இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற வகையில்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை சொல்வதும், சொல்லாது சொல்வதும்

பீரிஸ், மிலிந்த, பசில் ஆகியோரின் திட்டங்களே அரங்கேறுவதாகத் தெரிகிறது
பதிப்பு: 2021 டிச. 11 15:19
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 13 00:04
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
போர் இல்லாதொழிக்கப்பட்டதொரு சூழலில், இலங்கை ஒற்றையாட்சி அரசு விரும்பும் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தென்படுகிறது. இலங்கை இராணுவத்தின் கீழ்நிலை அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல, இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.
 
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தடைப் பட்டியல் அறிவிப்புத் தொடர்பாக தமிழர்கள் அதீத மகிழ்ச்சியடைய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல இதற்கு அப்பாற்பட்ட பல நடவடிக்கைகளும் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளவுள்ளதாக அறிக்கையின் தொனி வெளிப்படுத்துகின்றது. அதாவது தமிழர் தரப்பிலும் சிலருக்குத் தடைகள் வரலாம் என்பதே அதன் அர்த்தமாகும்

ஆகவே அமெரிக்க மனித உரிமை நாள் அறிவிப்புக் குறித்து தமிழர்கள் அதீத மகிழ்ச்சி கொள்ளத் தேவையில்லை. அங்கே உட்பொதிந்திருக்கும் ஆபத்துக்கள் குறித்தே சிரத்தை கொள்ளவேண்டும், என்று நீண்ட காலமாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் பகிரங்கமாகப் பெயர் குறிப்பிட விரும்பாத தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவர் கூர்மைக்குத் தெரிவித்தார்.

இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு நாடுகளின் இராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகள் பன்னிரெண்டு பேருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டை நோக்கிய பயணத் தடைவிதித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. அவர்களுக்கும் அப்பால் மேலும் சிலரையும் உள்ளடக்கி, மொத்தம் 15 பேருக்கும் 10 கட்டமைப்புகளுக்கும், திறை சேரி ஊடாகாவும் பிறிதான தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட பன்னிரெண்டு அதிகாரிகளும் முழுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ற தகவல்களின் அடிப்படையில், அந்த நபர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோரும் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றனர்.

முன்னாள் இலங்கைக் கடற்படைப் புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி 2008 முதல் 2009 வரை, "திருகோணமலைப் பதினொருவர்" என்று சொல்லப்பட்ட மனித உரிமை மீறல்களில் எண்மர் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டவராகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் காலத்தில், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுத் தமிழ்க் கிராமத்தவர்களைப் படுகொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து சுனில் ரத்நாயக்கவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பேருடைய தடைகள் மட்டுமல்ல இதற்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளும் இலங்கைப் பொறுப்புக்கூறல் தொடர்பாக மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க அறிக்கையின் தொனி காண்பிக்கின்றது. அதாவது தமிழர் தரப்பு மீதும் தடைகள் வரலாம் என்பதும், மீண்டும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஒபாமா காலத்து அணுகுமுறையைத் தொடரவுள்ளது என்பதுமே அதன் அர்த்தமாகும்.

அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவித்தலின் இலங்கை பற்றிய பந்தி வருமாறு:

"Chandana Hettiarachchi, a Sri Lankan naval intelligence officer, for his involvement in gross violations of human rights, namely, the flagrant denial of the right to liberty of at least eight “Trincomalee 11” victims, from 2008 to 2009. Sunil Ratnayake, a former Staff Sergeant in the Sri Lanka Army, for his involvement in gross violations of human rights, namely the extrajudicial killings of at least eight Tamil villagers in December 2000. The designation of these two Sri Lankan individuals is not the only action we are taking in support of accountability for gross violations of human rights in Sri Lanka."

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்குமான பொறுப்புக்கூறலுக்கு ஏற்ற வகையில் அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கையே இந்த இரு இராணுவ அதிகாரிகளுக்கான பயணத் தடை என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே பிளிங்கென் அறிவித்திருக்கிறார்.

உகண்டாவைச் சேர்ந்த ஒருவர், சீனாவைச் சேர்ந்த நால்வர், வெள்ளை ரஷியா எனப்படும் பெலரஸ் நாட்டைச் சேர்ந்த இருவர், பங்களாதேஸைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் இராணுவ லெப்ரினன்ட் கேணல் ஒருவரும் மெக்சிகோவில் ஒருவருமாக மொத்தம் பன்னிருவருக்கு அமெரிக்காவுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் உள்ள உய்குர் முஸ்லிம்கள் இன அழிப்புக்கு உள்ளாவதாக அமெரிக்க, மற்றும் கனடாத் தரப்புகள் பகிரங்கமாகவே குற்றஞ்சுமத்தும் நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சீனாவின் மோசமான மனித உரிமை மீறல் என்று மாத்திரமே குற்றம் சுமத்தப்பட்டுத் தடைப் பட்டியலில் சீன இராணுவ அதிகாரிகள் நால்வர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்திருந்தது. அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இத் தடையை தனித்துவமான அறிக்கையிடல் மூலம் பிறப்பித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று, அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்கா இலங்கையோடு இணைந்து ஒரு புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிப்பதற்கான புவிசார் அரசியற் திரைக்களம் விரிய ஆரம்பித்துள்ளது

சவேந்திர சில்வாவுக்கு இலங்கையில் வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. போரின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவியும் வகித்திருந்தார். இந்த நிலையிலேயே மைக் பொம்பியோ இலங்கையின் அதியுயர் நிலையில் உள்ள அதிகாரியான சவேந்திர சில்வா மீது தடை விதித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு 58 ஆவது படைப் பிரிவின் தலைவராக சவேந்திர சில்வா பதவி வகித்திருந்தபோது, இறுதிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்தவர் என்ற குற்றச்சாட்டிலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பயணத் தடை அமைந்திருந்தது.

ஆனால் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே பிளிங்கென், இலங்கையின் கீழ் நிலை இராணுவ அதிகாரிகள் இருவருக்கே பயணத் தடை விதித்திருக்கிறார். அதுவும், 2009 இன அழிப்புப் போருக்குள் நேரடியாகச் செல்லாமல் 2000 ஆம் ஆண்டையும் 2008-2009 இல் திருகோணமலையையும் தொட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளார். அதுவும் சுனில் ரட்நாயக்கா என்ற இராணுவ அதிகாரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஆண்டு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஒருவர்.

ஆகவே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தடைப் பட்டியல் அறிவிப்புத் தொடர்பாக ஈழத்தமிழர்கள் அதீத மகிழ்ச்சியடைய வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில், எதிர்காலத்தில் பொறுப்புக் கூறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்ற இராஜாங்கத் திணைக்கள அறிக்கையின் தொனி, தமிழர்கள் மீதும் தடைகள் வரும் என்ற செய்தியையும் சொல்லாது சொல்வதாகத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆகவே இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகளை வலியுறுத்தும் வகையிலேயே அதற்கு வழிகாட்டக்கூடிய முறையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று, அடுத்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமெரிக்கா புதிய தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் வாய்ப்புகளும் உண்டு என்பதையே அந்த அறிக்கை சொல்லாமல் சொல்கிறது.

அதாவது இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற முறையில் ஜெனீவா தீர்மானத்தைக் கொண்டுவரும் அடிப்படையில் தமிழர் தரப்பின் மீதும் குற்றம் சுமத்தி ஈழத் தமிழர் விவகாரத்தை மூடிமறைக்கும் திட்டத்திற்கு மிக நிதானமாக ஜோ பைடன் நிர்வாகம் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்திருக்கிறது என்பதையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காண்பித்துள்ளது.

டொனால்ட் ட்ரமபின் நிர்வாகம் ஈழத்தமிழர் விவகாரத்தை இந்தியா மூலமாகவே அணுகியது. இந்தியாவின் விருப்புக்கு உடனடியாகக் கட்டுப்பட மறுத்த இலங்கை அரசை மிரட்டுவதற்கு 2020 பெப்ரவரியில் உயர் நிலைத் தளபதி சவேந்திர சில்வா மீது பயணத்தடையும், பின்னர் தனது பதவிக் கால இறுதிக் கட்டத்தில் 2020 ஒக்ரோபரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போதும் சவேந்திர சில்வா மீதான பயணத் தடை பற்றிய கேள்விகளுக்கு அப்போதைய அமெரிக்க ராஜாங்கச் செயளார் மைக் பொம்பியோ பதிலளித்தும் இருந்தார்.

ஆனால், பைடன் ஆட்சி மாற்றத்துடன் இந்த நிலையை மாற்றி, அமெரிக்காவோடு இந்தியா ஊடாக அன்றி, தான் நேரடியாகவே பேரம்பேசும் நிலையை கோட்டாபய தலமையிலான இலங்கை அரசு தோற்றுவித்துள்ளது.

தற்போது ஜோ பைடன் நிர்வாகம் ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இரகசியமாக அணுகியே ஈழத்தமிழர் தொடர்பான விடயங்களை மேற்கொண்டு வருகின்றது.

ஒரு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பிரதான கட்சிகளின் வெளியுறவு சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இருவர், இலங்கையில் அரசியல்தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டுமென்றும் அது அதிகாரப் பகிர்வின் ஊடாகவும், பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற அடிப்படையில் அமைய வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்று, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை மறுப்பதாகவும், சமஷ்டிக்கோரிக்கையை அங்கீகரிக்காததாகவுமே வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதுவே ஜி. எல். பீரிசின் வெளியுறவுக்கொள்கையின் வெற்றியாகவும், மிலிந்த மொராகொட, மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின், ரொபேர்ட் பிளேக்கின் ஊடான காய் நகர்த்தலாகவும் இருப்பதாக அமெரிக்காவில் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூர்மைக்குத் தெரிவித்தன.

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா சென்று பேச்சு நடத்திய பின்னரே அவர்கள் அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தனர். என்பதும் இங்கு நோக்கத்தக்கது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அணியும் அதிகாரப்பரவலாக்கம் பற்றியே பேசியிருந்தது. இதனையே உலகத் தமிழர் பேரவை தங்களுடைய செயற்பாடாகக் காட்டிக் கொள்ளவும் முற்பட்டது.

இதன் பின்னணியிலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் சர்வதேச மனித உரிமைகள் தினம் அன்று வெளியிட்ட அறிக்கையில் இலங்கை தொடர்பான கூற்றுக்களையும் நாம் நோக்க வேண்டும்.

அமெரிக்க- இலங்கை நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிப்போர், இதனை இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறைக்கு ஏற்ற செயற்பாடு என்றே சொல்வர்.

அதாவது பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவியேற்க முன்னர் கடந்த யூன் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து இணையவழி மூலம் சுமந்திரனோடு உரையாடியிருந்தார். பின்னர் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். சுமந்திரன் ஆகியோர் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் தூதுவர் முன்னிலையிலேயே சந்தித்துப் பேசியிருந்தனர்.

அதன் பின்னர் பேராசிரியர் பீரிஸ் வெளியுறவு அமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராகப் பதவியேற்றனர்.

இந்தவொரு பின்னணியிலேயே சட்டத்தரணி சுமந்திரன் குழுவினர் அமெரிக்கா சென்று பேச்சு நடத்தியுமிருந்தனர்.

ஆகவே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதுவும் குறிப்பாக சவேந்திர சில்வா போல அன்றி இலங்கையின் உள்ளகச் சட்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கீழ்நிலை இராணுவ அதிகாரிகள் இருவருக்குத் தடை விதிக்கப்பட்டமையும், அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பிரதான கட்சிகளின் வெளியுறவு சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இருவர் பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசியதற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க- இலங்கைச் செயற்பாட்டை அவதானிப்போர் கூர்மைக்கு எடுத்தியம்பினர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், தனது புவிசார் அரசியல் நோக்கங்களையும் அமெரிக்கா அடைய முற்படுகின்றது

அமெரிக்காவுடன் முரண்படுவது போல காண்பித்துக் கொண்டு சீனாவின் கடும் பிடிக்குள் இருந்து மீள்வதற்கான உத்தியை இலங்கை கையாண்டு வருகின்றது என்பதையும் உன்னிப்பாக அவதானிப்போரால் கூற முடியும்.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக அமைச்சரவை அந்தஸ்தோடு பதவி வகிக்கும் முன்னாள் அமைச்சர் மிலிந்தமொறகொட, வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் திட்டம் அரங்கேறி வருகின்றது.

அதாவது ஜெனீவா மற்றும் சர்வதேச அரங்கில் இருந்து ஈழத்தமிழர் விவகாரம் முற்றாக நீக்கம் செய்யப்பட வேண்டுமென்பதே இவர்களின் திட்டம்.

இவர்களில் மிலிந்தமொறகொட, பேராசிரியர் பீரிஸ் ஆகிய இருவரும் சமாதானப் பேச்சுக் காலத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்திருந்தவர்கள்.

ஆகவே போரின் பின்னரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் உள்ளகப் பொறிமுறை என்ற விருப்பத்தை அரங்கேற்ற அமெரிக்காவும் இறுக்கிப் பிடிக்கிறது என்பதே நிதர்சனம்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், தனது புவிசார் அரசியல் நோக்கங்களையும் அமெரிக்கா அடைய முற்படுகின்றது.

கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவா் அலெய்னா ஸ்ரெப்லிஸ் மாற்றலாகிச் சென்றுள்ள நிலையில், அமெரிக்கத் தூதகரத்தின் இரண்டாம் நிலை அதிகாரியான மாட்டீன் கெலி இலங்கை விவகாரத்தைக் கையாண்டு வருகின்றார்.

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறைப் பிரதேசங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்று சிங்கள மரபுரிமைச் சின்னங்களைப் பார்வையிட்டிருக்கின்றார். காலியில் உள்ள டச்சுக் கோட்டையைப் புனரமைக்க நூறு ஆயிரம் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பும் செய்திருக்கிறார்.

அமெரிக்காவில் மனித உரிமைத் தினத்தன்று மட்டுப்படுத்தப்பட்ட பயணத்தடை வெளியாகும் அதேவேளை, தீவில் மாட்டீன் கெலி தென்மாகாணத்துக்குச் சென்றிருக்கிறார் என்பதும் இங்கு நோக்கற்பாலது.

அதேவேளை ஒரு சில கிழமைக்குளுக்கு முன்னர் திருகோணமலைக்குச் சென்றிருந்த ஜேர்ம நாட்டுத் தூதுவர் அத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைப் பற்றி கீச்சகத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு பதிவிடிருந்தமையும் இங்கு ஒரு சேரக் கோர்த்து நோக்கப்படவேண்டும்.