உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி

சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகக் கூறுகிறார் பேராயர் மல்க்கம் ரஞ்சித்

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புத் தொடர்பாகப் பேசவிரும்பாத நிலையில் பேராயரின் மனச் சாட்சி
பதிப்பு: 2021 பெப். 12 15:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 13 13:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையா்கள் ஆதரித்தும் பங்குபற்றியும் வந்திருக்கின்றனர். இதனால் அருட்தந்தையர்கள் பலர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் கைது செய்யப்பட்டுமிருந்தனர். ஆனால் அப்போதெல்லாம் பேராயர்கள் இலங்கை அரசாங்கத்தை கண்டித்திருந்தாலும் உரிய முறையில் அழுத்தம் கொடுத்திருக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு மன்னாரில் அருட்தந்தை மேரி பஸ்த்தியன் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தாா். 1999 ஆம் ஆண்டு மடு தேவாலயம் மீது விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு நூற்றுக்கும் அதிகமானேர் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர்.
 
இறுதிப்போரை வெறுமனே மனித உரிமை மீறல் என்று கூறியிருந்த பேராயர் மல்கம் ரஞ்சித், இலங்கை நீதித்துறை மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்

1995 ஆம் ஆண்டு யாழ் நவாலி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 150 பேர்கொல்லப்பட்டும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துமிருந்தனர்.

யாழ் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுன் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இவ்வாறு பல கொலைகள். இந்தக் கொலைகளை உள்ளடக்கிய இன அழிப்புத் தொடர்பான கோரிக்கைகளுக்கு ஆதரவாகவோ அல்லது நீதிகோரியோ கேள்வி தொடுக்க விரும்பாத நிலையில் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் மல்கம் ரஞ்சித் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கோரி சா்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளமை தொடர்பாகக் கூறியுள்ளமை தமிழ்க் கத்தோலிக்க மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

அதுவும் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளினால் பேசப்பட்டு, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென ஜெனிவா மனித உரிமை சபையிடம் பொது ஆவணம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

சென்ற வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த பேராயர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடத்திய விசாரணையில் நம்பிக்கை இல்லை என்ற தொனியில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சிறிய பிரதியைக்கூட ராஜபக்ச அரசாங்கம் தன்னிடம் கையளிக்கவில்லை எனவும் பேராயர் கவலை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை நீதித்துறையையும் இலங்கையின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களையும் நம்பமுடியாதென தமிழ் மக்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.

தமிழ்த்தேசியக் கட்சிகள் நாடாளுமன்றத்திலும் அவ்வாறு கூறியிருக்கின்றனர். எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தின் போது இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சிவில் சமூக அமைப்புகள் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றன. முள்ளிவாய்க்காலில் நடந்தது இன அழிப்புத்தான் என்று அடித்தும் கூறுகின்றனர்.

மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் முள்ளிவாய்க்காலில் நடந்தது தமிழ் இன அழிப்பு என்று கூறியிருந்தார். சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் படுகொலைகள் தொடர்பாக ஜெனிவா மனித உரிமைச் சபையில் அவர் சாட்சியம்கூட வழங்கியிருந்தார்.

ரணில்- மைத்திரி அரசாங்கம் நடத்திய விசாரணைகளை விமர்சித்து வந்த பேராயர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மீதான தனது நம்பிக்கையை அபாரமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்

ஆனால் இறுதிப்போரை வெறுமனே மனித உரிமை மீறல் என்று கூறியிருந்த பேராயர் மல்கம் ரஞ்சித், இலங்கை நீதித்துறை மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகள் நம்பிக்கை வைத்துச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

அது மாத்திரமல்ல பௌத்த சமயத்தை இலங்கையின் முதன்மைச் சமயமாக ஏனைய மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டிருந்தார். ஆனால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பேராயர் இலங்கை அரசாங்கம் நடத்தும் விசாரணைகளில் தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.

அதுவும் ரணில்- மைத்திரி அரசாங்கம் நடத்திய விசாரணைகளை விமர்சித்து வந்த பேராயர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மீதான தனது நம்பிக்கையை அபாரமாகவும் வெளிப்படுத்தியிருந்தார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோட்டாபய ராஜபக்ச மீதான தனது நம்பிக்கையையும் அவருக்கு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்ற தொனியிலும் கருத்துக்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுமிருந்தார்.

ஆனால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்தபோது 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் இன அழிப்பு நடந்தது என ஆயர் இராஜப்பு ஜோசப் கூறியதை அன்று போராயர் ஏற்க மறுத்திருந்தார். ஆனால் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் பொதுப்படையாகச் சொல்லியிருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை அநீதியானது. வழிபாட்டுக்கு வந்த அந்த மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக உள்ளூர் விசாரணை மட்டுமல்ல சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென்பதில் எவருக்குமே மாற்றுக்கருத்திருக்க முடியாது.

ஆனால் இங்கே பேராயர் கோருகின்ற அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுகின்ற செயற்பாடு தொடர்பாகவே சந்தேகங்கள் எழுகின்றன. மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணைகளில் நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்த பேராயர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது அபாரமாக நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தமை எந்த அடிப்படையில்?

கத்தோலிக்கத் திருச்சபையின் வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையர்கள் தமிழ்த்தேசிய அரசியல் தொடர்பாகக் கருத்துக்கூறும் சந்தர்ப்பங்களில் அவர்களைக் கண்டிப்பது போன்ற தொனியிலும் இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கை செலுத்த வேண்டுமென்ற கருத்துக்களையும் வெளிப்படுத்தியிருந்த பேராயர் தற்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியதன் மூலம், சொல்லவருவதென்ன?

கோட்டபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பொது அமைப்புகள் கண்டனம் வெளியிட்டிருந்தன. வடக்குக் கிழக்கு ஆயர்கள், அருட்தந்தையர்கள் வேறு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் அல்லது வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தபோது அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பேராயர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கலாம் என்ற தொனியில் கருத்தை வெளிப்படுத்தியமை எந்த நம்பிக்கையில்? முள்ளிவாய்க்கால் போர் இன அழிப்புத் தொடர்பாக இராஜப்பு ஜோசப் கூறிய தகவல்கள் பற்றிப் பேராயருக்குச் சந்தேகம் எழுத்திருந்தது ஏன்?

இப்போது திடீரென உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்துச் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கை விடுத்ததன் மூலம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தையும் அதற்கான போரில் நடந்த இன அழிப்புக்கான விசாரணை தொடர்பான கோரிக்கை குறித்தும் பேராயர் நியாயப்படுத்துவாரா?

ஆயர் இராயப்பு ஜோசப் கூறியதன் பிரகாரம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பான விசாரணைக்குச் சர்வதேசப் பொறிமுறை அவசியம் என்று பேராயரினால் கூற முடியுமா? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வரும் பேராயர் ஏன் ஈழத்தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் தீர்வு குறித்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதில்லை. அல்லது வடக்குக் கிழக்கு ஆயர்கள் அருட்தந்தையர்கள் வெளிப்படுத்துகின்ற கருத்துக்களை நியாயப்படுத்துவதில்லை என்ற கேள்விகளும் எழாமலில்லை.

முப்பது ஒன்று தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்தும் ராஜபக்ச அரசாங்கம் விலகியுள்ளது. ஆனால் அது பற்றியெல்லம் கண்டனம் தெரிவிக்காத அல்லது கண்டிக்க விரும்பாத பேராயர் தற்போது சர்வதேச நீதிமன்றம் பற்றிப் பேசுவதன் பொருள்தான் என்ன?

இங்கே பேராயர் தமிழ் மக்களுக்காகப் பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பேராயர் அரசியல் பேசுகின்றார், பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை அரசியல் யாப்பில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பில்லை என்கிறார், ராஜபக்ச குடும்பத்தின் சார்பான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் அரசியலை பேராயர் சமீபகாலமாகப் பேசியிருந்தார். சிங்கள பௌத்த மக்களின் ஜனநாயக உரிமை பற்றிப் பேசியிருந்தார். போரில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தின் குடும்பங்கள் குறித்தும் கவனம் செலுத்தியிருந்தார்.

ஆகவே அவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் பேராயர் ஈடுபட்டதால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் இங்கே எழுகின்ற சந்தேகம். தான் சார்ந்த இனம் தொடர்பாகவும் அந்த இனத்தின் அரசியல் உரிமைகள் குறித்தும் பாப்பரசர் கூடப் பேசலாம் அது தவறல்ல.

ஆனால் அவ்வாறு தான் சார்ந்த இனத்தின் அரசியல் உரிமைக்காகப் பேசிக் கொண்டு மற்றுமொரு இனத்தின் அரசியல் விடுதலை தொடர்பான போராட்டங்களை மலினப்படுத்துவது அல்லது பெரும்பான்மை அரசுடன் சேர்ந்து செயற்பட வேண்டுமெனக் கூறுவதுதான் அறம் அற்ற செயல்.

இங்கே பேராயர் மல்கம் ரஞ்சித் அறம் தவறிச் செயற்படுகின்றார் என்று கூறலாமா இல்லையா என்பதை அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகள் எடுத்தியம்பும். கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது கூறிய அந்தச் சர்வதேச நீதிமன்றத்தையும் நாட வேண்டி வரும் என்ற கருத்து பேராயருடைய அறம் தவறிய மன நிலையை உலகத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது.

இன அழிப்பு விசாரணை நடத்தப்பட்டுச் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையில் வடக்குக் கிழக்கில் மாபெரும் போராட்டம் ஒன்று கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.

பொத்துவில் முதல் பொலி கண்டி வரை என்ற அறிவுசார்ந்த தலைப்பில் உணர்ச்சி பூர்வமாக நடத்தப்பட்ட அந்தப் போராட்டம் பற்றிச் சிங்கள ஆங்கில ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கூட கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வடக்குக் கிழக்கில் உள்ள அருட்தந்தையர்கள் சைவ சமயக் குருக்கள் உலகத்துக்கு வெளிப்படுத்தியுமுள்ளனர். ஆனால் இதுவரைக்கும் அந்தப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் பேராயர் மௌனமாகவே இருந்திருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நடைபெறவுள்ள இலங்கை தொடர்பான விடயம் தொடர்பான அனைத்துத் தரப்பும் கருத்து வெளியிட்டு வருகின்றன. மனித உரிமைச் சபையின் இலங்கை தொடர்பான பல தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே மறுத்துமுள்ளது.

முப்பது ஒன்று தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதில் இருந்தும் ராஜபக்ச அரசாங்கம் விலகியுள்ளது. ஆனால் அது பற்றியெல்லாம் கண்டனம் தெரிவிக்காத அல்லது கண்டிக்க விரும்பாத பேராயர் தற்போது சர்வதேச நீதிமன்றம் பற்றிப் பேசுவதன் பொருள்தான் என்ன?

ஆகவே கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்கள், அருட்தந்தையர்கள் தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்பதையும் பேராயர் மல்கம் ரஞ்சித் இனியாவது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கான நீதி எவ்வளவு முக்கியமோ இன அழிப்புக்குள்ளான ஈழத் தமிழ்ச் சமூகத்திற்கான நீதியும் அறம்சார்ந்த செயற்பாடும் பிரதானமானது என்பதை பேராயர் பகிரங்கமாகவே வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இது.