உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்களின் பின் தனது இருப்பை நியாயப்படுத்திக்கொண்ட

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் அடுத்ததாகக் குறிவைக்கலாம்

நிதிமூலங்களும் அவை வரும் வழிகளும் அரசியலுக்கு ஆபத்தாகும் என்பது ஒற்றையாட்சி சொல்லித்தரும் பாடம்
பதிப்பு: 2021 ஏப். 27 11:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 27 16:23
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவை மட்டுமல்ல முழு உலகையே 2019 இல் உலுக்கிய உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த வெளிச்சக்திகள் எவை, எவ்வாறு அந்தத் தாக்குதல்கள் கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன, தாக்குதல்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது எவ்வாறு என்பது போன்ற நுட்பவியல், சித்தாந்த, மற்றும் புவிசார் அரசியற்காரணிகள் இதுவரை பொதுவெளியில் தெளிவாக வெளிப்படாத சூழலில், தாக்குதல்களை நடாத்தியவர்களுடைய குடும்பங்களுடன் குடும்ப, தொழில், மற்றும் சட்ட ஆலோசனை உறவுகளைப் பேணியோர் என எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு ஈழத் தமிழர்களை பயங்கரவாதத் தடைச்சட்டம் பல தசாப்தங்களாகக் குறிவைத்ததோ அதேபோல் முஸ்லிம்கள் தற்போது குறிவைக்கப்பட்டுவருகிறார்கள்.
 
வன்னி மாவட்டத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் றிஷாத் பதியூதீனுக்குப் பதிலாக நியமிக்கப்படும் அவசியம் ஏற்படலாம்

முஸ்லிம் அரசியல்வாதிகளும் சட்டவல்லுநர்களும் எவ்வாறு தற்போது குறிவைக்கப்படுகிறார்களோ அதைப் போல எதிர்காலத்தில் சொத்துடைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குறிவைக்கப்படுவதற்கான சூழல் தோற்றுவிக்கப்பட்டுவருகிறது.

இந்தப் பின்னணியைச் சிந்தனையில் கொண்டு தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் இயக்கங்களும் கட்சிகளும் தற்போதே அணுகுமுறைகளை வகுத்துச் செயற்படவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பில் கடந்த சனிக்கிழமை அதிகாலை (24 திகதி) பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (CID) கைதான பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பொலிஸாரினால் கைதாகியுள்ளது மிகவும் பாராதூரமான விடயம் என வட மாகாணத்தின் பிரபல மூத்த சிரேஷ்ட சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான கே. என். ஸ்ரீ காந்தா குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகுபவர்கள் விடுதலை ஆகுவது என்பது சாமன்ய விடயமில்லை என்றும் இத்தகைய வழக்குகள் மிகவும் நுட்பமாகக் கையாளப்படவேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

பதியூதீன் சகோதர்கள் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு பொலிஸாரினால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜீத் றோகன தென்னிலங்கை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த 72 மணித்தியால தடுப்புக் காலம் பூர்த்தியடைந்தவுடன் கைதான பதியூதீன் சகோதர்களை மேலும் மூன்று மாதங்கள் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கான எழுத்து மூலமான ஆணை பாதுகாப்பு அமைச்சில் இருந்து பெறப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த 72 மணித்தியால காலக்கெடு செவ்வாய் அதிகாலையுடன் நிறைவடையும் நிலையில் பதியூதீன் சகோதரர்கள் மீதான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் அவர்கள் இருவரையும் தொடர்சியாகத் தடுத்து வைப்பதற்கு செவ்வாய் அல்லது புதன் ஆகிய தினங்களில் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து இலங்கை பொலிஸார் மூன்று மாதங்கள் தடுத்து வைப்பதற்கான எழுத்தாணைப் பத்திரத்தை பெறக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இவ்விதம் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பொலிஸாரினால் தடுத்துவைக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாத் பதியூதீன் தொடர்ச்சியாக 3 மாதங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழக்க நேரிடும்.

இந்தச் சூழ்நிலையில் இலங்கை அரசியல் அமைப்பின் பிரகாரம் றிஷாத் தனது பராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்கவேண்டிய அபாயம் கூட ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். இது தொடர்பான இறுதி முடிவு பாராளுமன்ற சபாநாயகரின் கைகளில் தங்கியுள்ளது. இந்த நிலையில் வன்னி மாவட்டத்திற்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் றிஷாத் பதியூதீனுக்குப் பதிலாக நியமிக்கப்படும் அவசியம் ஏற்படலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, பதியுதீன் சகோதரர்களுடன் அணிவகுத்திருந்த உள்ளூர் அரசியல்வாதிகளில் பலர் மற்றைய கட்சிகளை நோக்கி நகர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வவுனியா மற்றும் மன்னாரின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் அதன் சூத்திரதாரிகளும் அதனோடு தொடர்பில் உள்ள சந்தேக நபர்கள் உட்பட அவர்களுக்கு உதவியவர்களும் இவ்வருடம் ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படல்வேண்டும் என கொழும்பு மறை மாவட்டப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடந்த பல நாட்களாக இலங்கை அரசாங்கத்திற்கு கடும் அழுத்தத்தை தொடர்சியாகப் பிரயோகித்த நிலையிலேயே முன்னாள் அமைச்சர் றிஷாத் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் ஆகியோர் இலங்கை பொலிஸாரினால் கடந்த சனி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரையும் இலங்கை அரசு தப்பவிடக்கூடாது எனவும் ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் பதவி நிலை, தராதரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் எனவும், ஈஸ்டர் தின தாக்குதல் குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் தண்டிக்காதுவிட்டால், தான் சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இலங்கை அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் பேராயரின் தொடர்சியான வேண்டுகோளும் அவரின் ஒயாத அழுத்தமும் இலங்கை அரசிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுடன் பேராயரின் கர்ஜனை தென்னிலங்கையிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இவ்வகையில் இலங்கை அரசிற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நெருக்குவாரம் கடந்த சில நாட்களாக எல்லை தாண்டி அதீத உச்சக்கட்டத்தை அடைந்த நிலையிலே கடந்த சனி அதிகாலை பதியூதீன் சகோதரர்களின் அவசரக் கைது இடம்பெற்றுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் றோகண ஈஸ்டர் தின தற்கொலைதாரிகளுக்கும் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர்களுக்கும் இடையில் தொடர்புகள் பேணப்பட்டுள்ளமை பொலிஸ் புலன் விசாரணையில் அறியப்பட்டுள்ளது என கடந்த சனிக்கிழமை கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பதியூதீன் சகோதரர்கள் மற்றும் தற்கொலை தாக்குதல்தாரிகளுக்கிடையில் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அவர்களின் வங்கி கணக்குகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் புலன் விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையிலே சந்தேக நபர்களான றிஷாத் பதியூதீன் மற்றும் அவர் சகோதரர் றியாஜ் பதியூதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பேராயரின் தொடர்சியான வேண்டுகோளும் அவரின் ஒயாத அழுத்தமும் இலங்கை அரசிற்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதுடன் பேராயரின் கர்ஜனை தென்னிலங்கையிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது

மேலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து தீவின் அனைத்து பகுதிகளிலும் இதுவரை 700 சந்தேக நபர்கள் கைதாகியுள்ள நிலையில் பதியூதீன் சகோதரர்களின் கைதையடுத்து இந்த எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டர் குண்டுதாரிகளுக்கு பதியூதீன் சகோதர்கள் பண உதவி செய்துள்ளமை தொடர்பில் இலங்கை பொலிஸாரிடம் தெளிவான ஆதாரங்கள் உள்ளதாகவும் இதன் அடிப்படையிலேயே சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவும் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பிறிதொரு பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சனி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட றிஷாத் பதியூதீனின் இளைய சகோதரர் றியாஜ் பதியூதீன் ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரியான கொழும்பைச் சேர்ந்த முகமட் இபுறாகிம் இன்சாப் அஹமட் என்பவருடன் தொலைபேசி தொடர்புகளைக் கொண்டிருந்தார் எனும் குற்றச்சாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14ம் திகதி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இலங்கை புத்தளம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் சுமார் ஐந்து மாதங்கள் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர் கடந்த வருடம் செப்டம்பர் 29 ஆம் திகதி குற்றமற்றவர் என பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் றியாஜ் பதியூதீனின் முன்னைய கைது சம்பவம் இடம்பெற்று ஒரு வருடமும் 10 நாட்களும் கழிந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு இரண்டாவது தடவையாக மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கடந்த சனிக்கிழமை கைதாகியுள்ளார்.

மேலும் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி அதிகாலை இலங்கை தெஹிவலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் (சீஐடி) கைது செய்யப்பட்டிருந்தார். அச்சமயம் அவர் மீது, இலங்கை ஒற்றையாட்சி அரசினால் உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட "வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான விஷேட செயலணி" எனும் அரச ஸ்தாபனத்தின் நிதியை முறைகேடாக தனது அரசியல் நலனுக்காகப் பயன்படுத்தியமை எனும் குற்றச்சாட்டே சுமத்தப்பட்டிருந்தது.

அச்சமயம் கைது செய்யப்பட்ட றிஷாத் பதியூதீன் கொழும்பு நீதிமன்ற உத்தரவுப்படி கொழும்பு மற்றும் கம்பஹா சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் சுமார் 37 நாட்கள் கழிந்த நிலையில் அவர் கொழும்பு நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் றிஷாத் பதியூதீன் கடந்த வருடம் பொலிஸாரினால் கைதாகி ஆறு மாதங்களும் ஐந்து நாட்களும் கழிந்த நிலையில் இம்முறை இலங்கையில் அமுலில் உள்ள அபாயகரமான சட்டமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மீண்டும் கைதாகியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதாகிய இலங்கை வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்த பல தமிழ் இளைஞர்களின் பல வழக்குகளில் ஆஜராகி இதுதொடர்பில் நிரம்பிய அனுபவங்களைக் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணியான கே. என். ஸ்ரீ காந்தா பயங்கரவாதச் தடைச்சட்டத்தில் கைதாகுபவர்கள் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்படுவதுடன் பல மாதங்கள் சிறையில் இருக்க நேரிடும் எனவும், சந்தேக நபர்களுக்கு பிணை விண்ணப்பம் செய்தாலும் சட்டமா அதிபரின் அனுமதியின்றி நீதிமன்றத்தினால் அவர்களை விடுவிக்க முடியாதெனவும் தெரிவிக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஏப்பிரல் 14 ஆம் திகதி புகழ்பெற்ற முன்னணி சட்டத்தரணியொருவரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். சிறந்த மனித உரிமைச் செயற்பாட்டளரான இவர் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பான நலன் சார்ந்த பல வழக்குகளில் தொடர்ச்சியாக ஆஐராகியவராவார். இவரின் கைது இலங்கையில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரையும் திகைப்படையச் செய்திருந்தது.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு மேலாக அவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு அவர் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியடைந்த நிலையில் பொலிஸார் அவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்து தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி அவர் ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளும் கைதுகளை இலங்கை ஆட்சியாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளைச் சேர்ந்த மனித உரிமைகள் தொடர்பான தூதுவர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பல மனித உரிமைகள் தொடர்பான தரப்புகள் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுதலை செய்யுமாறு இலங்கை அரசிற்கு பலத்த அழுத்தங்களை வழங்கியும் அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் உள்ள தப்ரபேன் உணவகத்தில் முகம்மட் இபுறாகிம் இன்சாப் அஹமட் என்பவரும் மற்றும் கொழும்பு ஷங்ரிலா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முகம்மட் இபுறாகிம் இல்ஹாம் அஹமட் என்பவருமாகிய இரு சகோதரர்களே 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.

பின்னர் இத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பு தெமட்டகொடையில் வசிக்கும் பெரும் கோடீஸ்வர வர்த்தகரான தற்கொலைத்தாரிகளான சகோதரர் இருவரின் தந்தை முகம்மட் இபுறாகிமை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்தனர். இவ்விதம் கைது செய்யப்பட்ட முகம்மட் இபுறாகிம் பல மாதங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அவர் கைதாகும் வரை தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் தந்தை கோடீஸ்வரத் தொழிலதிபர் முகம்மட் இபுறாகிம் குறித்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் அவர் சார்பில் கொழும்பு நீதிமன்றில் கிரமமாக ஆஐரானர். அத்துடன் குறித்த தொழில் அதிபர் முகம்மட் இபுறாகிம் தொடர்பான குடியியல் வழக்குகளிலும் (காணி மற்றும் சொத்து வழக்கு) குறித்த சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவே தொடர்ச்சியாக ஆஜராகியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர சட்டத்தரணி ஹிஜாஸ் "பேர்ள் ஒப் யுனிட்டி (Pearl of Unity) எனும் அமைப்பை இலங்கையில் நடாத்தி வந்தார். இந்த அமைப்பிற்கு கட்டார் நாட்டில் உள்ள நிதியம் ஒன்றிலிருந்து பெரும் தொகை பணம் கிடைக்கபெற்றுள்ளது. அதன் மூலம் இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளைத் தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காசிமுடன் இணைந்து சட்டத்தரணி மேற்கொண்டதாக இலங்கை பொலிஸாரின் புலன் விசாரணையில் உறுதியாகியுள்ளது," எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் குண்டுதாரியான முகம்மட் இபுறாகிம் அஹமட் இன்சாப்புடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்புகளைப் பேணிவந்ததாகவும் அட்மிரல் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸின் கைதுக்கு தொழில் அதிபர் முகம்மட் இபுறாகிம், ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் குண்டுதாரிகள் இன்சாப் அஹமட், மற்றும் சஹ்ரான் காசீம் ஆகியோர்கள் பிரதான காரணிகளாக இருக்க றிஷாத் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரின் கைதிற்கு தொழிலதிபர் முகம்மட் இபுறாகிம் ஆண் பிள்ளைகளான இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோர்களும் முக்கிய காரணமாகியுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடர்ச்சியான புலன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் திணைக்களத்தின் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பதியூதீன் சகோதர்களின் கைதுக்கான பிரதான காரணம் இபுறாகிம் குடும்பத்தினரே என பல சந்தர்பங்களில் ஒப்புவித்துள்ளனர்.

முகம்மட் இபுறாகிம் இலங்கையின் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் தனது இளமைக் காலத்தில் தொழிலுக்காக கொழும்பு நகர் சென்றடைந்தார். கொழும்பில் சிறிய வியாபார நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். பின்னர் கொழும்பு மாநகரில் மசாலா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். மசாலா வியாபாரம் இபுறாகிமின் வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்தது. குறித்த தொழிலில் பெரும் இலாபமடைந்த இவர் பெரும் கோடீஸ்வரராக மாறினார்.

பின்னர் தனது மசாலா பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிகப் பெரும் தொழில் அதிபராக மாற்றம் கண்டார். இவர் இலங்கையிலிருந்து உணவுப்பொருட்களையும் மசாலப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட தருணத்திலேயே அச்சமயம் கைத்தொழில் வாணிப அமைச்சராக பணிபுரிந்த றிஷாத் பதியூதீன் உடைய சகவாசம் கிடைக்கப்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பேசாலைக்கு அருகாமையில் உள்ள பெரியகரிசல் எனும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.என் அலாவூதீன் எனும் மிக பெரும் தங்க ஆபரணத் தொழிற்சாலை உரிமையாளர் மகளுக்கு தனது மகன் இன்சாப் அஹமட்டை மணம் முடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் முகம்மட் இபுறாகிமின் மன்னார் சம்மந்தியான எஸ்.கே.என். அலாவூதீன் ஏற்கனவே அமைச்சர் றிஷாத் பதியூதீனின் அரசியல் நண்பராக இருந்த நிலையிலும் இபுறாகிமின் மகன் இன்சாப் அஹமட் எஸ்.கே.என். அலாவூதீனின் மகளை மணமுடித்திருந்த நிலையிலும் இபுறாகிம் குடும்பத்திற்கும் அமைச்சர் றிஷாத் பதியூதீனுக்கும் இடையிலான நட்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

முகம்மட் இபுறாகிமின் பிள்ளைகளான குறித்த இரண்டு சகோதரர்களில் ஒருவரான இன்சாப் அஹமட் (அலாவூதீன் மருமகன்) கொழும்பு புற நகர் பகுதியான வெல்லம்பிட்டியில் செப்புத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்ததுடன் குறித்த தொழிலில் அவர் கொடி கட்டிப் பறந்த மிக பெரும் இளம் செல்வந்தராவார். மேலும் இவர் தொழிற்சாலையில் உருவாகிய செப்பு உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கும் ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.

இதன் அடிப்படையில் இவரின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு வாணிப அமைச்சர் எனும் வகையில் றிஷாத் பதியூதீன் பெரும் ஒத்தாசைகளை வழங்கியுள்ளார். அத்துடன் தனது அமைச்சின் கீழ் இருந்த தொழில் அபிவிருத்தி சபை ஊடாக எண்ணற்ற சலுகைகளையும் ஏராளமான வரப்பிரசாதங்களையும் இன்சாப் அஹமட்டுக்கு பதியூதீன் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் தொழில் அதிகார சபையின் உரிய நியதிகளை மீறி இன்சாப் அஹமட் தனது செப்புத் தொழிற்சாலைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு 17 வீத விலைக்கழிவுடன் உலோக கழிவுகளை பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இரண்டாவது தடவையாக 2018 ஆம் ஆண்டும் 35 வீத விலைக்கழிவுகளுடன் அவருக்கு உலோக கழிவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இதே சந்தர்ப்பங்களில் இலங்கையில் செப்பு உற்பத்தி துறையில் உள்ள ஏனையவர்களுக்கு றிஷாத்தின் பொறுப்பில் உள்ள தொழில் அதிகார சபை ஊடாக 0.5 வீத விலைக் கழிவுகளுடன் உலோக கழிவுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விடயங்கள் பொலிஸ் புலன் விசாரணையில் மூலம் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் தற்கொலைக் குண்டுதாரிகள் இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகிய இருவருடன் பதியூதீன் சகோதரர்கள் இணைந்து மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி உட்பட பல பாரிய வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

இவ்வாறான நிலையில் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் இவ்விதமான குற்றச்சாட்டுகளை தொடர்சியாக மறுத்து வந்தததுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவினால் நல்லாட்சி அரசாங்கம் கலைக்கப்பட்டு இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணாக மகிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டவேளை, தான் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினாலேயே தன்மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தன்னை சிறையில் அடைப்பதற்கு தற்போதைய ராஜபக்ஸ அரசாங்கம் முற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் றிஷாபத் பதியூதீன் கைது தொடர்பாக இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் பலர் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் றிஷாத் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சி ஆதாள பாதாளத்திற்கு சென்றுள்ளதை றிஷாத்தின் கைது மூலம் நன்கு அறியக் கூடியதாகவுள்ளதெனவும் அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளும் கைதுகளை இலங்கை ஆட்சியாளர்கள் உடன் நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் றிஷாத் பதியூதீன் கைது மூலம் ராஜபக்ஸ அரசு தனது கொடிய இராணுவ முகத்தை வெளிகாட்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதுடன் கைது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

இலங்கையில் கடந்த 2019 ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை 8.25 மணியிலிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.15 மணி வரையான காலப்பகுதியில் சஹ்ரான் ஹாசீம் எனும் பயங்கரவாதி தலைமையிலான தற்கொலை குண்டுதாரிகளால் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயம், ஷங்ரிலா ஹோட்டல் , சினமன்ட் கிரேன்ட் ஹோட்டல் மற்றும் கிங்ஸ்பெரி ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தெமட்டகொடையில் சொகுசு வீடு, தெகிவளை டுரொப்பிக்கல் இன் எனும் தங்கும் விடுதி, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டியில் உள்ள புனித செபஸ்தியான் ஆலயம், மட்டக்களப்பில் சியோன் ஆலயம் ஆகிய எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தொடர் தற்கொலைத் தாக்குதலில் 253 பேர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் 500 ற்கும் அதிக எண்ணிக்கையானவர்கள் படுகாயமடைந்தனர்.

மைத்திரி கைது செய்யப்படுவாரா, இல்லையா என்பதை இலங்கைத் தீவின் பௌத்த பேரினவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ள இனத்துவேசத்தில் மூழ்கியுள்ள அரசியலே தீர்மானிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினரால் புலன் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் இலங்கை பொலிஸாரின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் முன்னணி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் முஸ்லிம் இளம் யுவதிகள் இளைஞர்கள் திருமணமடைந்த பெண்கள் உட்பட பல நூறுக்கணக்கானவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டியுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவிக்கிறார்.

மேலும் குறித்த ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மீதும் குற்றச் சாட்டு சுமத்தப்படும் நிலையில் அவர் கைது செய்யப்படல் வேண்டும் எனும் கோஷமும் இலங்கையின் நாலாபுறமும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. எனினும் மைத்திரி கைது செய்யப்படுவாரா, இல்லையா என்பதை இலங்கைத் தீவின் பௌத்த பேரினவாதத்துடன் பின்னிப் பிணைந்துள்ள இனத்துவேசத்தில் மூழ்கியுள்ள அரசியலே தீர்மானிக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.