13 ஐ நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி மோடிக்குக் கடிதம் அனுப்ப முடிவு

தேசம், சுயநிர்ணய உரிமை நீக்கம்- பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழர் அரசியல்

சுமந்திரன், செல்வம் இரு முனைகளில்- ஆனால் அதிகாரப்பரவலாக்கத்துக்கே வழி கோலுகின்றனர்
பதிப்பு: 2021 டிச. 12 23:15
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: டிச. 13 10:33
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிடம் ஒருமித்த குரலில் கோரவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. கொழும்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப் பிரச்சினைக்குத் தீர்வல்ல என்றும் ஆனால் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் இன்றைய சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமை தாங்கினார்.
 
ரஷியா ஜனாதிபதி புதுடில்லிக்கு வந்தால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முரண்பாடுகள் உருவாகிவிட்டதென்றும் ஜோ- பைடன் ஆட்சிக்கு வந்ததால், இலங்கை விவகாரம் குறித்த அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றம் வந்துவிட்டதாகக் கூறியும் அவசரப்பட்டுப் புரிந்து கொள்வது தவறு

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எப் கட்சியின் மூத்த உறுப்பினர் கலாநிதி சர்வேஸ்வரன், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த்தேசியக் கட்சி, புளொட் ஆகிய கட்சிகளும் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை. ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

சுமார் மூன்று மணிநேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் பின்னர் செய்தியாளர் மாநாடு ஒன்றும் இடம்பெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டனர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கல் முறைக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அதற்கு முன்னதாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி புதன் கிழமை கொழும்பில் மீண்டும் ஒன்றுகூடி எடுக்கப்பட்ட இறுதித் தீர்மானத்தில் அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனப்பிரச்சினைக்கு சமஸ்டி ஆட்சிமுறைதான் தீர்வு என்றும் அதற்கு முன்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்திக் காண்பிக்க வேண்டுமென மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள சட்டம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினுடைய புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் குழுவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக வழங்கப்பட்ட நகல் யோசனையில், புதிய அரசியல் யாப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தியதோடு அதிகாரப் பரவலாக்கல் மாத்திரமே பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தேசம் என்பது முற்றாக நீக்கம் செய்யப்பட்டு 13 ஆவது திருத்தச் சட்டம் போன்றதொரு அதிகாரப் பரவலாக்கல் முறையே அந்த நகல் யோசனையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் சட்டத்தரணி சுமந்திரன்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மாத்திரமே கையொப்பமிட்டிருந்தார். மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. எஸ் சேனாதிராஜா. ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் ஆகியோரின் பெயர்கள் ஒப்பம் எனப் பதிவிடப்பட்டிருந்தாலும் அதில் அவர்கள் கையொப்பமிடவில்லை.

சம்பந்தன் கையொப்பமிட்டதொரு நிலையிலேயே அந்தப் பரிந்துரை அடங்கிய நகல் யோசனைகள் கையளிக்கப்பட்டுமிருந்தது.

இந்தவொரு நிலையில், 13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல என்றும், 13 தீர்வு அல்ல என்று மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோதே கூறியிருந்ததாகவும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தற்போது கூறுகிறார்.

அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்திய சுமந்திரன் தலைமையிலான குழுவில் நிர்மலா சந்திரகாசன் உள்ளடங்கியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டம் வினைத்திறன் கொண்டது எனவும் 13 ஐ விட தமிழர்களுக்கு வேறு தீர்வு அவசியமில்லையெனவும் நிர்மலா சந்திரகாசன் கட்டுரை எழுதியிருந்தார்

மகிந்த ராஜபக்சகூட வேண்டாமென்று கூறிய 13 ஐ நடைமுறைப்படுத்தச் தமிழ்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலா் கூடிப் பேசுவதாகவும் சுமந்திரன் கூட்டம் ஒன்றில் கிண்டலாகப் பேசிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

13 ஐ நடைமுறைப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர் என்றும் சுமந்திரன் அந்தக் காணெளியில் சொல்கிறார்.

ஆனால் கடந்த மாதம் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்திய சுமந்திரன் தலைமையிலான குழுவில் நிர்மலா சந்திரகாசன் உள்ளடங்கியிருந்தார். 13 ஆவது திருத்தச் சட்டம் வினைத்திறன் கொண்டது எனவும் 13 ஐ விட தமிழர்களுக்கு வேறு தீர்வு அவசியமில்லையெனவும் நிர்மலா சந்திரகாசன் கட்டுரை எழுதியிருந்தார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஐலண்ட் என்ற ஆங்கில நாளேட்டில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி அந்தக் கட்டுரையை நிர்மலா சந்திரகாசன் எழுதியிருந்தார்.

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க அரசாங்கம் அனைத்துக் கட்சிகளிடமும் யோசனைகளைப் பெற்றிருந்தவேளையில் நிர்மலா சந்திரகாசனின் அந்தக் கட்டுரை பிரசுரமாகியிருந்தது.

அத்துடன் சுமந்திரன் குழுவினர் அமெரிக்காவில் இருந்து கொழும்பு திரும்பிய ஒரு சில நாட்களில் அமெரிக்காவின் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பிரதான கட்சிகளின் வெளியுறவு சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இருவர், இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டுமென்றும் அது அதிகாரப் பகிர்வின் ஊடாகவும், பிரிக்கப்பட முடியாத இலங்கை என்ற அடிப்படையில் அமைய வேண்டுமெனவும் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.

அவர்களின் அந்தக் கூற்று, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை மறுப்பதாகவும், சமஷ்டிக் கோரிக்கையை நீக்கம் செய்வதாகவுமே அமைந்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில், சுமந்திரன் 13 பற்றிக் கூடிப் பேசுவோர் மீது காரசாரமாக ஏசுவதன் ஊடாகவும் இந்தப் 13 ஐ பெறவா தமிழர்கள் இவ்வளவு உயிர் தியாகங்களைச் செய்தார்கள் எனவும் வினா எழுப்பியிருந்தமை எந்த அடிப்படையில் என்ற சந்தேகங்கள் உண்டு.

கடந்த நவம்பா் மாதம் இரண்டாம் திகதி செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழ் திண்ணையில் இடம்பெற்ற 13 பற்றிய கலந்துரையாடலும், கொழும்பில் நடந்த கலந்துரையாடலும் இந்தியா விரும்புகின்ற 13 தான் அரசியல் தீர்வு என்பதைக் கோடிட்டு காட்டுகின்றது.

சுமந்திரனின் அமெரிக்கப் பயணமும் அந்தப் பயணத்தின் பின்னர் அமெரிக்க ஆளும் மற்றும் எதிர்த்தரப்பைச் சேர்ந்த பிரதான கட்சிகளின் வெளியுறவு சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இருவர் வெளியிட்ட கருத்தும் 13 போன்றதொரு அதிகாரப் பரவலாக்கமே தீர்வு என்பதைப் பறை சாற்றுகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதுதான் வேடிக்கை.

இலங்கை ஒற்றையாட்சி அரசிடம் இருந்து தங்கள் புவிசார் அரசியல் நலன்களைப் பெறும் நோக்கில், அமெரிக்க- இந்திய அரசுகள் வகுத்துள்ள வியூகத்தைப் புரிந்துகொள்ளாத அல்லது தெரிந்தும் தமது சொந்த நலன் அடிப்படையில் இயங்குகின்ற இந்தத் தமிழ்த்தேசியக் கட்சிகள், இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்புக்குள் அமுங்கிவிட்டனர்.

ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக எழக்கூடாது என்ற நோக்கில் கையாளப்படும் பிரித்தாளும் தந்திரங்களை இவர்கள் அறியாதவர்களும் அல்ல. ஆனால் தமிழர்கள் ஒரு தேசம், அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வெளிப்படுத்தி அதற்கான அங்கீகாரத்தைச் சர்வதேசத்திடம் கோருவதற்கான தற்துணிவற்றவர்களாகவே இவர்கள் காணப்படுகின்றனர்.

செல்வம் அணி 13 என்று கூறியும், சுமந்திரன் அணி உள்ளகச் சுயநிா்ணய உரிமை என்று சொல்லியும் இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்புகள் இருந்து வரக்கூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு மாத்திரமே வழி சமைத்துள்ளனர்.

இந்த அதிகாரப் பரவலாக்கத்தைக் கொழும்பில் உள்ள மத்திய அரசு எந்த நேரத்திலும் மீளப் பெறக்கூடியது என்பதற்குப் 13 இல் இருக்கும் குறைந்தபட்ச காணி, பொலிஸ் அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டமை தகுந்த உதாரணங்களாகும்.

முதலமைச்சராகப் பதவி வகித்திருந்தபோது இதனை அனுபவத்தில் புரிந்து கொண்ட விக்னேஸ்வரன்கூடப் பின்னாளில் சமஸ்டிதான் தீர்வு என்று பகிரங்கப்படுத்தியிருந்தார். ஆனால் தற்போது 13 பற்றிப் பேசுகிறார்.

இங்கே சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவுக்கு வேறொரு குழுவாகச் சென்று பேசிய பிரதான அணுகுமுறைக்குக் காரணம் என்னவென்றால், இலங்கை அரசு அமெரிக்க- இந்திய அரசுகளை தனித்தனியாகக் கையாள முற்பட்டுள்ளமையே.

இலங்கை அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்ததால் அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாதவொரு சூழலில் இலங்கை விவகாரத்தில் தனித்தனியாகச் சில வேலைத்திட்டங்களைச் செய்வதற்குத் தள்ளப்பட்டுள்ளன.

எனவே இந்த விவகாரம் தனித்தனியாகக் கையாளப்படுகின்றது என்றவொரு மாயைத் தோற்றம் உருவாகி இது போட்டியாகக் கையாளப்படலாமென்றும் தமிழர்தரப்பில் பேசப்படுகின்றது.

அத்துடன் ரஷியா ஜனாதிபதி புட்டின் புதுடில்லிக்கு வந்தால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முரண்பாடுகள் உருவாகிவிட்டதென்றும் ஜோ- பைடன் ஆட்சிக்கு வந்ததால், இலங்கை விவகாரம் குறித்த அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றம் வந்துவிட்டதாகக் கூறியும் அவசரப்பட்டுப் புரிந்து கொள்வது தவறு.

இலங்கை அரசு அமெரிக்க- இந்திய அரசுகளை தனித்தனியாகக் கையாள முற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவும் இந்தியாவும் தவிர்க்க முடியாதவொரு சூழலில் இலங்கை விவகாரத்தில் தனித்தனியாகச் சில வேலைத்திட்டங்களைச் செய்வதற்குத் தள்ளப்பட்டுள்ளன

இந்தத் தவறான புரிதலின் அடிப்படையிலேயே விக்னேஸ்வரன் போன்றோர் 13 பற்றிப் பேசப்படுகின்ற சந்திப்பில் கலந்துகொண்டிருக்கலாமோ என்ற சந்தேகங்களும் உண்டு.

ஆனால் இங்கே மற்றுமொரு வேடிக்கை என்னவென்றால், தேசம், சுயநிர்ணய உரிமை என்று மார்தட்டிக் கொண்டு, கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரன் போன்றவா்களைக்கூட அரவணைத்துத் தேச அரசியலுக்கான கட்டுமானங்களைச் செய்ய முடியாத தகுதியற்றவர்களாக மாறியுள்ளனர் என்பதே.

இருந்தாலும் வாக்குப் பெறும் அரசியலில் இருந்து தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான முன்னணியாகத் தன்னை மாற்றிக் கொள்ள கஜேந்திரகுமாருக்கு வரலாறு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

ஆனால் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் மீண்டும் மீண்டும் வழங்கப்பட்டபோதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிய அவருடை அரசியல் இந்தச் சந்தர்ப்பத்தையாவது சரியாகப் பயன்படுத்துமா என்பதும் கேள்வியே.