தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்-

அமைச்சரைப் பதவி விலகவைத்துப் பொறுப்புக்கூறும் தோற்றப்பாட்டை ஜெனீவாவுக்குக் காண்பிக்க முயற்சி

கிளிநொச்சி அலுவலகத்தை நல்லிணக்கச் செயற்பாடு என்று பாராட்டிய ஆணையாளருக்கு மற்றுமொரு நம்பிக்கையா?
பதிப்பு: 2021 செப். 15 22:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 20:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வடமத்திய மாகாணம் அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமைச்சர் லொகான் ரத்வத்தயைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளன. ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வு 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில், 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை. இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன

சம்பவத்தையடுத்து சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் அமைச்சரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்குமாறும் அவருடைய அமைச்சுப் பொறுப்புக்களுக்குரிய கடமைகளை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த மகிந்த ராஜபக்ச அங்கிருந்தே இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக கொழும்பில் உள்ள பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே அநுராதபுரம் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுத் தான் பதவி விலகுவதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள, ஆங்கில நாளேடுகள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிராக பிரதமர் மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட நடவடிக்கைகள் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்ட விடயங்கள் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல சிங்கள அரசியல் கட்சிகள் கண்டித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்ததுடன் அமைச்சர் லொகான் ரத்வத்த கைது செய்யப்பட வேண்டுமென விடுத்த வேண்டுகோள் தொடர்பான செய்திகளுக்கும் ஆங்கில செய்தி இணையத் தளங்கள் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.

வழமையாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான தாக்குதல்கள் மற்றும் அவர்களுடைய உண்ணாவிரதப் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை சிங்கள ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில ஊடகங்கள், நாளேடுகள் பிரசுரிப்பதேயில்லை.

இந்தவொரு நிலையில், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை தொடர்பாக தமிழ் அரசியல் வட்டாரங்களில் சந்தேகம் எழுந்துள்ளன. அதாவது அமைச்சர் லொகான் ரத்வத்தவைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதன் மூலம் அரசாங்கம் உடனுக்குடன் பொறுப்புக்கூறுகின்றது என்றவொரு தோற்றப்பாட்டை ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் அரசியல் கைதிகள் மீது திட்டமிடப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் தற்போது ஐ.நா மனித உரிமைச் சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்ற 13 ஆம் திகதி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் இலங்கை குறித்த வாய்மொழிமூல அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஐ.நாவுடன் இணைந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் ஒத்துழைக்கவுள்ளதாகக் கடந்த யூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுமிருந்தார். அத்துடன் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கையளித்த 13 பக்க அறிக்கையில் உள்ளகப் பொறிமுறையே பரிந்துரைக்கப்பட்டுமிருந்தது.

அமைச்சரைப் பதவி விலக வைத்துப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த ஜெனீவாவை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக சிறைச்சாலைச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது

ஆகவே அந்தப் பொறுப்புக்கூறலை மேலும் உறுதிப்படுத்தி இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை மூலமாக உள்ளகப் பொறிமுறையைச் செயற்படுத்த மனித உரிமைச் சபையை இணங்க வைக்கும் ஒரு தந்திரோபாயமாக இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கலாமெனக் கருதப்படுகின்றது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கணா சிங்கர் உடனடியாகவே கண்டனம் வெளியிட்டுள்ளார்.

வழமைக்குமாறாக தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்படும் செய்திகளைக் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகமோ அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களோ கண்டுகொள்ளாத நிலையில், இந்தச் சம்பவம் உடனடியாகவே ஐ.நா.வின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டமைக்கு ஆங்கிலச் செய்தி ஊடகங்களே காரணமாக அமைந்துள்ளன என்பது வெளிப்படை.

ஆகவே இதன் பின்னணியில் இந்த சம்பவம் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் எழுவதோடு, அமைச்சர் லொகான் ரத்வத்தவைக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக மேற்கொண்ட குறைந்தபட்ச நடவடிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபைக்குப் போதுமானவை என்ற கருத்தும் அரசாங்கத்திடம் இருக்கலாம்.

ஏனெனில் பெயர்பலகைகூட நாட்டப்படாமலும், யாருக்குமே தெரியாமலும் அவசர அவசரமாகக் கிளிநொச்சியில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் பற்றி ஆணையாளர் மிச்செல் பச்சலெற் தனது அறிக்கையில் பாராட்டியுள்ளார். அத்துடன் அந்த அலுவலகம் நல்லெண்ண முயற்சியெனவும் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இவ்வாறானதொரு நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த அமைச்சர் லொகான் ரத்வத்தயைப் பதவியில் இருந்து விலகுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டுக்கொண்டதையும் அமைச்சருடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டதையும் நிச்சயமாக ஆணையாளர் பாராட்டுவார்.

ஜெனீவா அமர்வின் முடிவில் இந்தப் பாராட்டு வெளிவரலாம் அல்லது இலங்கையின் நல்லதொரு முன்னேற்றமாக ஆணையாளரினால் குறிப்பெடுத்துக் கொள்ளப்படலாம்.

அதேவேளை, ஜெனீவா அமர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால், தமிழ் அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்யும் நோக்கிலேயே, அமைச்சர் லொகான் ரத்வத்தயை அரசாங்கம் அங்கு அனுப்பியதாகவும், ஆனால் அமைச்சர் மதுபோதையில் இருந்ததால் கைதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து அரசாங்கத்தின் திட்டத்தைக் குழப்பி விட்டாரெனவும் கொழும்பில் உள்ள சிங்கள ஊடக வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் அமைச்சர் லெகான் ரத்வத்தையுடன் அமைச்சர் தரத்திலான மற்றுமொரு மூத்த உயர் அதிகாரியொருவர் சென்றதாகவும் இருவரும் இலங்கை விமானப்படையின் சிறப்பு கெலிகொப்ரரிலேயே அநுராதபுரத்துக்குச் சென்றிருந்தாகவும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். மற்றையவர் அதிகாரியல்ல அவரும் அமைச்சர் என்ற தகவலும் உண்டு.

ஆகவே ஏதேவொரு நிகழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற இவர்கள் முயற்சித்திருக்கின்றனர் என்பது தெரிகிறது.

ஆனால், எது எப்படி நடந்தாலும், ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர் லெகான் ரத்வத்தைய அமைச்சர் பதவியில் இருந்து விலக வைத்ததன் மூலம் பொறுப்புக்கூறல் தொடர்பான ஆரம்ப முயற்சியாக ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரை நம்பவைத்துவிட்டனர் என்ற முடிவுக்கு வரலாம். இதற்காகத் தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதிமிக்க உயிரைத் துணிவோடு பந்தாடியிருக்கிறார்கள்.

இன அழிப்பு மற்றும் அரசியல் விடுதலைக்கான பேச்சுக்கள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுமே ஆணையாளர் மிச்செல் பச்சலெறின் வாய்மொழி மூல அறிக்கையில் திசை திருப்பப்பட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் மொழியில் சொல்லப்படும் விசாரணைக்கான கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சுக்கூட அந்த அறிக்கையில் உருப்படியாக இல்லை.

ஜெனீவாவின் வார்த்தையில் கூறப்படும் போர்க்குற்ற விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்கள்

ஏனெனில், அந்தப் போர்க்குற்ற விசாரணையைத்தான் உள்ளக விசாரணையாக மாற்றியமைக்க இலங்கை ஒற்றையாட்சி அரசு 2015 ஆம் ஆண்டில் இருந்து நடத்தும் நாடகங்களை ஜெனீவா நம்புகின்றது.

நம்புவதுபோலக் காண்பித்துச் சேர்ந்து விளையாடுவது  போலவும் தெரிகிறது. அதற்குத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் உடந்தையகின்றன.

அத்துடன் ஜெனீவாவுக்கும் இந்தியா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் புவிசார் அரசியலுக்கு ஏற்பச் செயற்பட வேண்டிய சூழல் இருப்பதால், சிங்கள ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்தும் அறிக்கைகளை வெளியிடுகின்றது.

இலங்கை சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது எனக் கூறினாலும் வல்லாதிக்க நாடுகளே ஈழத்தமிழர்களை அதிகமாக ஏமாற்றுகின்றன. அதற்காகவே தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சிலரையும் சில புலம்பெயர் அமைப்புகளையும் அந்த வல்லாதிக்கச் சக்திகள் விலைபேசியுமுள்ளன.

இதேவேளை, அமைச்சர் லொகான் ரத்வத்தை குறித்த அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகினாலும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லையென கொழும்பில் உள்ள சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை. அமைச்சர் ரொகான் ரத்வத்தையைக் கைது செய்ய முடியாதெனவும் அவருக்கு எதிராக இதுவரை கைதிகளின் உறவினா்களிடம் இருந்தோ அல்லது அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்தோ எந்தவொரு முறைப்பாடுகளும் கிடைக்கவில்லையெனவும் இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிகால் தல்துவ கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.