வடமாகாணம் மன்னார்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணக்கம்

எதிர்காலத்தில் இணைந்து செயற்பட முஸ்லிம் காங்கிரஸ் விருப்பம்
பதிப்பு: 2021 மே 11 20:28
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மே 13 03:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடக்கு கிழக்கு மாகாணத்தில் எதிர்கால அரசியல் செயற்பாடுகளை அங்குள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து மேற்கொள்ளுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேசித்துள்ளது. இந்த நிலையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் யாவும் இணைந்து நிறுத்தவுள்ள உறுப்பினருக்கே முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தனது உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
 
மாந்தை பிரதேச சைப
படத்தில் காணப்படுபவர், சமீபத்தில் மரணமடைந்த மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு
மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேசத்தில் தமிழர்களே அதிகம் வாழ்வதால் அப்பிரதேச சபையை தமிழர்களே நிர்வகிப்பது பொருத்தமானதென தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம் இதன் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் குறித்த பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் கட்சிகளின் சார்பில் தவிசாளர் பதவிக்கு நிறுத்தப்படும் தமிழ் பிரதேச சபை உறுப்பினருக்கே வாக்களித்து அவரை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யவேண்டும் என தனது கட்சி சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரையும் பணித்துள்ளதாக கூர்மைக்கு கிடைத்த தகவலில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிருவாகம் றிஷாத் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நிருவாகிக்கப்பட்ட நிலையில் அதன் தவிசாளரான ஆசிர்வாதம் சந்தியோகு மரணமடைந்ததினால் குறித்த பிரதேச சபை நிர்வாகத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றுவதற்கான இரகசிய காய் நகர்த்தல்களை,மாந்தை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்கின்றது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு தமிழர் ஒருவரை தவிசாளராக கொண்டு வருவதற்கு தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றுபட்டுள்ள இச்சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் இரண்டு உறுப்பினர்களும் அதற்கு தமது ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழர் விடுதலைக் கூட்டணி கைப்பற்றுவதற்கு ஏதுவாக றிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் ஒரு சிலரும் ஆதரவளிக்க முன்வந்துள்ள தகவல்களும் கூர்மைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இருந்து மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிருவாகத்தை கையில் வைத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வினைத்திறனற்ற செயல்பாடுகளினால் மாந்தை மேற்கு பிரதேச சபை நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் மந்த கதியிலே நடைபெற்றது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபைத் தேர்தலின் பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் எதுவும் குறித்த சபையின் ஆளுந்தரப்பாக மக்கள் காங்கிரஸ் கட்சியினர் இருந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் தவிசாளருக்கு எதிராக கடந்த வருடம் நம்பிக்கையில்லா தீர்மானமொன்றையும் முன்வைத்திருந்தனர் என மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரின் இறப்பைத் தொடர்ந்து சபையின் தவிசாளராக தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த புதிய ஒருவரை தெரிவு செய்வதற்கு தேவையான முழு ஆதரவையும் வழங்குவதற்கு தயாராகி வருவதாகக் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஆசிர்வாதம் சந்தியோகு உடல் நலக்கோளாறினால் நீண்ட நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி ஞாயிறு தனது 66 வயதில் மரணமடைந்தார்.

இச்சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இச் சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் அங்கம் வகிக்கும் பிரதேச சபை உறுப்பினர் ஓருவரைத் தவிசாளராக நியமித்து சபையின் நிருவாகத்தை தமிழ் கட்சியொன்றே கைவசப்படுத்த வேண்டும் எனும் திட்டத்தின் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் அதி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதற்கு ஆதரவு பெறும் நோக்கில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரொருவரே நேரடியாக களத்தில் இறங்கி மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கிடையில் அதற்கான காய் நகர்த்தல்களை மிகவும் இரகசியமாக முன்னெடுத்து வருவதாகவும் கூர்மை செய்தித் தளத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையில் றிஷாத் பதியூதீனின் மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் நிருவாகத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உதவியுடன் மீண்டும் கைப்பற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களில் மாந்தை மேற்கு பிரதேச சபையும் ஒன்றாகும். மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அனைத்து கிராமசேவையாளர் பிரிவுகளையும் மடு பிரதேச செயலகத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய மாந்தை மேற்கு பிரதேச சபையானது மன்னார் மாவட்டத்தில் அதிக நிலப்பரப்பை தன்வசம் கொண்டுள்ள ஒரு உள்ளூராட்சி மன்றமாகும்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபை வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, பெரியமடு, விடத்தல்தீவு, நெடுங்கண்டல், ஆட்காட்டிவெளி, அடம்பன், வட்டக்கண்டல், மடு, இரணை இழுப்பைக்குளம், மற்றும் காக்கையன்குளம் ஆகிய தமிழ் மக்கள் அதிகம் வாழும் பதினொரு வட்டாரங்களைக் கொண்டதாகும்.

இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் றிஷாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்டனர். மேலும் குறித்த தேர்தலில் றிஷாத் பதியூதீன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த அரசின் புனர்வாழ்வு பெற்ற மக்கள் செல்வாக்குடைய முக்கியஸ்தர்கள் சிலரையும் களம் இறக்கினார்.

இவ்விதம் றிஷாத் பதியூதீனால் தனது கட்சியில் களம் இறக்கப்பட்ட புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரே அண்மையில் மரணமடைந்த மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆசிர்வாதம் சந்தியோகு ஆவார். மேலும் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் நெல் கொள்வனவிற்கு இவர் பொறுப்பாளராக இருந்தார்.

மேலும் இத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இவ்விதம் மக்கள் செல்வாக்குடைய புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரை தமது கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தியதன் காரணமாகவே மாந்தை மேற்கு பிரதேச சபையின் 11 வட்டாரங்களில் 7 யை வெற்றிகொண்டு அவ்வட்டாரங்களில் இருந்து 11 பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவாகினர். அத்துடன் மாந்தை மேற்கு பிரதேச சபை நிருவாகத்தையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரே கைப்பற்றினர்.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலக பிரிவுகள் கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்து 2007ஆம் ஆண்டுவரையான 17 வருடங்கள் தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாக இருந்து அவர்களினால் முழுமையாக பரிபாலனம் செய்யப்பட்ட ஒரு பகுதியாகும். பின்னர் இலங்கை இராணுவத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட இறுதி சமரில் இப்பகுதி மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து பின்னர் இறுதி சமர் நிறைவுற்றதின் பின்னர் மீண்டும் மாந்தை மேற்கு மற்றும் மடுப்பகுதியில் உள்ள தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியமர்ந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசங்களில் உள்ள பல டசின் கணக்கான தமிழ் கிராமங்கள் இறுதி யுத்தத்தில் முற்றாக துவம்சம் செய்யப்பட்டு சுடு காடாக காணப்பட்டது. இந்த நிலையில் மைத்திரி - ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருந்ததுடன் அவ்வரசாங்கத்தில் செல்வாக்கு நிறைந்த அமைச்சராக றிசாத் பதியூதீன் இருந்ததினால் மாந்தை மேற்கு மக்கள் யுத்தத்தினால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட தமது தாயக பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக குறித்த மாந்தை மேற்கு பிரதேச சபைத்தேர்தலில் ஆண்டாண்டு காலமாக தாம் பேணிவந்த தமிழ் தேசியம் சார்ந்த தமது கொள்கையில் இருந்து வெளியேறி றிஷாத் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை பிரதேச சபைத் தேர்தலில் ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகினர்.

இவ்வாறான தம்மால் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களினால் தமது பகுதிகளுக்கு எதிர்பார்த்த நன்மை எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் மாந்தை மேற்கு மற்றும் மடுப்பகுதி மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சினால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதை பின்னர் உணர்ந்து கொண்டனர்.

இவ்வாறான நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆறு பிரதேச சபை உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியிருந்தனர். அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவர் தெரிவாகினார். மேலும் இத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். மேலும் தமிழர் விடுதலை கூட்டணியினருக்கு இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு உறுப்பினர்களும் குறித்த தேர்தல் மூலம் தெரிவாகியிருந்தனர்

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் நடைபெற்ற மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தலில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை வேட்பாளர்களாக நிறுத்தி அதிக வட்டாரங்களில் வெற்றியடைந்த அகில இலங்கை மக்கள் கட்சி சபையின் ஆளுந்தரப்பாக இடம்பிடித்தது. இச்சந்தர்ப்பத்தில் அடம்பன் வட்டாரத்தில் இருந்து மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றியடைந்த முன்னாள் புலி முக்கியஸ்தர் ஆசிர்வாதம் சந்தியோகு அச்சமயம் தவிசாளர் தெரிவு தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 15 வாக்குகளைப் பெற்று மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இத்தெரிவில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியடைந்த மக்கள் காங்கிரஸ் பதினொரு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று உறுப்பினர்களும், சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினரும் என 15 உறுப்பினர்கள் வாக்களித்து றிஷாத் பதியூதீனின் கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் சந்தியோகுவை மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராகத் அச்சமயம் தெரிவு செய்தனர்.

மேலும் அன்றைய தினம் மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கான தெரிவில் ஆசிர்வாதம் சந்தியோகுவை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினரான வேதநாயகன் மகிந்தனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஆறு பிரதேச சபை உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாந்தை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் என நான்கு உறுப்பினர்கள் அச்சமயம் நடுநிலை வகித்திருந்தனர்.

இவ்வாறான பின்னனியில் தற்போது மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக பணிபுரிந்த ஆசிர்வாதம் சந்தியோகு மரணமடைந்ததினால் புதிய தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்ந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளர் பதவியைக் கைப்பற்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆளுந்தரப்பாக மாறிவிடக்கூடாதெனும் வகையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து தமிழ் கட்சிகளும் தற்பொழுது ஒன்றிணைந்துள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினரை மாந்தை மேற்கு பிரதேச சபைத் தவிசாளராக தெரிவு செய்வதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் றிஷாத் பதியூதீனின் மக்கள் காங்கிரஸ் அணியில் உள்ள மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஒரு சிலர் ஏலவே பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானுடன் சங்கமம் ஆகிய நிலையில் தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலை கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினருக்கே அவர்கள் ஆதரவளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஸாத் பதியூதீன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவரின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் மாந்தை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் பதவிக்கான தெரிவில் போட்டியிடுவதற்கு மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரில் யாருக்கு ஆதரவளிப்பது எனும் பெரும் குழப்பமும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது

இவ்வாறான நிலையில் மாந்தை மேற்கு பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் மக்கள் காங்கிரஸ் கட்சியில் இரண்டு அணிகள் தற்போது தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தடுப்புக் காவலில் உள்ளதினால் மாந்தை மேற்குப் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் தவிசாளர் தெரிவில் எவ்வித முடிவும் எடுக்க முடியாது திணறி வருவது மாந்தை மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவிற்காக ஒன்றிணைந்துள்ள தமிழ் கட்சிகள் அனைத்திற்கும் தவிசாளர் தெரிவில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என பெயர் குறிப்பிட விரும்பாத மாந்தை மேற்கு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூர்மைக்கு தெரிவித்தார்.