இன அழிப்பு - இலங்கை ஒற்றையாட்சி அரசின்

தடைகளை உடைத்து நந்திக் கடலில் துணிவோடு வணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம்- ஒளித்தோடிய தமிழ்த்தேசியக் கட்சிகள்

கிழக்கு மாகாணம் கல்குடாவில் ஒருவர் பொலிஸாரால் கைது- யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள்
பதிப்பு: 2021 மே 18 20:40
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 08:13
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கை அரசாங்கமும் அதன் முப்படையினரும் கொவிட் 19 நோய்ப்பரவலைக் காரணம்கூறிப் பல தடைகளை விதித்தபோதும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மாத்திரமே துணிவோடு முல்லைத்தீவு நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றி இறுதிப் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்த போராளிகளுக்கும் வணக்கம் செலுத்தினார். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்தில் மாத்திரம் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர். ஆனால் நாடாளுமன்றத்தின் சபா மண்டபத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தவில்லை. அத்துடன் சபைக்குள்ளும் எதிர்ப்புகளை வெளியிடாமல் தமது ஆசனங்களில் அமைதியாகக் கறுப்பு உடைகளோடு அமர்ந்திருந்தனர்.
 
Sivahi May 18
தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இலங்கை முப்படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் துணிவோடு இறுதிப் போர் நடந்த நந்திக்கடல் பிரதேசத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம் இது சிங்கள ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் பதாதை ஒன்றையும் அங்கு கட்டிய பின்னரே தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியிருந்தார்.
விவாதத்தில் கறுப்பு உடையோடு உரையாற்றிய சிறிதரன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகக் கூறினார். சிங்கள ஆட்சியரளர்கள் எவருமே இதுவரை மன்னிப்புக்கூட கோரவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது வீடுகளிலேயே தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியிருந்தார்.

இன அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மக்கள் ஒன்றுகூடி தீபம் ஏற்றக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில் அந்தத் தடையுத்தரவு நீதிமன்றத்தினால் நேற்றுத் திங்கட்கிழமை ரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்தவொரு நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் கொவிட்-19 நோய்ப் பரவலைக் காரணம் கூறி இலங்கைப் பொலிஸாரால் முடக்கப்பட்டன. இதனால் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஆனாலும் பொதுமக்கள் சிலரும், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும் முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல முற்பட்டனர். பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

ஆனாலும் அந்தத் தடைகளைத் தாண்டி சிவாஜிலிங்கம் நந்திக்கடல் பிரதேசத்திற்குச் சென்று தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார். சிவில் சமூக அமைப்பின் செயற்பாட்டாளரான வேலன் சுவாமிகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குக் கொஞ்சம் அருகாகச் சென்று துணிவோடு தீபம் ஏற்றித் தன்னந் தனியாக நின்று வணக்கம் செலுத்தினார்.

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தனது ஆதரவாளர்கள் சிலருடன் தனித்து நின்று நந்திக் கடல் பிரதேசத்தில் வணக்கம் செலுத்திய சிவாஜிலிங்கம், பின்னர் யாழ் நகருக்கு வந்து தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவுத் தூபிக்கு முன்பாகத் தீபம் ஏற்றினார்.

ஆனாலும் அங்கு வந்த படையினர் அதனைத் தட்டிவிழுத்தினர். சிவாஜிலிங்கத்தையும் எச்சரித்தனர். படையினருடன் தர்க்கப்பட்ட சிவாஜிலிங்கம் அங்கு நின்று வணக்கம் செலுத்திய பின்னர், வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று அங்கும் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

அவருடைய அலுவலகத்துக்கு முன்பாகப் பெருமளவு படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் சிவாஜிலிங்கம் துணிவோடு வணக்க நிகழ்வுகளை நடத்தினார்.

இதேவேளை பொதுமக்களும் தமது வீடுகளிலும் பொது இடங்களிலும் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

இலங்கைப் புலனாய்வுப் பொலிஸாரின் கடுமையான கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் பொதுமகன் ஒருவர் முன்னாள் போராளிகளின் படத்துக்கு முன்பாகத் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினார். இதனால் அவரை எச்சரித்த பொலிஸார் பின்னர் கைது செய்தனர்.

அதேவேளை, பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வவுனியா தோணிக்கல் பகுதியில் உணர்வுபூர்வமாக வணக்க நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

இறுதிப் போரில் மரணித்த தனது உறவுகளுக்காவும், தமிழ் மக்களுக்காகவும் வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பாக அரவிந்தன் என்ற முன்னாள் அரசியல் கைதி குறித்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நி்னைவுத் தூபிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் சிலர் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

இதனால் மாணவர்களை உள்ளே அனுமதித்த பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாநகர சபையில் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் தலைமையில் உறுப்பினர்கள் சிலர் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர்.

பொலிஸாரின் தடைகளையும் மீறி வணக்க நிகழ்வுகளை நடத்தியிருக்க வேண்டிய தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழித்தோடிவிட்டதாகவே பொதுமக்கள் பலரும் தமக்குள் பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.

இலங்கைப் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உறுப்பினர்கள் வணக்க நிகழ்வுகளையோ அல்லது வேறு நிகழ்வுகளையோ நடத்துவதாக இருந்தால், பாராளுமன்றத்தில் முன்பக்கமாக இருக்கும் சபா மண்டபத்திலேயே நடத்துவது வழமை.

அல்லது கூட்டங்கள் நடத்துவதெற்கெனத் தனியான சிறிய, பெரிய குழு அறைகள் உண்டு. அங்கும் தீபம் ஏற்றி வணக்க நிகழ்வை நடத்தியிருக்கலாம்.

ஆனால் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வை நடத்தியுள்ளனர். இது முற்று முழுதான ஏமாற்றுச் செயற்பாடு.

சபா மண்டபத்தில் வணக்க நிகழ்வை நடத்த பாராளுமன்றப் பொலிஸார் தடை விதிப்பார்கள். அல்லது ஏன் தேவையற்ற சிரமம், சிக்கல் என்று இவர்கள் நினைத்திருக்கலாம்.

அத்துடன் பாராளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு வந்துவிடும் என்ற அச்சமும் இருந்திருக்கலாம்.

ஆக இலங்கை அரசாங்கத்துக்கும் நோகாமல், தமிழ் மக்களும் தங்களைத் தவறாக நினைத்துவிடாமல், சாதூரியமான முறையில் தமது அலுவலகத்தில் தீபத்தை ஏற்றிவிட்டு அந்தப் படங்களை ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் என்ன நடத்தினாலும் அது பற்றி அரசாங்கமோ, பாராளுமன்றப் பொலிஸாரோ விசாரணை நடத்தமாட்டார்கள். அல்லது அது பற்றி எந்த உறுப்பினர்களும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் அது அந்தக் கட்சிக்குரிய சிறப்புரிமை.

ஆகவே தமது அலுவலகத்தில் தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தியது சாதனை அல்ல.

மக்களுக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தெரியாதென நினைத்து இவர்கள் இவ்வாறு செயற்பட்டிருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

சரி, முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அன்று ஏன் இவர்கள் பாராளுமன்றத்துக்குப் போனார்கள்? சிவாஜிலிங்கம் நந்திக் கடலுக்குச் சென்று தீபம் ஏற்றியது போன்று அங்கு சென்றிருக்கலாமே?

முள்ளிவாய்கால் நினைவு முற்றத்துக்குக் கொஞ்சம் அருகாகச் சென்று வேலன் சுவாமிகள் தீபம் ஏற்றியிருந்தாரே. அதுபோன்று ஏன் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்குச் செல்ல முடியாமல்போனது?

பாராளுமன்றத்துக்குச் செல்லாமல் தமது ஊர்களில் உள்ள வீடுகளில் அல்லது தத்தமது பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களில் இருந்தாவது தீபம் ஏற்றியிருக்கலாமல்லவா?

சரி, அப்படி பாராளுமன்றத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென்றிருந்தால், சபா மண்டபத்தில் அல்லவா அந்த நிகழ்வை நடத்தியிருக்க வேண்டும்? அப்படி நடத்தியிருந்தால் மாத்திரமே அது செய்தி.

2006 ஆம் ஆண்டு மாவீர் நாள் அன்று செல்வராஜா கஜேந்திரன், சபா மண்டப வாசலில் உள்ள படிக்கட்டுகளில் தீபம் ஏற்றினார். தவிர்க்க முடியாத சூழலில் சம்பந்தன் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் அங்கு ஓடிச் சென்று ஏதோ தாங்களும் சேர்ந்து தீபம் ஏற்றுவதுபோல அன்று படம் காட்டடியிருந்தார்கள்.

ஆனால் இன்று கஜேந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் கூட அந்தச் செயற்பாடுகளை ஏன் மறந்தார்கள்?-- அந்தத் துணிவு ஏன் இன்று இல்லாமல் போனது?

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் உறுப்பினர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் சட்டங்களுக்குப் பணிந்து அச்சாப்பிள்ளை அரசியல் நடத்துகிறார்கள் என்று கூர்மை செய்தி இணையத் தளத்தின் அரசியல் பத்தி எழுத்துக்களில் ஏலவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.