புவிசார் நலன் அடிப்படையில், இந்திய அரசின் நிதி- ஆனால்

இலங்கையில் நல்லிணக்கம் என்பது தமிழர் எதிர்ப்பு நிலையே

சர்வதேசம் கூறுகின்ற பொறுப்புக் கூறலும் தேவையில்லை என்பதே ஒற்றையாட்சியின் நிலைப்பாடு
பதிப்பு: 2022 ஜன. 22 06:29
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 24 09:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
புவிசார் அரசியல் நலன் அடிப்படையில், பெருமளவு நிதிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் சூழலில், சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த இலங்கை ஒற்றையாட்சி அரசு தனது மொழியில் கூறுகின்ற நல்லிணக்கம் என்பது தமிழர் எதிர்ப்பு நிலைதான் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரை புடம்போட்டுக் காண்பித்துள்ளது. சர்வதேசம் கூறுகின்ற பொறுப்புக் கூறலைக்கூடச் செய்யமாட்டேன் என்பதையும் கோட்டாபய வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது 'பொறுப்புக் கூறல்' என ஒன்று இல்லை, அது வெறுமனே உள்ளகப் பிரச்சனைதான் என்றே சர்வதேசத்தை நோக்கி அவர் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.
 
அமெரிக்க- இந்திய அரசுகள் நல்லிணக்கம் பற்றித் தமிழர்களுக்குப் போதிக்கும் அளவுக்கு சிங்கள மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளைக் கொடுக்கத் தவறியதன் பின்னணியில் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாக்கும் கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர் என்பதைச் சர்வதேசம் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும்

அமெரிக்க- இந்திய அரசுகள் நல்லிணக்கம் பற்றித் தமிழர்களுக்குப் போதிக்கும் அளவுக்கு சிங்கள மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளைக் கொடுக்கத் தவறியதன் பின்னணியில் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாக்கும் கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர் என்பதைச் சர்வதேசம் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டுமென அவதானிகள் கருதுகின்றனர்.

1983இல் ஜே.ஆர் ஜயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையும் அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளிலும் மாறி மாறிப் பதவிக்கு வந்த பிரதான சிங்கள அரசியல் கட்சிகள், சமாதானத்துக்கான போர் என்ற வாசகங்களுடன் அல்லது நல்லிணக்கம் என்ற பெயரில் மேற்கொண்ட செயற்பாடுகள் அனைத்துமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாக்கும் அரசியல்தான் என்பது கண்கூடு.

போர் நடைபெற்ற முப்பது ஆண்டுகளிலும் சரி, அதன் பின்னரான பன்னிரெண்டு ஆண்டுகளிலும் சரி இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள். நன்கொடைகள் எல்லாமே புவிசார் அரசியல் நோக்கம் கொண்டது என்பதன் பின்னணியில், ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் தமது சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அனைத்து அரசியல் அபிலாஷைகளையும் இழந்து நிற்கின்றன என்ற உண்மை அமெரிக்க- இந்திய அரசுகளுக்குப் புரியாததல்ல.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட்ட ஒரு சூழலில், அதன் இலாபங்களை இலங்கை பெறுகின்றது. ஆனால் இலங்கைத்தீவில் வாழுகின்ற ஈழத் தமிழர்களும் ஏனைய சமூகங்களும் எப்படி இனரீதியாக ஒதுக்கப்படுகின்றன என்பதை கோட்டாபயவின் கொள்கை விளக்கவுரையின் பின்னரான சூழல் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

சீனாவை மையப்படுத்திய இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்க- இந்திய அரசுகள் மிகவும் நுட்பமான முறையில் இலங்கையைக் கையாள, இலங்கையும் ஈழத்தமிழர் விவகாரத்தை உள்ளகப் பிரச்சனையாக மாற்றும் நோக்கிலும், தனது பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாகவும் பயன்படுத்துகின்றது.

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்திப் போரை இல்லாதொழிக்க 2009 ஆம் ஆண்டு கையாண்ட நுட்பமான அதே அணுகுமுறையை, இலங்கை 2021/22 ஆம் ஆண்டுகளிலும் கையாண்டு. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் சர்வதேச அரங்கில் இருந்து முற்றாகவே நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கவுரையில் ஈழத்தமிழ் மக்கள் விவகாரம் புறக்கணிக்கப்பட்டு வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாக மாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள நிலைமையானது, அனைத்துச் சிங்கள அரசியல் தலைவர்களின் விருப்பங்களில் இருந்து உதித்த கருத்துக்களே என்பதைச் சர்வதேசமும் புரிந்துகொண்டிருக்கும்.

இதன் பின்னனியில் செயலாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கே உண்டு. ஏனெனில் அமெரிக்க- இந்திய அரசுகள் வலிந்து வருபவை அல்ல.

சர்வதேசம் கூறுகின்ற பொறுப்புக் கூறலைக்கூடச் செய்யமாட்டேன் என்பதையும் கோட்டாபய வெளிப்படுத்தியிருக்கிறார்

அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையே முதன்மையானது. அந்த அடிப்படையில் பாதிக்கப்படுகின்ற தேசிய இனம் ஒருமித்த குரலோடு நின்றால் மாத்திரமே புவிசார் அரசியலைக் கடந்து காரியத்தைச் சாதிக்க முடியும்.

அதற்காகவே தமிழர்களுக்கான வெளியுறவு கொள்கை ஒன்று அவசியம் என்பதைத் தமிழ் அரசியல் பத்தி எழுத்தாளர்கள் அவ்வப்போது வற்புறுத்தி வருகின்றனர்.

பிரித்தாளும் தந்திரோபாயங்களுக்குள் எடுபட்டு முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் நகர்வுகளில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் விடுபட்டுச் சுயமரியாதையோடு சிந்திக்க வேண்டும் என்பதையே கொள்கை விளக்கவுரையும் இலங்கைக்கான இந்திய நிதி உதவியும் எடுத்துக் காட்டியது என்பதை உணரத் தவறும் பட்சத்தில் தமிழ்த்தேசியம் இலங்கை ஒற்றையாட்சிக்குள் கரைந்துபோகும் ஆபத்துக்களே உண்டு.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.