நரேந்திரமோடியிடம் கையளிக்கப்படும் ஆவணத்தில்

பிளவுபட்டுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளை இணைந்து கையாளும் வெளிச் சக்திகள்

இலங்கையும் திட்டமிடலில் தாக்கத்தைச் செலுத்துகின்றது
பதிப்பு: 2022 ஜன. 09 07:30
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஜன. 13 06:53
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் பின்னால் இலங்கையின் திட்டமிடலும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழர்கள் 13 ஐ மாத்திரம் கேட்டால் போதும் என்ற மன நிலை இலங்கையிடம் உண்டு. இதற்காகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறுபட்ட தமிழ்த்தரப்புகளைக் கையாண்டு எடுக்கப்பட்டிருந்த பல முயற்சிகள் தோல்வி கண்டதன் பின்னணியில், புதிய முயற்சியின் மூலம் இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தக்கூடிய இந்த அணுகுமுறையைச் செயற்படுத்தியிருக்க வாய்பில்லாமில்லை. தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிடாமல் தமிழ்த்தேசியக் கட்சிகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளமையும், குறித்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற வேண்டுமென்ற அவசரத்தையும் காண்பித்திருக்கிறது.
 
தமிழ்த்தேசியம் சார்ந்து முழுமையாக வெற்றிபெற்ற ஆவணமாக இல்லாமலும், தமிழ்த்தேசியத்தை ஒற்றையாட்சிக்குள்ளேயே குறுக்கிவிட வேண்டுமென நினைக்கும் சக்திகளுக்கு முழு வெற்றிதராத ஒரு ஆவணமாகவும், இது திரிங்சங்கு நிலையிலேயே நிற்கின்றது

அத்துடன் தமிழ்த்தேசியம் சார்ந்து முழுமையாக வெற்றிபெற்ற ஆவணமாக இல்லாமலும், தமிழ்த்தேசியத்தை ஒற்றையாட்சிக்குள்ளேயே குறுக்கிவிட வேண்டுமென நினைக்கும் சக்திகளுக்கு முழு வெற்றிதராத ஒரு ஆவணமாகவும், இது திரிங்சங்கு நிலையிலேயே நிற்கின்றது.

கொழும்பில் கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையப்படட ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கைச்சாத்திட்டிருந்தால், அது ஓரளவுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஏனெனில் சுயநிர்யணய உரிமை என்ற சொல் ஆவணத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அத்துடன் 13 இற்கு அப்பால் என்று சிங்கள ஆட்சியாளர்கள் மாறி மாறி ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பங்களில் உறுதியளித்த விடயங்கள் ஆவணத்தில் எடுத்துக் கையாளப்பட்டுமிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. (ஆனால் கைச்சாத்திடப்பட்ட உண்மையான ஆவணம் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை)

ஆகவே ஒவ்வொரு தேர்தல்களின்போதும் சொல்லிக் கொண்டு வந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில், எந்தெந்த அடிப்படையில் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களைக் குறைத்துக் கொண்டு வந்தார்களோ, அந்த ஓட்டத்துக்குள்ளேயே இந்த ஆவணத்தையும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொண்டு வந்திருக்கிறது.

அப்படித் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் தமிழ்த்தேசிய சக்திகளை இரண்டு கூறுகளாக இனிமேல் அடையாளப்படுத்தப்போகின்றது. அதாவது ஒற்றையாட்சியில் இருந்து அதிகாரப் பரவலாக்கல் ஊடாகச் சமஸ்டியை நோக்கிப் பயணிப்பவர்கள் ஒரு பிரிவாகவும், ஒற்றையாட்சி இல்லாமல் சமஸ்டியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்ற தரப்புகள் மற்றுமொரு பிரிவாகவும் இயங்கப் போகின்றன.

இரண்டு பிரிவுகளையே இந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கியிருக்கிறது எனலாம்.

இந்தச் சூழலில், வடக்குக் கிழக்குத் தாயக மக்களை அடிப்படையாகக் கொண்டு இரு பிரிவுகளிலும் புலம்பெயர் மக்களுடைய ஆதரவும், தமிழ் நாட்டின் ஆதரவும் எந்தப் பிரிவுக்கு இருக்கப் போகின்றது? இதனை யார் பொறுப்பெடுத்துச் சாமர்த்தியமாக நகர்த்தப் போகின்றார்கள்? என்ற இந்த இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அத்துடன் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் மேலும் ஏற்படப் போகின்ற பிளவுகள், அதனை இலங்கை அரசு கையாளவுள்ள ஆபத்தான வழிமுறைகள் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத் தலைமையைத் தீர்மானிக்கப் போகும் சக்தி எது என்ற கேள்விகளும் தற்போதிருந்தே எழ ஆரம்பித்துள்ளன.

அதேவேளை இரண்டு ஆசனங்களை வைத்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எந்தவொரு மாற்றுச் செயற்பாட்டையும் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை. அது மாத்திரமல்லாது தமிழ்த்தேசியத்தில் பிரதான தரப்புகளாக இருக்கக் கூடிய பதினொரு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இதுவரை புதிதாக எந்தவொரு மாற்றையுமே ஏற்படுத்தவில்லை.

இந்த ஆவணம் தமிழ்த்தேசிய சக்திகளை இரண்டு கூறுகளாக இனிமேல் அடையாளப்படுத்தப்போகின்றது. அதாவது ஒற்றையாட்சியில் இருந்து அதிகாரப் பரவலாக்கல் ஊடாகச் சமஸ்டியை நோக்கிப் பயணிப்பவர்கள் ஒரு பிரிவாகவும், ஒற்றையாட்சி இல்லாமல் சமஸ்டியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்ற தரப்புகள் மற்றுமொரு பிரிவாகவும் இயங்கப் போகின்றன

இந்த கட்சிகள் எல்லாமே தமிழ்த்தேசியம் என்ற பெயரில் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. முக்கியமாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஒரு மாற்று நடவடிக்கையை முன்வைத்து நகர்த்த முடியாதவொரு சூழலில் இருப்பதால், அடுத்த கட்டத் திட்டமிடல் எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதிலே ஒரு கேள்விக்குறி உண்டு.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்திருக்கிற தேர்தல் விஞ்ஞாபனம் சொல்லுகின்ற விடயங்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகின்ற விடயங்களும், அதேபோன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வைத்திருக்கின்ற தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்டிருக்கின்ற அரசியல் தீர்வுக்கான வரைபையும், தமிழரசுக் கட்சியால் கையளிக்கப்பட்டிருக்கின்ற தீர்வுக்கான வரைபும் இப்போது நரேந்திரமோடியிடம் கையளிக்கப்படப் போகின்ற ஆவணமும் வெவ்வேறுபட்டவை.

இந்த மூன்று வகையான ஆவணங்களையும் வைத்துக் கொண்டே ஈழத்தமிழர்களின் தாயகத்தில் இருக்கக் கூடிய அரசியல் ஓட்டம் இருக்கப் போகின்றது என்றால், புலம்பெயர் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கப் போகின்ற அடிப்படைகள் தொடர்ந்தும் என்னவாக இருக்கப் போகின்றன என்பது இங்கே பரிசோதனைக்குள்ளாகும் ஒரு அபாயகரமான கட்டத்திற்கு மாறப்போகின்றன.

அதாவது 2002 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக் காலத்தில் ஏற்பட்டதொரு சோதனை போன்ற பரிசோதனைக் காலகட்டம், மீண்டும் தமிழர் அரசியலில் சர்வதேசச் சட்டரீதியான விடயங்களில் உருவாகப்போகின்றதெனலாம்.

குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆணையாளரின் எழுத்துமூலமான அறிக்கையைக் குறிவைத்தே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்தியாவுடன் இணங்கிப் போதல் என்ற தன்னுடைய நகர்வுகளை கனகச்சிதமாக இலங்கை செய்து முடித்திருக்கின்றது.

தற்போதைய நகர்வுகள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், மிலிந்தமொறகொட போன்ற சிங்கள இராஜதந்திரிகளுக்கு வெற்றியெனலாம். அதேநேரம் ஆழமான தமிழ்த்தேசிய நிலைப்பாட்டுக்கு விழுந்துள்ள பலமான அடியாகவும் இதனை அவதானிக்க முடியும்.

இந்த நிலையைத் தாண்டிப் போவதற்குத் தமிழ்த்தேசிய அரசியலில் இருப்பவர்கள் சாதுரியமாக இயங்க வேண்டிய அவசியமான காலமிது என்பதை உணர்த்தியிருக்கின்றது.

அதற்காக ஒருவரின் அழிவில் இருந்து மற்றையவர் அரசியல் செய்ய வேண்டுமென்கின்ற அணுகுமுறை முற்றாகவே தவிர்க்கப்பட வேண்டும்.

குறிப்பாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய மற்றையவர்களின் அழிவில் இருந்துதான் தானும் எழும்ப முடியுமென நினைக்கும் அணுகுமுறை அடிப்படையில் தவறானது.

2011 ஆம் ஆண்டு பரந்தன் ராஜன் தலைமையில் மாநாடு ஒன்று புதுடில்லியில் நடைபெற்றபோது, தமிழ்த்தேசியத்துக்குச் சோதனை தரக்கூடிய விவாதம் அங்கே எழுந்திருந்தது.

சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு வேறு வரைவிலக்கணங்களுக்குள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புச் செல்லவிருந்தபோது, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் அந்தக் கூட்டத்தில் பங்குப்பற்றிச் சரியான கொள்கைகளை அங்கு தெளிவுபடுத்திய பின்னர் வெளி நடப்பச் செய்திருந்தது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் எதிர்காலத்தில் மேலும் புறக்கணித்துவிட்டுச் செல்லக்கூடிய அபாயமும் உண்டு. அவ்வாறான ஆபத்துகள் உள்ளதெனத் தெரிந்து கொண்டும், முன்னணியால் ஒரு வழிவரைபடத்தைத் தெளிவாக முன்வைக்க முடியாமலும் சாணக்கியமான அரசியலைச் செய்ய முடியாத சூழலும் காணப்படுகின்றது

அதுபோன்றதொரு அணுகுமுறையை 13 பற்றிய கூட்டங்களிலும் பங்குப்பற்றிச் செய்யாமல், 13 ஐ மட்டும் எதிர்க்கின்றோம் என்று வெளியில் நின்று கூறிவிட்டு, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிக்கவில்லையென முன்னணி வியாக்கியானம் செய்திருக்கிறது.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை என்று சொல்வதன் ஊடாக ஒப்பந்தத்தின் மூலம் முன்னெடுக்கவுள்ள அரசியலுக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அங்கீகாரம் கொடுப்பதாகவே அந்த வியாக்கியானம் பொருள்கோடல் செய்கிறது.

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் எந்தவொரு அடிப்படையிலும் தமிழ்த் தேசியத்துக்கான அங்கீகாரம் பலமாக இல்லாதொரு பின்னணியில், அதனை மீண்டும் புதுப்பிப்பதற்கான வலியுறுத்தலைச் செய்யாமல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெறுமனே விமர்சனத்தை மட்டும் முன் வைத்துவிட்டுச் சென்றிருக்கிறது.

காத்திரமான சமஸ்டி ஆட்சி முறைக்குரிய தன்மையை இலங்கை ஒற்றையாட்சிக்குள் இருந்து சாத்தியப்படுத்த முடியாதென்றால், அதனை எவ்வாறு சாத்தியமாக்க முடியும் என்ற வழிவரைபடத்தைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஏலவே தயாரித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவ்வாறான தயாரிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

சமஸ்டிக்கான வழிவரைபடம் ஒன்றைத் தமிழரசுக் கட்சி குறிப்பாக சுமந்திரன் அணி முன்வைக்க முயல்கிறது. ஆனால் முன்னணிக்கு இதுவரை அவ்வாறான நோக்கங்கள்கூட இருப்பதாகவும் தெரியவில்லை. ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளை எந்த அடிப்படையில் நிராகரிக்கின்றோம். எதனை ஏற்க முடியாது என்று இதுவரை அர்த்த புஷ்டியான விளக்கம் கொடுக்கவுமில்லை.

சரியான தெளிவுபடுத்தலைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி போன்று மாற்றுத் தளத்தில் செயலாற்றுவோருக்கே அதிகம் உண்டு. மற்றையவர்களுடைய அழிவில் இருந்து எழுவோம் என்று சிந்திக்கின்றபோது, அந்த அழிவு என்பதில் இலாபம் தேடுகின்ற சக்தியாக இலங்கை ஒற்றையாட்சி அரசும் சிங்கள எதிர்க்கட்சிகளும், இலங்கை அரசாங்கத்தின் முகவர்களாக இருக்கக்கூடிய தமிழ் பேசும் அரசியல்வாதிகள் தலை நிமிர்வதுமே மேலோங்கும்.

அத்துடன் அபிவிருத்தி அரசியல் மூலம் தமிழ் மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளைத் தருகின்றோம். நஷ்டஈடுகளை வழங்குகின்றோமெனக் கூறிச் சர்வதேச நீதியை மறுதலிக்கும் நடவடிககைகளில் ஈடுபட்டு வரும் டக்ளஸ், அங்கஜன், சிவநேசத்துரை சந்திரகாந்தன் போன்றவர்களின் வாக்கு வங்கிகள் விஸ்தரிக்கப்படும் ஆபத்தும் உருவாகும்.

வடக்குக் கிழக்கில் தமிழ்த்தேசியம் என்பது 22 நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது 13 நாடாளுமன்ற உறுப்பினர்களாகச் சுருங்கியுள்ளது.

வடக்குக் கிழக்கில் உள்ள 29 ஆசனங்களில் குறைந்தது 15 ஆசனங்களைப் பெற்றால் மாத்திரமே தமிழ்த்தேசியம் என்பது குறைந்த பட்சம் பலமடையும்.

ஆகவே தமிழ்த் தேசியத்துக்காக 15 உறுப்பினர்களைக்கூட பெறமுடியாதவொரு பின்னணியில் 13 உறுப்பினர்களில் இருந்து மேலும் பல பிரிவுகளாகத் தமிழ்த்தேசியம் தற்போது சிதறுண்டுள்ளது.

தமிழ்த் தேசியத்தைப் பலமாக வைத்துக் கொண்டுதான் அடுத்த கட்டமாக எதிர்கொள்ள வேண்டும். அதற்காக ஒன்றினைந்த நிலைப்பாடு என்பது மிகவும் முக்கியமானது கொள்கை எவ்வளவு முக்கியமோ, அதேபோல ஒன்னைந்து இதை நகர்த்திக் கொண்டு செல்வதும் மிக மிக அவசியமானது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இரண்டு அணிகளும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு என்ற மற்றுமொரு இரண்டு அணிகளுமாகப் பிரிந்து நிற்பதால், தமிழ்த்தேசியத்தை முன் நகாத்துவது எப்படி என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டும்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த இரண்டுபேருடை கருத்துக்களையும் எதிர்காலத்தில் மேலும் புறக்கணித்துவிட்டுச் செல்லக்கூடிய அபாயமும் உண்டு.

அவ்வாறான ஆபத்துகள் உள்ளதெனத் தெரிந்து கொண்டும், முன்னணியால் ஒரு வழிவரைபடத்தைத் தெளிவாக முன்வைக்க முடியாமலும் சாணக்கியமான அரசியலைச் செய்ய முடியாத சூழலும் காணப்படுகின்றது.

அதனை மாற்றீடு செய்வதற்கான சமூக எழுச்சியும் சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வுகளும் மக்கள் மத்தியில் உருவாகாதவரை, தமிழ்த்தேசியம் என்பது இலங்கைத்தீவிலே தலையெடுப்பது மிகவும் சிக்கலாக இருக்கும். சமீபத்திய நாட்களிலே தமிழ்த்தேசியம் என்பது மிகவும் எச்சரிக்கையான சவாலை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாகச் சிறுபான்மை மக்கள் அல்லது சிறுபான்மை என்று குறைத்து அதாவது வடக்குக் கிழக்கில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் போராட்டங்களை நடத்திய தமிழ்த்தேசியம் என்பது, மலையக- இஸ்லாமிய மக்களைப் போன்று குறைந்தபட்ச புரிந்துணர்வுக்கு வரவேண்டும் என்ற நெருக்குவாரமும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

ஆகவே வடக்குக் கிழக்கு என்ற அடிப்படையிலும் தமிழ்த்தேசியம் என்ற முறையிலும் அந்தச் சிந்தனையை பலப்படுத்த வேண்டிய அவசரத் தேவையே தற்போது எழுந்திருக்கின்றது.

திம்புக் கோட்பாட்டில் இருந்து மோடியிடம் கையளிக்கவுள்ள ஆவணம் குறைந்துள்ளது என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது

மிக முக்கியமாக தமிழ்பேசும் முஸ்லிம்கள் விடயத்திலே அவர்களை வடக்கு கிழக்கு இணைப்புக்கு ஆதரவாகவும், தமிழ்த்தேசியத்தை அங்கீகரித்துப் போகின்ற தன்மையோடும், அதேநேரம் முஸ்லிம்களின் உரிமைகளைச் சரியான சமன்பாட்டுக்குள் கொண்டு வருவதிலேயேயும் கவனம் தேவை.

முஸ்லிம்கள் இதுவரையும் காத்திரமாக எதையும் செய்யாதவர்கள். எதிர்காலத்தில் செய்வார்களா என்பதும் சந்தேகமானதொரு சூழலில் இவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த்தேசிய சக்திகளுக்கே உண்டு.

தேசம் என்ற சொல் விலக்கப்பட்டுள்ளது. சுயநிர்ணய உரிமை உள்ளக சுயநிர்ணய உரிமை என்றும் சுருக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்ளக சுயநிர்ணய உரிமையைக்கூட இலங்கை அரசு பல முறை மறுத்திருக்கின்றது. மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்ற ஒரே பாதையில், திரும்பப் பயணிப்பதால் யாருக்கு பயன் என்ற கேள்வியை இங்கே முன்வைக்க வேண்டிய சூழல் உண்டு.

இதன் காரணங்களினாலேயே திம்புக் கோட்பாட்டில் இருந்து மோடியிடம் கையளிக்கவுள்ள ஆவணம் குறைந்துள்ளது என்ற கருத்தும் வெளிப்பட்டுள்ளது.