ஈழத் தமிழர் அரசியல் விடுதலை குறித்த விவகாரம்

ஐ.நாவின் தோல்விக்கு இணைத் தலைமை நாடுகளே காரணம்

முன்னாள் உதவிச் செயலாளர் சார்லஸ் பெட்ரி வெளியிட்ட கருத்தின் உள் நோக்கம் என்ன
பதிப்பு: 2021 பெப். 15 11:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 07:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றபோது இணைத்தலைமை நாடுகள் ஜப்பான் தலைநகர் ரோக்கியோவில் நடத்திய மாநாடுதான், விடுதலைப் புலிகள் பேச்சில் இருந்து வெளியேற்றப்படுவதற்குப் பிரதான காரணமாக இருந்தது. அந்த மாநாடுதான் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கும் வாய்ப்பாக இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கே சாதகமாகவும் இருந்தது என்பது வெளிப்படை. இவ்வாறானதொரு நிலையில், ஐக்கிய நாடுகள் முன்னாள் உதவிச் செயலாளர் சாரலஸ் பெட்ரி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையை நம்ப வேண்டாமெனக் கூறுகின்றார்.
 
அதுவும் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டுமென ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

நியூயோர்க் பல்கலைக்கழகம், அமைதி மற்றும் நீதிக்கான இலங்கைப் பிரச்சாரம் மற்றும் கனேடியத் தமிழ் மன்றம், மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதிக்கான மையம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே ஐ.நா மீது அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.

அமெரிக்காவும் இந்தியாவும் உலகில் விடுதலை கோரிப் போராடும் தேசிய இனங்களின் பக்கம் நின்று செயற்பட்டதில்லை என்பது வரலாறு. குறிப்பாக ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களின் போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் பக்கமே நின்றிருந்தன. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் இலங்கை அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத செயற்பாடுகளினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவி பொது செயலாளரும் ஐக்கிய நாடுகள் குழுவின் முன்னாள் தலைவருமான சார்லஸ் பெட்ரி ஐக்கிய நாடுகள் சபை மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமான முறையில், செயற்பட்டதனால் ஈழத் தமிழர் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களை புறந்தள்ளியதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பல தடவைகள் கூறியிருந்தார்.

குறிப்பாக சென்ற ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய இரா சம்பந்தன் 2008 ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது வழங்கிய வாக்குறுதிகளை அமெரிக்கா இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் செயற்படுத்தாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறான ஒரு நிலையில், ஈழத் தமிழரின் அரசியல் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகள் சபை தீர்வு வழங்கும் என நம்ப வேண்டாம் என்று ஐ.நாவின் முன்னாள் உதவி செயலாளர் சாள்ஸ் பெட்ரி கூறியமை முக்கியமானதாகும்.

விடுதலைப் புலிகளை ஒழித்து போரையும் இல்லாது ஒழித்த பின்னர் ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு வழங்கப்படும் என அமெரிக்கா பிரித்தானியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தன்னிடம் உறுதியளித்திருந்ததாக சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன் மூலம் போரை இல்லாது ஒழிப்பதிலேயே வல்லாதிக்க சக்திகள் கவனம் வெலுத்தியிருக்கினறன எனத் தெரிகின்றது.

போர் முடிவடைந்து இன்று 10 ஆண்டு நிறைவடைந்த நிலையிலும் அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற அழுத்தங்கள் எதுவும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படவில்லை. ஜெனிவா மனித உரிமை சபையின் தீர்மானத்தைக் கூட இலங்கை புறந்தள்ளிய நிலையில் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு உதவி வழங்கி வருகிறன.

இந்தோ பசுபிக் பாதுகாப்பு கொண்டு இலங்கை மக்களை தன் பக்கம் இழுப்பதற்கான கருவியாக மாத்திரமே ஈழத் தமிழர் விவகாரத்தை இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் கையாளுகின்றன.

மியன்மார் முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை விவகாரத்திலும் அமெரிக்க இந்திய நாடுகள் இரட்டை முகம் காட்டுகின்றன. அதற்கேற்றவாறு ஐக்கிய நாடுகள் சபையும் செயற்படுவதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே தேசிய விடுதலை கோரி போராடும் தேசிய இனங்களின் அரசியல் துறை சார்ந்த விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தமைக்கு வல்லரசு நாடுகளின் ஒடுக்கு முறையே காரணம் என சாள்ஸ் பெட்ரி கூறுகின்றார்.