ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் அரசியல் தீவிரம்

ட்ரம்பின் பதவி முடிய முன்னர் இஸ்ரேலைப் பலப்படுத்தும் பொம்பியோ

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவுதி அரேபியாவுக்கு இரகசிய விஜயம்
பதிப்பு: 2020 நவ. 24 00:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 25 21:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#pompeo
#isreal
#palestinian
#tamil
#lka
அமெரிக்கா தம் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் கடந்த புதன்கிழமை கூறிய நிலையில், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஆகியோர் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை இரகசியமாக ஞாயிற்றுக்கிழமை சந்தித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. சவுதி உயர்மட்டம் உத்தியோகபூர்வமாக இதை மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். பதவி முடிவை எதிர்நோக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் அவரின் இராஜாங்கச் செயலர் பொம்பியோவும் விட்டுச்செல்லும் வெளியுறவுத் தெரிவுகள் பாலஸ்தீனர்களையும் ஈழத்தமிழர்களையும் எவ்வாறு எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் பாதிக்கப்போகின்றன என்ற கேள்வி இத்தருணத்தில் எழுவது நியாயமானதே.
 
இலங்கையைப் பொறுத்தவரையில் பொருளாதாரப் பலவீனத்தை தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே அது கருதுகிறது. கேந்திர முக்கியத்துவமே தன் பலம் என்று அது துணிகிறது. தனது பொருளாதாரப் பலவீனத்தைக் கூட, 2009 இல் தனது இராணுவப் பலவீனத்தை எவ்வாறு புவிசார் அரசியலின் பலத்தால் ஈடு செய்து கொண்டதோ, அதைப்போல ஈடு செய்து கொள்ளலாம் என்று அது ஆழமாக நம்புகிறது

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைய இன்னமும் 69 நாட்களே உள்ளன. ஆனாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் அமெரிக்காவில் பதவியேற்பதற்கு முன்னர், ஈரான் மீது தாக்குதல் நடாத்தக் கூட டொனால்ட் ட்ரம்ப் முற்படலாம் என்ற ஊகங்கள் அண்மையில் வலுக்கத்தொடங்கின.

அதேவேளை, அமெரிக்கா மீது கடும் அதிருப்தியடைந்துள்ள ஈரானின் ஜனாதிபதி அலி கமேனி, கடந்த நான்கு ஆண்டுகளில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் விட்ட தவறுகளை ஜோ பைடன் தலைமையிலான புதிய நிர்வாகம் திருத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே சவுதி அரேபியாவில் இஸ்ரேலியப் பிரதமருடனான 'அரை இரகசிய' சந்திப்பு அவசர அவசரமாக நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்புகள் எதனையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ சவுதி அரேபியாவோ வெளியிடவில்லை.

ஆனால், அரபு நாடுகளுடனான உறவைச் சீராக்க, அமெரிக்காவின் ஆலோசனையோடு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவுதியின் முடிக்குரிய இளவரசரைச் சந்தித்துப் பேசியதாகவும், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது உயர்மட்டச் சந்திப்பு என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் வர்ணிக்க ஆரம்பித்துள்ளன.

சவுதி சுன்னி-முஸ்லிம்களின் தலைமை நாடாகவும், ஈரான் ஷியா-முஸ்லிம்களின் தலைமை நாடாகவும் மத்திய கிழக்கில் ஆளுமை செலுத்த விழைகின்றன. உலகளாவிய ரீதியில் சுன்னி-முஸ்லிம்களே பெரும்பான்மையினர். ஷியா-முஸ்லிம்கள் பதினைந்து வீதத்தினரே. பலஸ்தீனத்திலும் பெரும்பான்மையினர் சுன்னி-முஸ்லிம்கள்.

முஸ்லிம்களிடையான இந்தப் பிளவு நிலையை அமெரிக்காவும் இஸ்ரேலும் தமது ஆதிக்க நலன்களுக்காகப் பயன்படுத்தும் போக்கு பல தசாப்தங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நியோமில் நடைபெற்றதாகக் கூறப்படும் மேற்படி சந்திப்பில் இஸ்ரேலிய உளவுத்துறையான மொஸாட்டின் தலைவர் யோசி கோஹனும் கலந்து கொண்டதாக இஸ்ரேலின் கான் பொது வானொலி மற்றும் இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, ரசியா,பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து ஐ. நா பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளும் மற்றும் ஜேர்மனியையும் உள்ளடக்கிய P5+1 வல்லரசு நாட்டுக் குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக 2015-ம் ஆண்டு Joint Comprehensive Plan of Action (JCPOA) எனும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. இது ஒபாமா நிர்வாகத்தின் சாதனைகளில் ஒன்றாகவும் காட்டப்பட்டுவந்தது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் கடுமையாக எதிர்த்திருந்தன.

இந்த ஒப்பந்தத்த்தில் அமெரிக்க ஜனாதிபதி 90 நாட்களுக்கு ஒருதடவை புதுப்பித்துக் கையொப்பம் இடவேண்டும்.

அமெரிக்க-இந்திய அணுகுமுறையை மிலிந்த மொராகொட பிரதிபலிக்கிறார். இந்தச் சூழலில், பைடன் நிர்வாகத்தின் வருகையை கொழும்பு தனக்குச் சாதகமாக அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது

இந்த விதியை ஒபாமாவுக்குப் பின் பதவிக்கு வந்த ட்ரம்ப் நிராகரித்தார். ஒப்பந்தத்தில் இருந்து 2018-ம் ஆண்டு அமெரிக்கா விலகியது. அத்துடன் ஈரான் மீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில், அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி குவாசிம் சுலைமானி, மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற, ஈராக்கைச் சேர்ந்த ஹஷித் அல்ஷிபி, கிளர்ச்சியாளர் குழுவின் துணை தளபதி அபு மஹ்தி அல் முஹந்தி உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இது இஸ்ரேலுக்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்றே அப்போது அவதானிகள் கூறியுமிருந்தனர்.

ஈரானைப் பொறுத்தவரையில் குவாசிம் சுலைமானியின் இழப்பு சாதாரணமான ஒன்றல்ல.

அதேவேளை, அணு ஆயுதத் தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில், ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் அரசு தற்போது வைத்துள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கடந்த 12ஆம் திகதி ஐயம் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்தே, கடந்த வாரம், ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசரமாகக் கூடி ஆராய்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சந்திப்பின் போது ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து இராணுவத் தாக்குதல் ஒன்றை நடத்துவது தொடர்பாக ட்ரம்ப் நாட்டம் காட்டியதாக நியூயோர்க் ரைம்ஸ் நாளிதள் செய்தி வெளியிட்டிருந்தது. அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, பாதுகாப்புத்துறை செயலர், முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவருமே ஈரான் மீது தாக்குதல் நடத்த விரும்பியிருக்கவில்லை. தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற ட்ரம்பின் விருப்பத்துக்கு மாறாகவே அந்த அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தாக நியூயோர்க் ரைம்ஸ் தெரிவிக்கிறது.

ஈரானின் அணு ஆயுத மையங்கள் மீதான ஒரு தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனைகளையடுத்து தாக்குதல் நடத்த வேண்டுமென்ற தனது முடிவில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கியதாகவும் நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த நிலையிலேயே மைக் பொம்பியோ இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் சவுதி அரேபியாவுக்குச் சென்று இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்து உரையாடியிருக்கின்றனர். இந்தச் சந்திப்பு ஈரான் மீதான அதிகரிக்கப்பட்ட நெருக்கடிக்கு சவுதி அரேபியாவின் ஆதரவைக் கோருவதோடு இஸ்ரேல் அரசின் ஈரான் எதிர்ப்பையும் காட்டும் நோக்கில் நடத்தப்பட்டதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.

கேந்திர முக்கியத்துவத்தை, மாறி வரும் உலக சூழலில் தனது பொருளாதார மேம்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதிலேயே இலங்கையின் மூலோபாயம் மையம் கொண்டிருக்கும்

ஈரான் மீதான தாக்குதலை விரும்பாத, மற்றும் தனது சில நடவடிக்கை யோசனைகளுக்கு ஒத்துழைக்காத அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பரை அந்தப் பதவியில் இருந்து நீக்கிய அமெரிக்க ஜனாதிபதி, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் முன்னைய பணிப்பாளர் கிற்ஸ்டோபர் மில்லரை பாதுகாப்புச் செயலர் பதவிக்கான பதிலாளாக நியமித்துள்ளார். மில்லர் ஈரானுக்கெதிரான நடவடிக்கைகளை ஏற்கனவே தீவிரப்படுத்திய ஒருவர்.

ஜோ பைடனின் வெற்றியை இதுவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், தனது பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஈரான் மீதான போரை ஆரம்பித்து உலகின் கவனத்தை வேறு திசைக்கு மாற்றலாமோ என ட்ரம்ப் சிந்திக்க வாய்ப்பிருந்தாலும், ட்ரம்பும் பொம்பியோவும் சார்ந்த அமெரிக்க இராணுவ வட்டாரங்கள் வேறு ஒரு குறைந்தபட்ச வேலைத்திட்டத்தில் நிச்சயம் குறியாய் இருக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம்.

மைக் பொம்பியோ, தனது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைவில்லை என்றே அடிக்கடி கூறி வருகிறார். அவர் அவ்வாறு கூறிவருவதற்கும் வெளியுறவு சார்ந்த சில தேவைகள் காரணமாய் இருப்பது வெளிப்படை.

அதாவது, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தாலும், எதிர்வரும் நான்கு வருட காலத்திற்குள் சீனா தொடர்பாகவோ (இந்தோ பசுபிக் மூலோபாயம்) அல்லது ஈரான் தொடர்பாகவோ (மத்திய கிழக்கு அணுகுமுறை) தலைகீழான மாற்றங்கள் எதையும் கொண்டுவர முடியாத அளவுக்கு தீவிரமான கள நிலைமைகளை உருவாக்கி விடுவது என்பதே அந்த உத்தி.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சுன்னி-முஸ்லிம் நாடுகளை இஸ்ரேலுடன் ஒத்துழைக்க வைத்தாலே ஷியா-முஸ்லிம் ஈரான் மீது கடும் அழுத்தத்தைப் பிரயோகிக்கலாம். அதைச் செய்யவேண்டுமானால் ஒருபுறம் இஸ்ரேலைத் திருப்திப்படுத்தவேண்டும், மறுபுறம் சவுதி அரேபியா போன்ற நாடுகளையும் பலஸ்தீனர்களின் விடயத்தில் சமாளிக்க வேண்டும்.

பொம்பியோ தற்போது சுன்னி-முஸ்லிம் சவுதி போன்ற நாடுகளுக்கு ஈரான் மீதிருக்கும் போட்டியையும் வன்மத்தையும் அச்சத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பலஸ்தீனியர் விடயத்தில் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வைப்பதற்கு விழைகிறார்.

1967-ம் ஆண்டு அரபு இஸ்ரேல் போரின்போது இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதியென டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா அங்கீகரித்திருந்தது. அங்கு சென்று அட்டகாசமான கருத்துகளை வெளியிட்டு இஸ்ரேலின் மனத்தைக் குளிரச்செய்திருக்கிறார் பொம்பியோ. கைமாறாக நெதன்யாகுவின் சவுதி விஜயத்தைப் பெற்றிருக்கிறார்.

அத்துடன் பலஸ்தீனியர்களின் மேற்குக் கரைப்பிரதேசத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட சட்டவிரோதமான யூதக் குடியேற்றங்களையும் அமெரிக்கா அங்கீகரித்தது. ஐக்கிய அமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் இராஜதந்திர உறவுகளைப் பேண ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

சீனா விவகாரத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் ஏறத்தாழ ஒரே நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. ஆனால், பலஸ்தீன விவகாரத்தில் அப்படியல்ல. வேறு பல ஐரோப்பிய நாடுகளின் கருத்துகளையும் பைடன் நிர்வாகம் செவிமடுக்கவேண்டியிருக்கும்.

அதேவேளை, இஸ்ரேலிய தகவற்போரையும் இராஜதந்திர அழுத்தங்களையும் பைடன் எதிர்கொள்ளவேண்டிவரும். சீனாவுடன் பொருளாதார உறவைப் பலப்பித்துவரும் இஸ்ரேலின் தந்திரோபாயம் பைடன் நிர்வாகத்திற்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும்.

இதனாற்தான் தனது வெளியேற்றத்துக்கு முன்னரே அதி தீவிரமாக இஸ்ரேலைப் பலப்படுத்திவிடும் உத்தியை பொம்பியோ கையாளுகிறார்.

ஏனைய கதாநாயகர்கள் எல்லாம் வில்லன்களாகிவிட, ட்ரம்ப் நிர்வாகத்தின் அதியுச்ச வெற்றிநாயகனாக பொம்பியோவே தென்படுகிறார்.

பொம்பியோ சி.ஐ.ஏயின் முன்னைநாள் முதன்மை இயக்குநர். சீன வட்டாரங்களில் அவர் ஒரு சிம்ம சொப்பனம்.

சீனாவுக்கெதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தோ-பசுபிக் மூலோபாயம் ட்ரம்ப் நிர்வாகத்தின் முதன்மைச் சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படும்.

இந்த வகையில், அடுத்த நான்கு வருடங்களில் மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்ப் வெளிப்படாவிடின் அந்த இடத்திற்கு பொம்பியோவே தகுதியானவராகக் கணிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கூடாகக் கொழும்பை அணுகுதல் என்ற நடைமுறையையே பொம்பியோ கடைப்பிடித்துவந்தாலும், இறுதியில் கொழும்பிடம் நேரடியாக இறங்கிவந்து அன்பு பாராட்டும் அணுகுமுறையையும் அவர் பரிசோதித்திருக்கிறார்.

ஆனால், பொம்பியோவை விடவும் கொழும்புடன் அன்பு காட்டும் நிலைக்கு பைடன் நிர்வாகம் தாழ்ந்து செல்வதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

ஏனெனில் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க அதிகாரத்துவக் கட்டமைப்புக்கும் ஊடகத்துறைக்கும் எதிரானதாக இருந்தது என்ற வகையில், அமெரிக்க அதிகாரக் கட்டமைப்பு தீர்மானிக்கும் கொள்கை வகுப்பை அப்படியே ஏற்றுக்கொள்வதாக அது இருக்கவில்லை.

ஆனால், பைடன் நிர்வாகம் தனது மென்போக்கு அணுகுமுறையில் அதிகாரக் கட்டமைப்புடன் இயைந்துபோகும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது.

அதேவேளை, இந்தியாவின் நலனுக்குக் குந்தகமாக எதுவும் செய்யப்போவதில்லை என்பதில் ஒற்றையாட்சி இலங்கை அரசின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்ச திடசங்கற்பம் பூண்டுள்ளார். இதற்கான அமெரிக்க-இந்திய அணுகுமுறையை மிலிந்த மொராகொட பிரதிபலிக்கிறார்.

இந்தச் சூழலில், பைடன் நிர்வாகத்தின் வருகையை கொழும்பு தனக்குச் சாதகமாக அறுவடை செய்துகொள்ளும் வாய்ப்பே அதிகமாக இருக்கிறது.

பொருளாதார ரீதியாக சீனாவிடம் இலங்கை எவ்வளவு நிதியைப் பெறுவதிலும் அமெரிக்காவுக்கு எதுவிதமான கவலையும் இல்லை. கடனைக் காரணம் காட்டிச் சீனாவால் இலங்கையின் 'இறைமை' வேட்டையாடப்படாதிருக்கவேண்டும் என்பது மட்டுமே அமெரிக்காவின் கரிசனை.

ஏகாதிபத்திய வலைப்பின்னல்கள் தமக்கெதிராகப் பின்னப்பட்ட போதும், "எட்டாப்பழம் புளிக்கும்" என்றோ, "கிட்டாதாயின் வெட்டென மற" என்றோ சோர்ந்துவிடாது, பலஸ்தீனர்களும் அவர்களுக்கான ஒப்புரவுச் சக்திகளும் முன்னெடுக்கும் Boycott, Divestment and Sanctions (BDS) என்ற தகவற்போர் போன்ற இன்ன பிறவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஈழத்தமிழர்கள் தமது அரசியற் போராட்டத்தை வகுத்துக்கொள்ளும் வகையில் அந்த எழுச்சி இருக்கவேண்டும்

அமெரிக்காவைப் பொறுத்தவரை கடல் பாதுகாப்பு, இந்தோ-பசுபிக் மூலோபாயம் என்ற விடயத்தில் இராணுவ ஒப்பந்தம் ஊடாகவோ, அல்லது அது இல்லாமலோ, இலங்கை அரசு ஒத்துழைத்தால் அதுவே அதற்குப் போதுமானது. இதற்கான காப்புறுதி அருகில் இருக்கும் அதன் 'மூலோபாயப் பங்காளி' இந்தியா ஆகும்.

இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசைப் பொறுத்தவரையில் பொருளாதாரப் பலவீனத்தை தற்காலிகப் பின்னடைவாக மட்டுமே அது கருதுகிறது. கேந்திர முக்கியத்துவமே தன் பலம் என்று அது துணிகிறது. தனது பொருளாதாரப் பலவீனத்தைக் கூட, 2009 இல் தனது இராணுவப் பலவீனத்தை எவ்வாறு புவிசார் அரசியலின் பலத்தால் ஈடு செய்து கொண்டதோ, அதைப்போல ஈடு செய்து கொள்ளலாம் என்று அது ஆழமாக நம்புகிறது.

இலங்கை அரசு தனது பொருளாதார அபிவிருத்தியில் சீனாவிடம் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாதவாறு மேலைத் தேசத்திடமும் தங்கியிருக்கும் வகையிலான பொருளாதார உறவுகளை உறுதிசெய்துகொள்வதில் அமெரிக்கா அக்கறை செலுத்தும். இந்தியாவும் அதை அக்கறையோடு கவனித்துக்கொள்ளும்.

ஆக, கேந்திர முக்கியத்துவத்தை, மாறி வரும் உலக சூழலில் தனது பொருளாதார மேம்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதிலேயே இலங்கையின் மூலோபாயம் மையம் கொண்டிருக்கும்.

இதற்காகவே சில பிரச்சார உத்திகள் கொழும்பு ஊடகங்களூடாகத் தென்னிலங்கையில் தூண்டிவிடப்பட்டுள்ளன. அதாவது, பைடன் நிர்வாகத்தில் தமிழ்த் தொப்புட்கொடி இருக்கிறதென்றும் பிறிதொரு வெள்ளைப்புலியும் இருக்கிறதென்றும் சில பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் நிறுத்தக்காலத்தில் நோர்வேயின் தேசியக்கொடியை எரித்து இறுதியில் அந்த நாட்டை மிலிந்த மொராகொடவின் வட்டத்துக்குள் இழுத்ததைப் போல, மீண்டும் தென்னிலங்கைப் பிரச்சாரங்கள் தூண்டிவிடப்படுகின்றன.

இந்த வகையில் ஈழத்தமிழர்கள் பலஸ்தீனர்களை விடவும் ஆபத்தான சவால்களை எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் எதிர்நோக்கவேண்டியிருக்கும்.

இதை உணர்ந்த நிலையிலே, வருமுன் காப்போர்களாக ஈழத்தமிழர்கள் தமது மூலோபாயத்தை வகுத்துக்கொள்ளத் தவறினால், அதல பாதாளத்தை அடுத்த நான்கு வருடங்களில் சந்திக்கவேண்டியிருக்கும்.

சுன்னி-முஸ்லிம்கள், ஷியா-முஸ்லிம்கள் என்று முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகளுக்கு ஒப்பாக, தாயகத்தில் தேர்தல் அரசியற் சகதியில் விழுந்திருக்கும் கட்சிகளும், அரண்டுபோயிருக்கும் சிவில் அமைப்புகளும், தமிழகத்தில் திராவிடரா தமிழரா என்று முரண்டுபட்டிருக்கும் ஈழத் தமிழர் சார்பான முகாமும் இந்துத்துவா ஊடுருவலும், புலம் பெயர் சூழலில் மேற்குலகத்தின் மட்டுப்படுத்தல்களுக்குள் சுருங்கிப் போயிருக்கும் தமிழர் அமைப்புகளும் ராஜபக்ஷ சகோதரயாக்களுக்கு சவால் தர வல்லவையாக இல்லை என்பதே உண்மை.

இந்த நிலையை மாற்ற புதியதொரு எழுச்சி அனைத்துப் புலங்களிலும் தமிழர் தரப்புக்குத் தேவையாகிறது.

எத்தகைய ஏகாதிபத்திய வலைப்பின்னல்கள் தமக்கெதிராகப் பின்னப்பட்ட போதும், "எட்டாப்பழம் புளிக்கும்" என்றோ, "கிட்டாதாயின் வெட்டென மற" என்றோ சோர்ந்துவிடாது, பலஸ்தீனர்களும் அவர்களுக்கான ஒப்புரவுச் சக்திகளும் முன்னெடுக்கும் Boycott, Divestment and Sanctions (BDS) என்ற தகவற்போர் போன்ற இன்ன பிறவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு ஈழத்தமிழர்கள் தமது அரசியற் போராட்டத்தை வகுத்துக்கொள்ளும் வகையில் அந்த எழுச்சி இருக்கவேண்டும்.