2009 ஆம் ஆண்டுக்குப் பி்ன்னரான சூழலில் இன அழிப்பின் மற்றுமொரு வடிவமா?

அமெரிக்காவின் எண்ணெய் வயல் ஆய்வு- அம்பாறைக் கடலில் கப்பல் தீப்பற்றியது எப்படி?

பொறுப்புச் சொல்ல வேண்டியது அமெரிக்காவோ சீனாவோ அல்ல- இலங்கை அரசாங்கமே
பதிப்பு: 2020 செப். 05 08:06
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 08 14:45
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கிழக்கு மாகாணம் திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள், 2018ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமன்ட் (Mt New Diamond) என்ற கப்பல் எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்ற கேள்விகள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் இந்த ஆய்வைச் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் ஒடிசா துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்த மெற் நியு டைமன்ட் என்ற கப்பல் தீப்பற்றியிருக்கிறது.
 
ராஜபக்சக்களின் அரசாங்கத்துக்கு எதிரான அல்லது அந்த அரசாங்கத்தை தம்வசப்படுத்தச் செய்யப்பட்ட சதி நடவடிக்கையாக இருந்தாலும் பாதிப்பு கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களுக்கே. இது தமிழ்பேசும் மக்களின் கடற் பிரதேசம் தானே என்ற இன அழிப்புச் சிந்தனையோடு இலங்கை அரசாங்கம் செயற்பட்டிருந்தாலும் பாதிப்பு தமிழ் பேசும் மக்களுக்கே. எதுவானாலும் பொறுப்புக் கூற வேண்டியது இலங்கை அரசாங்கமே

அதுவும் கிழக்கு அம்பாறை சங்கமன் கண்டி கடற்பரப்பில் இருந்து 38 கடல்மைல் தொலைவில் குறித்த கப்பலில் தீ பரவியிருக்கின்றது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளம் குறித்து ஆராய்வதற்காக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சுலும்பேக்கர் (Schlumberger) என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஈஸ்ரேன் எக்கோ நிறுவனமே (Eastern Echo DMCC) இந்த ஆய்வைச் செய்து வருகின்றது.

இதற்கான ஒப்பந்தத்தை அப்போது பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராக இருந்த அர்ச்சுனா ரணதுங்க 2018ஆம் ஆண்டு மேமாதம் 30ஆம் திகதி குறித்த நிறுவனத்துடன் கைச்சாத்திட்டிருந்தார். இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்துள்ள JS5 மற்றும் JS6 ஆகிய வலயங்களில் ஐயாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பயணம் செய்து, கடலடியில் உள்ள நில அதிர்வு அலைகள் ஆராயப்பட்டு வருகின்றன்.

இவ்வாறானதொரு நிலையில் குவைத் மீனா அல் அஹமதியா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் ஒடிசா பிராந்தியத்தின் பெரடிப் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பனாமா அரசுக்குச் சொந்தமான மெற் நியு டயமனட் என்ற எண்ணெய் கப்பல் ஏன் இலங்கையின் அம்பாறைக் கடலில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் பயனித்தது என்பது குறித்து இலங்கைக் கடற்படை எதுவுமே கூறவில்லை. குறித்தக் கப்பலில் 270,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் ஒடிசா பிராந்தியத்தின் பெரடிப் துறைமுகத்திற்குப் பயணிக்கும் பணமா அரசுக்குச் சொந்தமான கப்பல்கள் அம்பாறைக் கடற்பரப்பின் ஊடாகப் பயணிப்பதில்லை என்றே இலங்கைக் கடற்படைத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இந்தக் கடற்பரப்பின் ஊடாகக் குறித்த கப்பல் ஏன் பயனித்தது என்றவொரு விசாரணையைக்கூட இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் ஆரம்பிப்பதற்குரிய அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை.

ஆனால் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த கப்பல் தீ பற்றியமை தொடர்பாக இந்திய மத்திய அரசு இதுவரையும் எந்தவொரு தகவலையும் கூறவில்லை. ஆனால் தீயை அணைப்பதற்கு உதவி புரிந்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ன. கிழக்குக் கடலில் எண்ணெய் வயல் ஆய்வை Eastern Echo DMCC என்ற நிறுவனத்தின் மூலமாக அமெரிக்கா ஆரம்பித்ததால் இராணுவ ரீதியான கடற்படை உறவையும் அமெரிக்கா, இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பலப்படுத்தியிருக்கிறதென்பதையும் ஏலவே இந்தப் பத்தியில் கூறியிருந்தேன்.

அர்ச்சுனா ரணதுங்க அமைச்சராக இருந்தபோது இலங்கையின் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் அது பற்றி அப்போது கூறியிருந்தார். கிழக்குக் கடல் பிரதேசம் மாத்திரமல்ல ஏனயை கடற் பிரதேசங்களிலும் இந்த ஆய்வு இடம்பெறும் என்று இலங்கை அரசு அப்போது கூறியிருந்தது. ஆனால் இந்தத் திட்டம் முல்லைத்தீவில் இருந்து மட்டக்களப்பு வரை திருமலையை மையப்படுத்திய கிழக்குக் கடல் முழுவதையும் தனது இலக்காகக் கொண்டுள்ளதையே கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற ஆய்வுகளின் மூலம் அறிய முடிகின்றது.

சுலும் பேக்கர் (Schlumberger என்ற பாரிய எண்ணெய் வயல் சேவை நிறுவனம், தரவுகளைத்திரட்டி, அவற்றைப் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவுள்ளது. அதற்காக இரு பரிமான மற்றும் முப்பரிமான தரவுகளை அது திரட்டி வரும் சூழலிலேதான் இந்தியாவுக்குச் சென்ற நியு டயமன்ட் கப்பலில் தீப் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆய்வுக்கு (Eastern Echo DMCC) நிறுவனம் ஐம்பது மில்லியன் டொலரை முதலீடு செய்திருக்கிறது. பல்வேறு முதலீட்டாளர்களுக்குத் தரவுகளை விற்பனை செய்து அந்தப் பணத்தை மீளப் பெறலாமெனவும் குறித்த நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த விற்பனை நடவடிக்கைகள் இலங்கை அரசுடன் 2018ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது. 2016 ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வயல் ஆய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியாக, ரோற்றல் (Total) என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றைச் செய்திருந்தது. ஆனாலும் பல்வேறு வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் மற்றும் இலங்கை அரசு ஆய்வு முடிவடைந்த பின்னர் வேறு நாடுகளிடம் கையளிக்கலாம் என்றவொரு அச்சத்தின் காரணமாக அந்த உடன்படிக்கையைப் பிரான்ஸ் கைவிட்டது.

இந்த நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமான Eastern Echo DMCC என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் மத்திய கிழக்கில் டுபாயில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பிக் பைனொர் (BGP Pioneer) என்ற ஆய்வுக் கப்பல் சீன அரசின் உடமையாகவுள்ள வியாபார நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமானது. கடல் பிரதேசங்களில் எண்ணெய் வளம் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்வதற்கான நவீன வசதிகள் இந்தக் கப்பலில் உள்ளன. இதனால், இந்தக் கப்பலை மத்திய கிழக்கில் இருந்து தென் அமெரிக்கா வரை, அமெரிக்கா வாடகைக்கு அமர்த்துவது வழமை. அந்த அடிப்படையில் டுபாய் நிறுவனம் தான் இந்தக் கப்பலை வாடகைக்கு எடுத்துள்ளது.

வல்லரசு நாடுகளின் உதவியோடு 2009ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் வல்லரசு நாடுகளைக் கொண்டே வடக்குக் கிழக்குக் கடற்பிரதேசங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன, சிதைக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தெந்த வழிகளில் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் புரிந்துகொள்வதாக இல்லையே

இலங்கைக் கிழக்குக் கரை உள்ளிட்ட கடற்பகுதிகளில் எண்ணெய் வயல் ஆய்வு முடிவடைந்த பின்னர் இந்த நிறுவனம் இலங்கை அரசுக்கு அதனை கையளிக்கும். ஆனாலும் இலங்கை அரசு இதனை வேறு நாடுகளுக்கு வழங்கும் என்ற சந்தேகம் உள்ளதால் அவ்வாறு விற்பனை செய்ய முடியாதவாறு அமெரிக்கா காய்களை நகர்த்தி வருவதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

குறிப்பாகத் திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கக் கப்பல் வந்து இலங்கைக் கடற்படையினருக்கு பயிற்சி மற்றும் கூட்டு ஒத்துழைப்புகள் மூலம், எண்ணெய் வளங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய முடியாதவாறான அணுகுமுறைகளை அமெரிக்கா 2018ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பித்திருந்தது. அத்துடன் ஜப்பான் கடற்படையின் ஒத்துழைப்புகள் மூலமாகவும் இலங்கைக்கு அமெரிக்கா கடிவாளமிட்டிருந்தது.

இந்த ஆய்வு நிறைவடைந்த பின்னர் வேண்டுமானால் இந்தியாவுக்கு இலங்கை அரசு விற்பனை செய்யலாம். அதனை அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் தடுக்காது. ஆனால், சீன அரசுக்கு இலங்கையால் விற்பனை செய்யவே முடியாதவாறு அமொக்கா கடிவாளமிட்டு அவதானிப்புகளைச் செய்து வருகின்றது. இவையனைத்துமே 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட சூழலில் வடக்குக் கிழக்குக் கடற் பிரதேசங்களை இலக்கு வைத்த நகர்வுகள் என்பதில் சந்தேகங்களே இல்லை.

வடமாகாணம் மன்னாரில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறியே 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் இதற்கான மறைமுகத் தொடர்புகளை ஆரம்பித்திருந்தது. அதன் மூலம் அமெரிக்காவுக்கு தமிழர் தாயகக் கடற் பிரதேசங்கள் மீதான விருப்பங்கள் மேலும் தூண்டிவிடப்பட்டிருந்தன. அதனடிப்படையில் JS5 மற்றும் JS6 முழுவதையும் கையளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

2018ஆம் ஆண்டு முல்லைத்தீவு கொக்கிளாயில் இருந்து கிழக்கு வரையான ஈழக்கடல் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களை கடலட்டை பிடிப்பதற்கு அனுமதியளித்து, அதன் மூலம் தமிழ் சிங்கள மீனவர்களை மோதவிட்டு, இரு இனங்களின் மீனவர்களையும் வெளிநாடுகளுக்கு அடிமையாக்கி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கடற் பிரதேசத்தைக் கையளிக்கும் நோக்கமே இலங்கை அரசாங்கத்துக்கு இருந்தது.

ஆகவே, இந்த நடைமுறைகளின் மூலம் ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல, இலங்கைத் தீவின் முழு இறைமைக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான அணுகுமுறைகள் என்பது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் சம்பவம் வரை இலங்கை அரசுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழல் இந்த அணுகுமுறைகளுக்குச் சாதகமான ஒரு நிலையை உருவாக்கியிருந்தது.

ஆகவே முல்லைத்தீவில் இருந்து கிழக்கு மாகாணக் கடல் வரைவரையான பகுதிகள் மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் அமெரிக்காவுக்குத் தரைவார்த்துக் கொடுக்கப்பட்டவொரு சூழலிலேயே கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். தற்போது அவருடைய அரசாங்கம் இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.

ஆகவே சீனாவோடு நெருங்கிய உறவைப் பேணிவரும் ராஜபக்ச அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகக் குறித்த கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைக் கருத முடியுமா? அமெரிக்காவுக்கு எதிராக விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? அல்லது இது திட்டமிடப்பட்ட தீ விபத்தா? அல்லது வேறேதும் சதித் திட்டமா? இதன் பின்னணி்யில் சீன அரசைச் சந்தேகிக்க முடியுமா? அல்லது உண்மையிலேயே இயந்திரக் கோளாறினால் ஏற்பட்ட தீப்பரவலா ஏன்ற கேள்விகள் எழாமலில்லை.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் முதலீட்டு அபிவிருத்திச் சபை, மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகளுடன் எண்ணெய் வயல் ஆய்வில் ஈடுபடும் குறித்த அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகள் குழு கலந்துரையாடியே சுமார் ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிடப்பட்டு வருகின்றன.

ஆகவே முல்லைத்தீவுக் கடலில் இருந்து கிழக்கு மாகாணக் கடல் வரைவரையான பிரதேசங்களில் Eastern Echo DMCC என்ற அமெரிக்க நிறுவனம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனேயே எண்ணெய் வயல் ஆய்வை மேற்கொண்டிருக்கும். ஆகவே இவ்வாறான சூழலில் குறைந்த பட்சம் skimmer, Absorbent booms and pads பாதுகாப்புகள் செய்யப்படமால் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? எண்ணெய் வயல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் கடற் பிரதேசத்தில் எந்த அடிப்படையில் வேறு நாட்டுக் கப்பல்கள் செல்ல அனுமதியளிக்கப்பட்டன என்ற கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

சங்கமன்கண்டி இறங்குதுறையில் தீ விபத்தை எதிர்கொண்டுள்ள நியூ டயமன்ட் கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள எண்ணெய் கசிந்து கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் படியுமானால் அவற்றில் 60 சதவீதமானவற்றை மாத்திரமே அகற்றக்கூடியதாக இருக்கும் என இலங்கைக் கடற்பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது. அதுமட்டுமல்ல எண்ணெய்க் கசிவினால் அப்பகுதிகளில் ஏற்படத்தக்க நச்சுத்தன்மை, மாசடைவு போன்றவற்றை உடனடியாக முற்றாகவே நீங்க முடியாதென்றும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு 25 முதல் 30 வருடங்கள் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சில வேளைகளில் பழைய நிலைக்குத் திரும்பாமலே போகக்கூடிய ஆபத்துகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே எண்ணெய் வயல் அய்வு என்ற போர்வையில் தமிழ் பேசும் மக்களின் கிழக்குக் கடற்பிரதேசங்களை அமெரிக்காவுக்குத் தரைவார்த்துவிட்டோம் என்ற எண்ணத்தோடு இலங்கை அரசாங்கம் அசட்டையீனமாகச் செயற்பட்டதா? அல்லது எண்ணெய் வயல் ஆய்வு இடம்பெறும்போது ஏன் உரிய பாதுகாப்புடன் செயற்படவில்லை என்று அமெரிக்காவின் Eastern Echo DMCC என்ற நிறுவனத்திடம் இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்புமா? நஷ்டஈட்டை அரசாங்கம் கோருமா? அவ்வாறு நஷ்டஈடு வழங்கப்பட்டாலும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கரையோரத் தமிழ்பேசும் மக்களுக்கு அது பகிர்ந்தளிக்கப்படுமா? ஆகவே 2009இற்குப் பின்னரான இன அழிப்பின் மற்றுமொரு வடிவமாகவே தமிழச் சமூகம் கருத இடமுண்டு.

கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றுடன் கோட்டாபயவின் அரசாங்கம் தொடர்புகளைப் பேண ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக மீள் பரிசீலினை செய்ய வேண்டுமென அமெரிக்கா எச்சரிப்பதற்கு முன்னரான நிலையிலும் இந்தக் கப்பல் தீப் பற்றி எரிந்துள்ளமை பலத்த சந்தேகங்களையே உருவாக்கியுள்ளது

ராஜபக்சக்களின் அரசாங்கத்துக்கு எதிரான அல்லது அந்த அரசாங்கத்தை தம்வசப்படுத்தச் செய்யப்பட்ட சதி நடவடிக்கையாக இருந்தாலும் பாதிப்பு கிழக்கு மாகாணத் தமிழ்பேசும் மக்களுக்கே. இது தமிழ்பேசும் மக்களின் கடற் பிரதேசம் தானே என்ற இன அழிப்புச் சிந்தனையோடு இலங்கை அரசாங்கம் செயற்பட்டிருந்தாலும் பாதிப்பு தமிழ் பேசும் மக்களுக்கே. எதுவானாலும் பொறுப்புக் கூற வேண்டியது இலங்கை அரசாங்கமே. அமெரிக்கா அல்ல. சீனா அல்ல.

ஆனால் வல்லரசு நாடுகளின் உதவியோடு 2009ஆம் ஆண்டு போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் வல்லரசு நாடுகளைக் கொண்டே வடக்குக் கிழக்குக் கடற்பிரதேசங்கள் எவ்வாறு சூறையாடப்படுகின்றன, சிதைக்கப்படுகின்றன என்பதைப் பற்றியும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் எந்தெந்த வழிகளில் எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது குறித்தும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் புரிந்துகொள்வதாக இல்லையே.

வேறுபாடுகள் கடந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான செயற் திட்டங்கள் நலிவடைந்துள்ளன. இலங்கையைச் சுற்றியும் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களையும் அதன் கடற் பிரதேசங்களைச் சுற்றியும் என்ன நடக்கிறது, பூகோள அரசியல் தாக்கங்கள் எந்தெந்த அடிப்படையில் இலங்கைத் தீவையே நாசமாக்கின்றன என்பது தொடர்பாகவும் சிங்கள முற்போக்குச் சக்திகள் கூடப் புரிந்துகொள்வதாக இல்லை.

கிழக்குக் கடற் பிரதேசத்தில் இடம்பெற்ற எண்ணெய் வயல் ஆய்வு ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது என்று இலங்கை அரசாங்கம் கூறினாலும் ஆச்சிரியம் இல்லை. குறித்த கப்பல் வியாழக்கிழமைதான் தீப் பற்றி எரிந்துள்ளது. இந்த நிலையில் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள சீனத் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றுடன் ராஜபக்ச அரசாங்கம் தொடர்புகளைப் பேண ஆரம்பித்துள்ளமை தொடர்பாக மீள் பரிசீலினை செய்ய வேண்டுமென அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமைதான் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

குறித்த நிறுவனத்தினமே கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல்வேறு நிர்மாணப் பணிகள் இலங்கையில் முன்னெடுக்கவு்ள்ளது. இந்த நிர்மாண நிறுவனம் இந்திய பசுபிக் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திச் சுற்றாடல் பாதிப்பையும் தோற்றுவிப்பதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்யைில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ஆகவே கப்பல் தீப் பற்றி எரிந்துள்ளமை தொடர்பாகப் பலத்த சந்தேகங்கள் உருவாக்கியுள்ளன.