சி முறையை மாற்றி நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்தார். அத்துடன் தொகுதிவாரித் தேர்தல் முறையையும் மாற்றி. விகிதாசாரத் தேர்தல் முறையை அறிமுகம் செய்தார். அந்த யாப்புத்தான் இன்றுவரை 19 திருத்தங்களோடு நடைமுறையில் உள்ளது.

மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் 2016ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அமுல்படுத்தப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்தை மீளவும் ஆட்சியமைக்க முடியாதவாறு கொண்டுவரப்பட்டதெனக் குற்றம் சுமததினாலும், அரச நிறுவனங்களைச் சுயாதீனமாக இயங்கக் கூடிய பல சரத்துகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்டுச் சொல்வதானால், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் சம்மதத்துடன் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் 2001ஆம் செப்ரெம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 17ஆவது திருத்தச் சட்டததின் உள்ளடக்கமே இந்த 19ஆவது திருத்தச் சட்டம்.

தேர்தல், பொலிஸ, பகிரங்க சேவை உள்ளிட்ட அரச திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றைச் சுயாதீனமாகச் செயற்பட வைக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட 17ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபையை உருவாக்குவதில் 13ஆண்டுகள் இழுபறி ஏற்பட்டது. பிரதான இருகட்சிகளும் அந்த விடயத்தில் விட்டுக்கொடுக்காமல் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டன.

அதனால் 2014ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அமுல்படுத்தப்படாமல் இருந்த 17ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து, 18ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் பெரும்பான்மையோடு நிறைவேற்றினார். இதன் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களையும் அமைப்பதற்குரிய நாடாளுமன்றச் சபையும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சினை என்னவென்னால். ஒருவர் எத்தனை தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற புதிய சட்டம் ஒன்று அமுலுக்கு வந்தது.

1972இல் சிறிமாவோ உருவாக்கிய முதலாவது யாப்பு, 1978இல் ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய இரண்டாவது அரசியல் யாப்பு, 2020இல் அல்லது 2021இல் ராஜபக்சக்கள் உருவாக்கிய முன்றாவது யாப்பு என்று இலங்கைக் குடியரசின் அரசியல் வரலாற்றில் பதியப்படும்

அத்துடன் இலங்கைத் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதனால் வடக்குக் கிழக்கு மாகாண சபைக்கென்று இருந்த மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் செயலிந்தது. இரு தடவைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாதென 36ஆண்டுகள் நடைமுறையில் இருந்த விதிமுறை 18ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றியமை;க்கப்பட்டதால், மகிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்டார். ஆனாலும் அந்தநேரம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்குள் தப்பிப் பிழைக்க முடியாத நிலையில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார்.

இதனால் ஜனாதிபதியாக மைத்திபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றனர். பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆசிய இரண்டு கட்சிகளும் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்திருந்தன. இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றிருந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் 18ஆவது திருத்தச் சட்;டத்தை மாற்றி 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது. இதன்படி ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாதென்றும், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியாதென்றும் 19ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை 35இருந்து 40ஆகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அரச திணைக்களங்கள் சுயாதீனமாக செயற்படுவதற்குரிய அரசியலமைப்புச் சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கணிசமான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் பாரப்படுத்தப்பட்டன. இங்கே ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென்பதும், இரட்டைப் பிரஜாவுரிமையுள்ளவர்கள் இலங்கை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாதென்பதும் ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்கும் விதப்புரைகள் என்றே குற்றம் சுமத்தப்பட்டது. இதனாலேயே கோட்டாபய ராஜபக்ச 19ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியமைத்து 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவுள்ளார் என்பது வெளிப்படை.

இந்த இடத்திலேதான் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகத்தை கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். இதற்கான காரணத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று- கொழும்பு- கண்டிப் பிரதேசங்களை மையப்படுத்திய சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பம் உருவாக்கிய முதலாவது குடியரசு அரசியல் யாப்பு. கொழும்பை மையமாகக் கொண்ட ஜே.ஆர், ரணில் பரம்பரை உருவாக்கிய இலங்கைக்கு குடியரசுக்கான இரண்டாவது அரசியல் யாப்பு ஆகியவற்றைப் போன்று அம்பாந்தோட்டையை மையப்படுத்திய ராஜபக்ச குடும்பமும் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க வேண்டுமெனக் கருதியமை. அப்படி உருவாக்கப்ட்டால் அதுவே இலங்கைக் குடியரசுக்கான மூன்றாவது அரசியல் யாப்பாகவும் அமையும்.

ஆகவே 1972இல் சிறிமாவோ உருவாக்கிய முதலாவது யாப்பு, 1978இல் ஜே.ஆர் ஜயவர்த்தன உருவாக்கிய இரண்டாவது அரசியல் யாப்பு, 2020இல் அல்லது 2021இல் ராஜபக்சக்கள் உருவாக்கிய முன்றாவது யாப்பு என்று இலங்கைக் குடியரசின் அரசியல் வரலாற்றில் பதியப்படும்.

இந்த நோக்கிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி 2016ஆம் ஆண்டு பசில் ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டதெனலாம். மைத்திரிபால சிறிசேனவைப் பிரித்தெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைத்து, 2015இல் நல்லாட்சி என்ற அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிவே காரணியாக இருந்தாரென ராஜபக்ச குடும்பத்துக்கு ஏற்பட்ட அசைக்க முடியாத சந்தேகமே புதிய கட்சியின் உருவாக்கத்துக்குக் காரணமாக இருந்தது.

இரண்டாவது- ஒரேநாடு ஒரு சட்டம் ஒன்று கூறுவதன் மூலம் பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசாங்கமே யாப்பின் மூலமாக உறுதிப்படுத்தியது என்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவது. ஆகவே இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே ராஜபக்சக்களின் ஆட்சி நகர்ந்து செல்கிறது என்பதை அறியக் கூயடிதாகவுள்ளது.

சிங்கள ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும் தங்களுடைய ஊர் பிரதேசம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தோடும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை ஒற்றையாட்சி முறைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது என்ற எண்ணக் கருவை அடிப்படையாகக் கொண்டும் அரச கொள்கைத் தத்துவத்தை வடிமைக்கின்றனர். ராஜபக்ச அரசாங்கம் அதனை வெளிப்படையாகவே செய்கின்றது என்பதையே இந்த ஒரே நாடு ஒரு சட்டம் என்ற வாசகம் எடுத்தியம்புகின்றது.

ஆனால் இது ஈழத் தமிழர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியதல்ல. ஏனெனில், பண்டாரநாயக்காவின் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவுகளையும் முப்பது ஆண்டுகாலப் போரையும் இறுதியாக 2009இல் முள்ளிவாய்க்கால் அவலங்களையும் எதிர்கொண்ட தமிழ் மக்களுக்குக் கோட்டாபயவின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் பெரியதொரு அச்சத்தை ஏற்படுத்துமென்று கூறமுடியாது.

ஆனாலும் இந்த விவகாரத்தை வடக்குக் கிழக்கு, மலையகத் தமிழ் மற்றும் முஸ்;லிம் பிரதிநிதிகள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதுதான் இங்கே கேள்வி. புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின்போது எதிர்ப்பு வெளியிட்டு உரையாற்றிவிட்டு வழமைபோன்று அமைதியாகிவிடுவார்களா? அல்லது மக்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுப்பார்களா என்பது குறித்தே மக்களிடத்தில் கேள்விகள் எழுகின்றன.

சிங்கள ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சியமைத்தாலும் தங்களுடைய ஊர் பிரதேசம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தோடும், இலங்கை அரசு என்ற கட்டமைப்பை ஒற்றையாட்சி முறைக்குள் தொடர்ந்து வைத்திருப்பது என்ற எண்ணக் கருவை அடிப்படையாகக் கொண்டும் அரச கொள்கைத் தத்துவத்தை வடிமைக்கின்றனர்

முப்பது ஆண்டுகால அகிம்சைப் போராட்டம் மேலும் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமென ஏறத்தாள எழுபது ஆண்டுக்கும் மேலான அரசியல் போராட்டங்கள் நடத்தியும் அதற்குச் செவிசாயக்காத சிங்கள ஆட்சியாளர்கள், தொடர்ந்தும் வௌ;வேறு வடிவங்களில் சிங்கள பௌத்த தேசியத்தைச் செழிப்படையச் செய்யும் காரியங்களையே முன்னெடுத்து வருகின்றனர். அதன் மற்றுமொரு வடிவமே ஒரு நாடு ஒரு சட்டம். ஆகவே அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் மக்களுக்குப் பழகிப்போனதாக இருந்தாலும், சிங்களம் அல்லாத ஏனைய தேசிய இனங்களில் இருப்புக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செயன்முறைகள் வளர்ச்சியடைகின்றன.

இவற்றைத் தடுக்கக் கூடிய பொறுமுறை தமிழ் பிரதிநிதிகளிடம் இல்லை என்பதையே கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காண்பிக்கின்றன. ஆயுதப் போராட்டத்தின் விளைவுகளினால் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின்மூலம் சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட ரத்துச் செய்ய வேண்டுமென அரசதரப்பு எதிர்த்தரப்புச் சிங்கள உறுப்பினர்கள் பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியலில் அதிக அக்கறை கொண்டுள்ள அல்லது ராஜபக்ச அரசாங்கத்தின் மீள் எழுச்சியினால் சந்தேகம் கொண்டுள்ள இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒருமித்த ஏற்பாடுகளில் தமிழ்ப் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும்.

2010ஆம் ஆண்டு சரத்பொன்சேகாவையும் 2015இல் மைத்திரிபால சிறிசேனவையும் ஜனாதபதித் தேர்தலில் ஆதரித்தும் 2015இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் முற்றுமுழதாகப் பங்கெடுத்தும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் வாழ முடியும் என்ற செய்தியை பிரதான தமிழக் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கு அல்லது அதிகாரப் பங்கீட்டுக்குச் சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டுமென எந்த முகத்தோடு கோர முடியுமென்ற கேள்விகளும் எழாமலில்லை.

ராஜபக்ச அரசாங்கத்தின் ஒரேநாடு ஒரு சட்டம் என்ற வாசகம் நிர்வாக மட்டத்திலேனும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு இடம் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இல்லை. 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் குறைந்த பட்சம் அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்போது விகிதாசார முறை பபின்பற்றப்பட்டு வந்து உதாரணமாக அரச நிறுவனம் ஒன்றில் 60பேரை வேலைக்கு எடுக்க வேண்டுமானால், அதில் 40பேர் சிங்களவர்களாகவும் ஏனைய 20பேர் தமிழர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இந்தக் விகிதாசார முறை கைவிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இன்று பதினொரு ஆண்டுகளிலும்கூட அரச நிறுவனங்களுக்கு ஆட் சேர்க்கும்போது விகிதாசார முறை கையாளப்படவில்லை. அமைச்சுக்களுக்கான செயலாளர்கள்கூட தமிழர்கள், முஸ்லிம்கள் ஒருவர்கூட நியமிக்கப்படவுமில்லை. இவ்வாறான சூழலில் ஒரேநாடு ஒரு சட்டம் என்பது தனித்த சிங்கள ஆட்சியை மேலும் தூய்மைப்படுத்தும் வாசகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

தற்போதைக்குத தமிழர்களும் அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலமையிலும் இல்லை. அன்று பண்டாரநாயக்க அமுல்படுத்திய தனிச் சிங்களச் சட்டம் பின்னர் ஏதோவொரு காரணங்களின் அடிப்படையில் கைவிடப்பட்டு அரச கரும மொழியாகத் தமிழ் மொழிக்கும் யாப்பில் அந்தஸ்த்து வழங்கப்பட்டிருந்து.

ஆனால் ராஜபக்சக்களின் மீள் எழுச்சியின் பின்னரான சூழல், இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்ற கருத்தியலைப் புரட்டிப் போடும் என்று யாரும் கூறினால் அதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை.