இந்திய இலங்கை ஒப்பந்தமா, பதின்மூன்றா என்பதில், அதிகாரப் பகிர்வுக்கு அப்பால் தமிழ்த் தேசியம்

சிறிதரன், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும், ஒருசேரக் கொடுத்த தமிழ்த் தேசியப் பாடம்

செல்வம் மட்டுமல்ல, மனோ கணேசனும் ஹக்கீமும் அறியவேண்டியது
பதிப்பு: 2022 ஜன. 02 21:49
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 14:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தித் தருமாறு இந்தியாவிடம் கோருவதை எதிர்த்தால் போதும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்காமல் இருக்கிறோம் என்று பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மதியாபரணம் சுமந்திரனும் தத்தமது நிலைப்பாட்டை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். கடந்த வருடம் ஜனவரியில் இன அழிப்பு விசாரணை கோருவதை விட ஜெனீவாவில் இருந்து பொறுப்புக்கூறலை வெளியே எடுத்தாற்போதும் என்று ஆரம்பத்தில் கொழும்பில் பாக்கியசோதி சரவணமுத்துவின் ஒழுங்கில் சந்தித்தபோது உடன்பட்டது போல அன்றி, இம்முறை சற்று வித்தியாசமாக, இவ்விருவரும் ஒரே நிலைப்பாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ளாமல், முரண்பட்டவாறு உடன்பட்ட விநோதம் நடந்திருக்கிறது.
 
ஒக்ரோபர் ஆரம்பத்தில் கஜேந்திரகுமார் செய்திருக்கவேண்டிய 13 ஆம் திருத்தச்சட்டத்தை மீண்டும் கோருவதற்கெதிரான கருத்துருவாக்கத்தை, காலங்கடந்து அவர் ஆரம்பிக்க முன்னரே சுமந்திரன் அதற்கு ஆப்பு வைத்துவிட்டார்.

பதின்மூன்றைப் பற்றிக்கொண்டு கரை சேருவதை விட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைப் பற்றிக்கொண்டு சமஷ்டி நோக்கிப் பயணிக்கலாம் என்று பேச்சளவில் சொன்ன சுமந்திரன், எழுத்தளவில் இன்னும் ஒருபடி மேலே சென்று, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும் அதிகமான 'ஒஸ்லோ தீர்மானம்' என்பதையும் எடுத்தாண்டு, 1987 இற்கும் பிற்பட்ட காலத்து நகர்வுகளையும் மேற்கோள் காட்டி, சுயநிர்ணய உரிமையின் 'உள்ளகப் பரிமாணம்' என்பதைச் சுட்டிக்காட்டி ரெலோவின் கடித வரைபுக்குள் தமிழரசுக் கட்சியின் பெயரிலான தனது நியாயப்பாடுகளைப் புகுத்தி இருந்தார்.

ஆனால், இதை ஏற்கும் பக்குவம் ரெலோவுக்கு இருந்ததோ இல்லையோ ஹக்கீம் போன்றவர்களுக்கு இருக்கவில்லைப் போலும். ஏன் என்றால் வடக்கு-கிழக்கு (தற்காலிக) இணைப்புப் பற்றி இந்திய-இலங்கை ஒப்பந்தம் சுட்டுவது அவர்போன்றவர்களுக்குக் கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய-இலங்கை ஒப்பந்த அடிப்படையில் கூட தமிழ்த் தேசியம் நகரவேண்டியதில்லை, அதற்கு அப்பாற்பட்டு நின்றே சமஷ்டிக் கோரிக்கையை நடைமுறைப்படுத்தித் தருமாறு வேண்டுவதே சாலப் பொருத்தமானது என்ற நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் தமிழரசுக்கட்சியின் சிவஞானம் சிறிதரன் ஞாயிற்றுக்கிழமை முழங்கியிருப்பது சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் ஒருசேர வழங்கப்படுகின்ற பாடமாக இருக்கிறது.

கஜேந்திரகுமார் அணி இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தாங்கள் நிராகரிக்கவில்லை என்றும் அதேவேளை, பதின்மூன்றை இனப்பிர்ச்சினைக்கான தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கொள்ளமுடியாது என்பதே தமது நிலைப்பாடு என்று குழப்பமாகக் குறிப்பிட்டு வருவதைத் தமிழ்த் தேசிய அரசியலை உற்று நோக்குவோர் கவனித்துள்ளார்கள்.

உண்மையில், 'உள்ளக சுய நிர்ணய உரிமை' என்று சிறிதரனும் சுமந்திரனும் வாதிடுவதை விடவும் பலமாக சுய நிர்ணய உரிமையைப் பற்றி வாதாடும் அறிவும் விளக்கமும் கொண்டவர் கஜேந்திரகுமார்.

அறிவிருந்தாலும் ஆற்றல் இருக்கவேண்டும். விருப்பமும் இருக்கவேண்டும்.

நடைமுறையில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் போதும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ரெலோ அண்மைக்காலங்களில் ஏற்படுத்திய தாங்கமுடியாத சலசலப்புக்கு ஈடாக எந்த ஒரு சலசலப்பையும் கஜேந்திரகுமார் அணி ஏற்படுத்த முடியாது இருந்துள்ளமை இங்கு உற்றுக் கவனிக்கப்படவேண்டியது.

சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் தேவைப்படும் அடுத்த அத்தியாயத்துக்கான தமிழ்த் தேசியப் பாடத்தை நடாத்துவதிலாவது தனது சல சலப்பை கஜேந்திரகுமார் காட்டுவாரா என்பதை இனிவரும் நாட்கள், அவருக்கும் அவரது கட்சியினருக்கும், விட்டுவைத்திருக்கின்ற சந்தர்ப்பமும் சோதனையுமாக இருக்கப்போகிறது.

சிறிதரனுக்கும், சுமந்திரனுக்கும் மட்டுமல்ல, செல்வம், சித்தார்த்தன், சுரேஷ், ஹக்கீம், மனோ கணேசன் என்று பலருக்கு, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த் தேசியம் என்பதற்கும், தமிழ்-பேசும் மக்களிடையே அகில இலங்கை ரீதியில் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் புரிந்துணர்வு என்பதற்குமிடையில், ஒன்றை ஒன்று குழப்பாத வகையில் ஏற்படுத்தப்படவேண்டிய அரசியல் புரிந்துணர்வு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை உணரவைப்பதில் தனது பங்களிப்பு என்ன என்பதை நடை முறையில் நிலை நிறுத்த வேண்டியது கஜேந்திரகுமாரின் பொறுப்பாகும்.

இதைத் தட்டிக்கழித்துவிட்டு, இரண்டு கதிரைகளை விடப் பத்துக் கதிரைகள் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமிழ்த் தேசியம் பற்றிய ஒன்றிணைந்த கோரிக்கை வைப்பது தொடர்பான பொறுப்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டிவிட்டு அவர் மீண்டும் மதில் மேல் பூனையாகத் தப்பித்துக்கொள்ளப்போகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

2010 ஆம் ஆண்டு அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றதற்குப் பதிலாக, சிறிதரன் போல உள்ளிருந்தே கூடுதலாகச் சாதிக்கக் கூடிய வாய்ப்பும் கூட்டமைப்புக்குள்ளே இருக்கிறது என்பதை, ஒருவகையில் செல்வமும், இன்னொருவகையில் சிறிதரனும் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

இதுவே, சிறிதரனின் யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் சந்திப்பின் எதிரொலியாகக் கேட்கும் அசரீரி ஆகின்றது.