சுமந்திரன்- சாணக்கியன்--

வடக்குக் கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவில் சாணக்கியத்தை இழந்த சாணக்கியர்கள்

கனடாவில் பேசினார்கள் ஆனால் வடக்கு கிழக்கில் செயற்பாடுகளே இல்லை.
பதிப்பு: 2022 ஜன. 05 08:21
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஜன. 05 20:45
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த்தேசியம் என்பதற்கும், தமிழ்-பேசும் மக்களிடையே அகில இலங்கை ரீதியில் இருக்கவேண்டிய குறைந்தபட்சப் புரிந்துணர்வு என்பதற்குமிடையில், ஒன்றை ஒன்று குழப்பாத வகையில் உருவாக்கப்பட வேண்டிய அரசியல் புரிந்துணர்வு, எவ்வாறு இருக்கவேண்டும் என்ற விளக்கங்கள் எதிர்வரும் காலங்களில் தீவிரப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வடக்குக் கிழக்கு மாகாணத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் இந்த விடயம் தொடர்பான புரிதலைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
 
ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களோடு வடக்குக் கிழக்கு முஸ்லிம்களையும் சமப்படுத்துவதற்காகத் தம்மை ஒரு தேசிய இனம் என்றும், சிங்கள ஆட்சியாளர்களோடு அமைச்சுப் பதவிகளுக்காகப் பேரம் பேசும்போது தம்மை சிறுபான்மைச் சமூகம் எனவும் அடையாளப்படுத்தும் குழப்பமான இரட்டை நிலைப்பாடு முஸ்லிம் கட்சிகளிடம் உண்டு

குறிப்பாக முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கில் தமக்கான ஒரு பிரதேசத்தைத் தமது பாரம்பரிய மண்ணைத் தமது ஆளுகைக்குள் வைத்திருப்பதற்காக தமிழர்களோடு இணைந்து பயணிக்கப் போகிறார்களா அல்லது தொடர்ந்தும் சிறுபான்மைச் சமூகமாக இருந்து ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுக்குத் தலையிடியாக இருக்கப் போகிறார்களா என்பதை வெளிப்படையாகவே கூற வேண்டும்.

வடக்குக் கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகள் என்பது வேறு.

ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களோடு வடக்குக் கிழக்கு முஸ்லிம்களையும் சமப்படுத்துவதற்காகத் தம்மை ஒரு தேசிய இனம் என்றும், சிங்கள ஆட்சியாளர்களோடு அமைச்சுப் பதவிகளுக்காகப் பேரம் பேசும்போது தம்மை சிறுபான்மைச் சமூகம் எனவும் முஸ்லிம்கள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இதுதான் இங்கே குழப்பமான நிலைமை.

இவ்வாறான குழப்பமான இரண்டு நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் தமக்கான மண்ணைப் பாதுகாக்கும் அரசியலில் ஈடுபடவே முடியாது. வடக்குக் கிழக்கு முஸ்லிம்கள் என்றவொரு நிலைப்பாட்டைத் தனித்துவமாக எடுக்குமொரு சூழலிலேதான், முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் தமக்கான தேசியத்தைத் தக்க வைக்க முடியும்.

அதற்காகத் ஈழத்தமிழர்களோடு சேர்ந்து பயணிக்க வேண்டியதொரு அரசியல் சூழல் உண்டு என்பதை முதலில் முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் புரிதலை ஏற்க வேண்டும். அதனையே முஸ்லிம்கள் மத்தியில் பகிரவும் வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இலங்கை நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கொவிட்- 19 நோய்த் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்யாமல் தகனம் செய்யும் அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்துப் பேசினார்.

அதனை முஸ்லிம்கள் வரவேற்றனர். அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டுக் கனடாவுக்குப் போய் அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள், முஸ்லிம்களை அணைத்துச் செல்ல வேண்டிய அவசியம் தொடர்பாகவும் போதித்தார்.

ஆனால் அதே சாணக்கியன் அரச தொலைக்காட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஷீர் அகமட்டுடன் முரண்பட்டார். கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக நஷீர் அகமட் கூறியபோது, தமிழ் மக்களின் காணி அபகரிக்கப்படுவதாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார். அதனால் இருவருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

ஆகவே முஸ்லிம்களை அரவணைத்துத் தமிழர்கள் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட வேண்டுமெனக் கனடாவில் போதித்த சாணக்கியன், நடைமுறையில் அதற்காகச் செய்த வேலைத் திட்டங்கள் என்ன என்பது இங்கே பிரதான கேள்வி.

வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக அங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்குச் சாணக்கியன் வழங்கிய அரசியல் விழிப்புணர்வு என்ன? கிழக்கில் முஸ்லிம் மக்களைச் சந்தித்து உரையாடினாரா? தமிழ், முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்படுவதைத் தடுப்பதற்கான அரசியல் செயற்பாடுகளைக் கூட்டாக மேற்கொண்டாரா?

தயாரிப்புகள் எதுவுமே இல்லாதவொரு பின்னணியில் தமிழர்கள் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல வேண்டுமெனச் சாணக்கியன் கனடாவில் பேசுவதும் தொலைக்காட்சி விவாதங்களில் முரண்படுவதும் வெறுமனே அரசியல் சலசலப்பு மாத்திரமே

கிழக்கில் தமிழர்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இரண்டு சமூகங்களையும் அழைத்துப் பேசினாரா? கல்முனையில் தமிழ்ப் பிரதேச செயலகம் அமைக்கும் முயற்சிக்கு முஸ்லிம்கள் தடையாக இருப்பது தொடர்பான திறந்த உரையாடல்களை சாணக்கியன் நடத்தினாரா?

முஸ்லிம்கள், அவ்வாறு தடுப்பதற்கும் தமிழர்கள் அவ்வாறு தனியான பிரதேச செயலகம் ஒன்றைக் கோருவதற்குமான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை ஏதாவது தேடல்கள் நடந்ததா?

இலங்கை ஒற்றையாட்சி அரசு கிழக்கில் தமிழ்- முஸ்லிம் உறவைப் பிரிக்க காலம் காலமாக மேற்கொண்டு வரும் இரகசிய மற்றும் வெளிப்படையான நகர்வுகள் குறித்து சாணக்கியன் அம்பலப்படுத்தினாரா?

பிரித்தாளும் தந்திரத்திற்குள் தமிழ்- முஸ்லிம்களில் பலர் எடுபட்டுப் பாரிய சிக்கல்களை புதிது புதிதாக உருவாக்கி வரும் சூழலில், அதனைத் தடுப்பதற்குச் சாணக்கியன் கையாண்ட உத்தி என்ன?

ஆகவே தயாரிப்புகள் எதுவுமே இல்லாதவொரு பின்னணியில் தமிழர்கள் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல வேண்டுமெனக் கனடாவில் பேசுவதும் தொலைக்காட்சி விவாதங்களில் முரண்படுவதும் வெறுமனே சலசலப்பு மாத்திரமே. செல்பி எடுத்து முகநூலில் போட்டுப் பிரபல்யம் தேடுவது போன்ற செயற்பாடுகள் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதைச் சாணக்கியன் முதலில் உணர வேண்டும்.

அத்துடன் தனது பாட்டனார் இராசமாணிக்கம் கிழக்கில் முஸ்லிம் மக்களோடு எவ்வாறான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்பதையும் அதற்கு முன்னரான தலைவர்கள் கிழக்கில் முஸ்லிம்களோடு இணைந்து செயற்பட்டபோது எழுந்த சிக்கல்கள் பற்றிய வரலாறுகளையும் அறிந்து சமகாலத்தில் எவ்வாறான தமிழ்- முஸ்லிம் உறவை உருவாக்கலாமென்பது குறித்து ஆலோசிக்கவும் வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாகக் கிழக்கு முஸ்லிம் மக்களுக்கு இருக்கும் பயத்தைப் போக்க வேண்டும். அவ்வாறான எந்தவொரு அரசியல் செயற்பாடுகளும் இன்றி நாடாளுமன்றத்தில் பேசுவதும். வெளியே மேடைகளில் முழங்குவதும் சலசலப்பு அரசியலோடு இணைந்த வெறும் வாக்கு அரசியல் மாத்திரமே.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டதொரு பின்னணியில், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று தமிழ்- முஸ்லிம் மக்களைச் சந்தித்துப் பேச வேண்டும்.

அவ்வாறான அரசியல் வேலைத்திட்டங்கள் மூலமாக கிழக்கில் முஸ்லிம் மக்களுடனான உறவையும், தமிழ் மக்களுக்கான புரிதலையும் முரண்பாட்டில் உடன்பாடாக வளா்த்தெடுக்கலாம்.

இவ்வாறான வேலைத் திட்டங்கள், அரசியல் பயிற்சிகள் இல்லாததாலேயே கிழக்கில் மாத்திரமல்ல வடக்கு- கிழக்குத் தமிழ்- முஸ்லிம் உறவுக்கான இடைவெளி அதிகரித்துச் செல்கின்றது. இதனைச் சட்டத்தரணி சுமந்திரனும் உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்குக்கு வெளியே உள்ள தமிழ்- முஸ்லிம் மக்களின் நலன்கள் வேறு என்பதைப் புரிய வைக்க வேண்டிய காலகட்டமிது.

'மாகாண சபைத் தேர்தலையே நடத்தவிடாமல் தடுத்தவர் சுமந்திரன். ஆனால் தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக மாத்திரம் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்புகிறார்' என்று முஸ்லிம் காங்கிரஸின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் கரிஸ் குற்றம் சாட்டுகிறார். கிணடலடிக்கிறார்.

ஆகவே இதன் பின்னணியில், முழு இலங்கைத்தீவுக்குமான அரசியல் தீர்வு, ஜனநாயகம் என்று கூறிக் கொண்டு வடக்குக் கிழக்குத் தமிழ்- முஸ்லிம் மக்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் கைங்கரியங்களில் தமிழரசுக் கட்சியோ, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற முன்னாள் இயக்கங்களோ ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களோடு நட்பாக இருக்கிறார் என்பது வேறு. ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வு என்பதை விடுத்து, முழு இலங்கைத்தீவுக்குமான (அனைத்து மக்களும் ஏற்கக்கூடிய) அரசியல் தீர்வு, ஜனநாயகம் என்று கூறி வருவதால், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்கள் கீழிறங்குவதை மனோ கணேசன் உணரத் தலைப்பட வேண்டும்.

வடக்குக் கிழக்கு இணைந்த நிரந்தர அரசியல் தீர்வு என்பதை விடுத்து, முழு இலங்கைத்தீவுக்குமான அரசியல் தீர்வு, ஜனநாயகம் என்று கூறி வருவதால், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை பற்றிய பேச்சுக்கள் கீழிறங்குவதை மனோ கணேசன் உணரத்தலைப்பட வேண்டும்

இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்- கொழும்பு என நடத்தப்பட்ட மூன்று சுற்றுக் கூட்டங்களும், அதன் பின்னர் கொழும்பில் சுமந்திரனின் இல்லத்தில் நடத்தப்பட்ட கூட்டத்திலும் வெளிப்பட்ட விடயங்கள், வடக்கு கிழக்கு இணைந்த அரசியல் தீர்வுக்கான ஆபத்தாகவே தென்பட்டன.

கொழும்பில் நடந்த மூன்றாவது கூட்டத்தில் மோடிக்கு அனுப்பவிருந்த கடிதத்தின் பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் இந்திய- இலங்கை ஒப்பந்தமும் என்று குறிப்பிட்ட பின்னரானதொரு சூழலிலேயே, வடக்குக் கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு முற்றாகவே நீக்கம் செய்யும் நிலை உருவாகியிருந்தது.

அதற்கான காரணங்களையும் மனோ ஹக்கீம் போன்றவர்கள் உணரத் தலைப்பட்டால், அல்லது அதனை வெளிப்படுத்தினால் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாகவே அமையும்.

இதற்கான வீட்டு வேலைத் திட்டங்களில் (Home work) ஈடுபட வேண்டியது தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரமல்ல வடக்குக் கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புகளுக்கும் இந்தப் பொறுப்பு உண்டு.

வடக்குக் கிழக்கு முஸ்லிம் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழ் மக்களோடு இணைந்து பயணித்தால் மாத்திரமே அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியுமென பேராசிரியர் அமீர் அலி கூர்மை இணையத்தளத்திற்கு கொழும்பில் 2018 ஆம் ஆண்டு வழங்கிய பேட்டியில் சொல்லியிருந்தார்.

அந்தப் பேட்டி முழுமையாக இந்தக் கட்டுரையோடு இங்கு பிரசுரமாகிறது.