தமிழ்நாட்டில் புகழ்பெற்ற-

ஈழத்தமிழர் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட புலவர் புலமைப் பித்தன் இயற்கை எய்தினார்

தமிழகத் தலைவர்களை நம்ப வேண்டாமென வெளிப்படையாகச் சொல்லியிருந்தார்
பதிப்பு: 2021 செப். 08 21:05
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 16:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்த தமிழ்நாட்டுப் புலவர் புலமைப்பித்தன் சென்னை அடையாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று புதன்கிழமை காலை இயற்கை எய்தினார். தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி ஈழத்தமிழ்ப் போராளிகளைக் காப்பாற்ற வேண்டுமென விரும்பியிருந்தாலும், தமிழ் ஈழம் அமைய வேண்டுமென்பதில் அவருக்கு உடன்பாடு இருந்திருக்கவில்லை என்பதைப் புலமைப் பித்தன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
 
ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனநோய் கொண்டவர்களே இந்தியப் புலனாய்வுத் துறையில் அதிகமாக இருக்கின்றனர். இந்தப் புலனாய்வுத் துறையே ஈழப் போராட்டத்துக்குத் தீங்கு விளைவித்தது என்று கூறியவர் புலமைப்பித்தன்

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களுடன் நெருங்கிய உறவைப் புலமைப்பித்தன் கொண்டிருந்தார். 1935 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் கோவை மாவட்டத்தில் பிறந்த புலமைபித்தன் தமிழ் சினிமாவில் மரபு கவிதைகளிலும் பாடல்களை எழுதியிருந்தார்.

குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார் நீ யார் என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் புகழ்பெறத் தொடங்கிய புலமைப்பித்தன் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

இதே காலகட்டத்தில்தான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த புலமைப்பித்தன் இரவுபகலாக தமிழகத்தில் தஞ்சமடையும் ஈழப் போராளிகளைக் காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

ஈழப் போராட்டத்துடனான தொடர்புகள் தொடர்பாக ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் பல விடயங்களைப் புலமைப்பித்தன் வெளிப்படுத்துகிறார்.

குறிப்பாக அபினுக்கும் கஞ்சாவுக்கும் அடிமைப்பட்டவர்கள் போன்று தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பதவிக்கும் பட்டத்துக்கும் ஆசைப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கு ஒருபோதும் ஒத்துழைக்கமாட்டார்கள் என்று அவர் அந்த நேர்காணலில் விபரிக்கிறார்.

தமிழக அரசியல் தலைவர்களை நம்பிச் செயற்பட வேண்டாம். நீங்கள் உங்கள் காலிலே நின்று போராட்டத்தை நடத்துங்களென அன்று கூறியதாக அவர் சொல்கிறார்.

தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள போராளிகளை நாடு கடத்தமாட்டேன். ஆனால் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு இல்லையென இந்திராகாந்தி கூறினார். பங்களாதேஸ் நாட்டைப் பிரித்துக் கொடுத்தது போன்று தமிழ் ஈழத்தையும் பிரித்துக் கொடுக்கலாம். ஆனால் அது இந்தியாவுக்கே ஆபத்தாகிவிடுமெனவும் இந்திரா காந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஏனெனில் தமிழ் நாடும் பிரிவினையைக் கோரும் என்ற அச்சம் இருந்ததாலேயே தமிழ் ஈழத்தைப் பிரித்துக் கொடுக்க இந்திரா காந்தி அச்சமடைந்திருந்தார்.

ஆனால் தமிழகம் ஒருபோதும் பிரிவினையைக் கோராது எனவும் நீங்கள் தமிழ் ஈழத்தைப் பிரித்தே கொடுங்கள் என்றும் தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்றில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும் புலமைப் பித்தன் அந்த நேர்காணலில் விளக்கமளித்திருக்கிறார்.

அதேவேளை இந்தியாவில் இருப்பது கூட்டாச்சி அல்ல. ஏனெனில் எந்தவிதமான அறிவிப்புகளும் இன்றி மத்திய அரசு மாநில அரசு ஒன்றைக் கலைத்துவிடும் அதிகாரமுடையது. அரசியலமைப்பின் 356 பிரிவை மத்திய அரசு பயன்படுத்தும். அதனாலேதான் தமிழகத் தலைவர்கள் மத்திய அரசுடன் பகைத்துக் கொள்ளாமல் ஆட்சிபுரிகின்றார்கள்.

இந்திய அமைதிப்படைக்குத் தளபதியாக இருந்த கரிகரசிங்க தான் எழுதிய நூல் ஒன்றில் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விபரித்திருக்கிறார். அந்த நூலை வாசித்தாலே உண்மை வெளிப்படும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்

ஆகவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறை செலுத்துவார்கள் என்று ஈழத்தமிழர்கள் நம்பக்கூடாது. இந்தியாவில் இருப்பது ஒரு கொத்தடிமை ஆட்சி. அதாவது அழுவதற்குக்கூட உரிமையில்லாத மாநிலத்தில் ஆட்சிபுரியும் தமிழகத் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று ஈழத்தமிழர்கள் எவ்வாறு நம்புவது எனவும் புலமைப்பித்தன் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனநோய் கொண்டவர்களே இந்தியப் புலனாய்வுத் துறையில் அதிகமாக இருக்கின்றனர். இந்தப் புலனாய்வுத்துறையே ஈழப் போராட்டத்துக்கு தீங்கு விளைவித்தது.

இந்திய அமைதிப்படைக்குத் தளபதியாக இருந்த கரிகரசிங்க தான் எழுதிய நூல் ஒன்றில் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விபரித்திருக்கிறார். அந்த நூலை வாசித்தாலே உண்மை வெளிப்படும் என்றும் புலமைப்பித்தன் சொல்லியிருக்கிறார்.

இன்றுகூட இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்குப் பெருமளவு பணம் கொடுத்து உதவி புரிகின்றது. ஆனால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை எனவும் புலமைப்பித்தன் அந்த நேர்காணலில் கவலை வெளியிட்டிருந்தார்.

இந்திரா காந்தி. தமிழக முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி. எம்.ஜி.ஆர் மற்றும் வை கோ ஆகியோருடன் ஈழத்தமிழ் போராளிகளுக்குச் செய்ய வேண்டிய உதவிகள் மற்றும் அரசியல் விடுதலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்துத் தான் நடத்திய சந்திப்புகள், உரையாடல்கள் தொடர்பான நீண்ட விளக்கம் ஒன்றை அந்த நேர்காணலில் புலமைப்பித்தன் வழங்கியுள்ளார்.

இதேவேளை மறைந்த புலமைப்பித்தன் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான தெறி திரைப்படத்தில் இடம்பெற்ற வளைகாப்பு பாடலான தாய்மை வாழ்கென தூய செந்தமிழ் பாடல் ஒன்றைப் புலமைப்பித்தன் எழுதியுள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் இவர் பதவி வகித்துமிருந்தார்.

இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். மரபுக் கவிதைகளில் தோய்ந்த புலமைப்பித்தன் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் ''நான் யார் நான் யார்'' பாடலின் மூலம் அமரர் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்றார். பின்னர் அடிமைப் பெண் படத்தில் ஆயிரம் நிலவே வா.. போன்ற பாடல்களையும் எழுதிப் பிரபல்யமடைந்தார்.

இதயக்கனி திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறையாத இடத்தைப் பெற்றுத் தந்தன.

2015 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த எலி என்ற படத்தில் தனது கடைசி பாடல்களை இவர் எழுதியிருந்தார்.