போரில் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளுக்காக இலங்கை ஒற்றையாட்சி அரசிடம் 2011 ஆம் ஆண்டு

இந்திய அரசு வழங்கிய உழவு இயந்திரங்களுக்கு நடந்தது என்ன?

தற்போது விபரங்கள் கோரப்படுகின்றன
பதிப்பு: 2021 ஏப். 16 15:23
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 17 22:42
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த இறுதிப் போரில் கடும் பாதிப்படைந்த வட மாகாண தமிழ் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல கமநல சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த உழவு இயந்திரங்களில் பலவற்றை, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நிர்வகிக்கப்பட்ட மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டன. எனினும் அந்த உழவு இயந்திரங்கள் கடந்த வருடம் முசலி பிரதேச சபையினால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.
 
இந்தியாவினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளுக்குப் பெரும் துரோகத்தை இழைத்துள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன

கடந்த 2009 ஆம் ஆண்டின் இறுதி போரில் இடம்பெயர்ந்த வடக்கு மாகாண தமிழ் மக்களை அப்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றம் செய்திருந்தது.

அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வடமாகாண தமிழர்களில் விவசாயத்தைப் பாரம்பரிய ஜீவனோபாயத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு அவர்களின் விவசாயத்தை மீள ஆரம்பிக்க செய்யும் நோக்கில் இந்திய மத்திய அரசாங்கம் நூற்றுக்கணக்கான புத்தம் புதிய உழவு இயந்திரங்களையும் அதற்குரிய புதிய கலப்பைகள் மற்றும் நவீன விவசாய உபகரணங்களையும் அன்பளிப்பு செய்திருந்ததுடன், அவற்றை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக இலங்கை கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடம் கையளித்துமிருந்தது.

இவ்விதம் வட மாகாண மக்களின் விவசாயத் தேவைக்காக இந்திய அரசினால் கையளிக்கப்பட்ட 500 புதிய உழவு இயந்திரங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான கலப்பை வகைகளில் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு 100 உழவு இயந்திரங்களும் அதற்கான கலப்பை வகைகளும் ஏனைய உபகரணங்களும் கிடைக்கப்பெற்றது.

இதனடிப்படையில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்கள் மற்றும் கலப்பைகள் யாவும் மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் அதன் கீழ் மாவட்டம் தோறும் செயல்படும் 12 கமநல சேவைகள் நிலையங்களுக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

எனினும் மன்னார் மாவட்ட கமநலக் கேந்திர நிலையங்களுக்கு குறித்த உழவு இயந்திரங்கள் வழங்கிய சமயம் அன்றைய மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ரிஷாத் பதியுதீன் அதில் தலையிட்டிருந்தார். அத்துடன் அவரின் உத்தரவுப்படி மன்னார் மாவட்டத்தில் இறுதி யுத்தத்தில் எவ்விதப் பாதிப்பிற்கும் உள்ளாகாத பிரதேசங்களில் அமைந்துள்ள பல கமநலச் சேவை நிலையங்களுக்கும் அரசியல் காரணங்களுக்காக அதிக எண்ணிக்கையான உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன் மன்னார் மாவட்ட கமநல சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் பல முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தரவின்படி அங்கிருந்து மீளப்பெறப்பட்டு முசலி பிரதேச சபைக்கும், மன்னார் பிரதேச சபைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் விடயத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் விவசாயிகளுக்குப் பெரும் துரோகத்தை இழைத்துள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதேவேளை மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற நூறு உழவு இயந்திரங்களில் நானாட்டான் கமநலச் சேவை நிலையத்திற்கு எட்டு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. தற்பொழுது அதில் ஆறு பழுதடைந்து இரண்டு உழவு இயந்திரங்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் முருங்கன் கமநலச் சேவை நிலையத்திற்கு ஆறு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு குறித்த ஆறும் பயன்படுத்த முடியாதபடி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.

அத்துடன் மன்னார் கமநலச் சேவை நிலையத்திற்கு மூன்று உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு அதில் இரண்டு செயற்பாட்டில் உள்ள நிலையில் ஒன்று தற்போது பழுதடைந்துள்ளது.

உயிலங்குளம் கமநலச் சேவை நிலையத்திற்கு ஏழு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் பின்னர் அதில் ஒன்று முன்னைய அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தரவின் பேரில் மன்னார் பிரதேச சபையின் எருக்கலம்பிட்டி உப அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது.

மிகுதியான ஆறு உழவு இயந்திரங்களில் இரண்டு பழுதடைந்த நிலையில் மிகுதி நான்கு உழவு இயந்திரங்கள் தொடர்ந்தும் அங்கு பயன்படுத்தப்படுகிறது.

இறுதிப் போரில் அனைத்தையும் இழந்து பெரும் அழிவிற்கு உட்பட்ட மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநலச் சேவை நிலையத்திற்கு இந்திய அரசின் எட்டு உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சிலாவத்துறை கமநலச் சேவை நிலையத்திற்கு ஏழு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு பின்னர் அதில் ஒன்று முன்னாள் அமைச்சர் ரிஷாதின் உத்தரவின் பேரில் முசலிப் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சிலாவத்துறை கமநலச் சேவை நிலையத்தில் உள்ள மிகுதியான ஆறு உழவு இயந்திரங்களும் தற்போது பழுதடைந்து மாதக்கணக்காக அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

முசலிப் பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள பெரிய புள்ளச்சிப் பொற்கேணி கமநலச் சேவை நிலையத்திற்கு பதினொரு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் உத்தரவின் பேரில் அதில் நான்கு உழவு இயந்திரங்கள் மீளப்பெறப்பட்டு முசலி பிரதேசச் சபைக்கு வழங்கப்பட்டது.

மேற்படி பொற்கேணி கமநலச் சேவை நிலையத்தில் மிகுதியாகக் காணப்படும் ஏழு உழவு இயந்திரங்களும் தற்போது பழுதடைந்து அங்கு பல மாதங்களாக வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் கடும் பாதிப்பிற்குள்ளான மடுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இரணை இழுப்பைக்குளம் கமநலச் சேவை நிலையத்திற்கு பத்து உழவு இயந்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் அவற்றில் இரண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தரவின் பேரில் மீளப்பெறப்பட்டு முசலிப் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டது.

அவற்றில் மிகுதியான இரண்டும் இரணை இழுப்பைக்குளம் கமநலச் சேவை நிலையத்தில் தொடர்ந்தும் பயன்பாட்டில் உள்ளதுடன் அங்குள்ள ஆறு உழவு இயந்திரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது.

மடு பிரதேச செயலகப் பிரிவில் பாலம்பிட்டி கமநலச் சேவை நிலையத்திற்கு பதினொரு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. அதில் மூன்று முன்னாள் அமைச்சர் ரிஷாதின் உத்தரவின் பேரில் முசலி பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டது. அத்துடன் அங்கு மிகுதியாக இருந்த எட்டு உழவு இயந்திரங்களில் ஆறு பழுதடைந்த நிலையில் மிகுதியான இரண்டும் தொடர்ந்தும் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று இறுதிப் போரில் அனைத்தையும் இழந்து பெரும் அழிவிற்கு உட்பட்ட மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநலச் சேவை நிலையத்திற்கு இந்திய அரசின் எட்டு உழவு இயந்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில் அவற்றில் இரண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்பில் முசலி பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டது.

மிகுதியான ஆறில், மூன்று தற்பொழுது பழுதடைந்துள்ள நிலையில் மிகுதியான மூன்று உழவு இயந்திரங்களும் அங்கு பொது மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகிறது.

இறுதிப் போரில் முழுமையாக அழிவடைந்த மாந்தை மேற்குப் பகுதியில் உள்ள இலுப்பைக்கடவைக் கமநல சேவை நிலையத்திற்கு 15 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. அதில் ஒன்று மட்டும் சிறிய பழுதுக்கு உள்ளாகிய நிலையில் மிகுதியான 14 உழவு இயந்திரங்களும் அப்பகுதி விவசாயிகளின் உழவுப் பணிகளுக்காகக் கட்டணம் அறவிட்டு வழங்கப்பட்டு வந்தது.

எனினும் இலுப்பைக்கடவை கமநலச் சேவை நிலையத்தில் உள்ள குறித்த 14 உழவு இயந்திரங்களில் இரண்டு கொழும்பில் உள்ள கமநல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் பணிப்பின் பேரில் கண்டி மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பயன்பாட்டுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுப்பிவைக்கப்பட்டு அங்கு அவை இரண்டும் பயன்படுத்தப்படுகிறது.

இறுதிப் போரில் அழிவுற்ற மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள விடத்தல்தீவு கமநலச் சேவை நிலையத்திற்கு ஏழு இந்திய உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் அதில் ஒரு உழவு இயந்திரம் ரிஷாத்தின் பணிப்பின் பேரில் முசலி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது. அத்துடன் மிகுதியான ஆறு இயந்திரங்களில் நான்கு இயங்கு நிலையில் உள்ளதுடன் இரண்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளது

மாந்தை மேற்குப் பகுதியில் உள்ள மாந்தை கமநலச் சேவை நிலையத்திற்கு ஏழு உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில் அதில் இரண்டு தற்போது பழதடைந்துள்ள நிலையில் மிகுதியான ஐந்தும் அப்பகுதி மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு கட்டண அடிப்படையில் வழங்கப்பட்டு அவை தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்விதமாக மன்னார் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற 100 உழவு இயந்திரங்களில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் முசலி பிரதேச சபைக்கு 13 உழவு இயந்திரங்களும் மன்னார் பிரதேச சபைக்கு ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகத்தின் உத்தரவுப்படி கண்டி கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு 2 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 47 உழவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ள நிலையில் 37 உழவு இயந்திரங்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள கமநல சேவைகள் நிலையங்களில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் தனது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் நிருவாகிக்கப்பட்ட முசலி பிரதேச சபைக்கு தனது சொந்த அரசியல் ஆதாயம் கருதி முன்னாள் அமைச்சர் ரிஷாதினால் பெற்றுக்கொடுக்கப்பட்ட 13 உழவு இயந்திரங்கள் முசலிப் பிரதேச சபையினால் முறையான பாரமரிப்புக்கு உட்படுத்தப்படாது மிக மோசமான நிலையில் காணப்படுவதுடன் பழுதடைந்துள்ள சில உழவு இயந்திரங்கள் முசலி பிரதேச சபையினால் அண்மையில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல்களும் கூர்மைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்திலிருந்து கடந்த 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதொரு நிலையில் முசலி பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இடம்பெயர்ந்து புத்தளத்திலும் ஏனைய தென்னிலங்கை மாவட்டங்களிலும் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முசலியைச் சேர்ந்த நூறு இருநூறு குடும்பங்களே தமது பூர்வீக இடங்களில் கொட்டில்கள் அமைத்து மீளக்குடியமர்ந்திருந்தனர்.

எனினும் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் பெரும் எண்ணிக்கையானோர் அங்கு அத்தியாவசிய தேவைகளான நிரந்தர வீடுகள் மின்சாரம் மற்றும் குடிநீர் உட்பட உரிய தொழில் வாய்ப்புகள் இன்றி மீண்டும் புத்தளத்திற்கு சென்று அங்கு வாழ்ந்து வந்தனர்.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்களிடம் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் தொடர்பான விபரங்களை அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது

அச்சமயம் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட முசலிப் பிரதேச சபைக்கு இந்திய அரசினால் யுத்தப் பாதிப்புக்கு உள்ளாகிய வட மாகாண விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 13 உழவு இயந்திரங்களும் ரிஷாத் பதியுதீனால் அரசியலுக்காகத் தாரை வார்க்கப்பட்டுள்ளதுடன் அவை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தன.

வடக்கு தாயகத்தின் வன்னி மாவட்டத்தில் இந்திய வீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட்ட சமயம் அப்போது அமைச்சராக இருந்த ரிஷாத் பதீயுதீன் அதில் தலையிட்டு அவரின் கட்சி ஆதரவாளர்களுக்கு குறித்த வீடுகளைப் பெற்றுக்கொடுத்துத், தமிழர்களுக்கு பெரும் அநீதி இழைத்திருந்தார்.

அதேபோன்று இந்திய மத்திய அரசு வடபுல தமிழ் விவசாயிகளுக்கு வழங்கிய உழவு இயந்திரம் விடயத்திலும் தனது அரசியல் பலத்தை பிரயோகித்து மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் அநீதி இழைத்தமை தொடர்பாக இதுவரை தமிழ் அரசியல்வாதிகள் எவரும் வாய் திறக்காதது குறித்து பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்ட விவசாயிகள் கடும் விசனத்தை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர்களிடம் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் தொடர்பான விபரங்களை அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை ஒற்றையாட்சி அரசின் விவசாய அமைச்சின் கீழுள்ள கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறித்த உழவு இயந்திரங்கள் தொடர்பான விபரங்களை அனுப்பி வைக்குமாறு வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள கமநல உதவி ஆணையாளர்கள் ஐவருக்கும் கடிதங்கள் அனுப்பிவைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் குறிப்பு- -

இந்தச் செய்திக் கட்டுரையை எமது ஆசிரிய பீடத்தின் அனுமதியின்றி எந்தவொரு ஊடகங்களும் மீள் பிரசுரம் செய்ய முடியாதென்பதை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக அறியத் தருகின்றோம்.