பிரித்தானியாவினதும் அமெரிக்காவினதும் பின்னணியைக் குறைத்துக்காட்டி

முன்னணி, இந்தியாவை மட்டும் குறை கூறி, மக்களை அரசியல் மூடர் ஆக்குகிறது

இந்தியாவையும் மேற்கையும் ஒருசேரக் கையாள பசில், பீரிஸ், மொராகொட ராஜதந்திரம்
பதிப்பு: 2022 ஜன. 29 19:26
புதுப்பிப்பு: ஜன. 30 07:36
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ரெலோ-சுமந்திரன் குழு மோதலுக்கு அப்பாலும் மக்கள் முன்னணியின் "செருப்படி-வெறுப்பேற்றுப்" போராட்டங்களுக்கு அப்பாலும், வடக்கு கிழக்கை மையப்படுத்திய ஈழத் தமிழர் தேசிய அரசியலும், தென்னிலங்கைக்கான தமிழ் பேசும் மக்களின் அரசியல் நகர்வுகளும் நாகரீகமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே காலத்தின் தேவை. பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று இந்தோ-பசுபிக் சக்திகளுக்கும் ஒருசேரத் தமிழர் கட்சிகள் இணைந்து காத்திரமாகச் சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மீண்டும் தளர்வடையாத விக்கிரமாதித்தன் முயற்சிகளுக்கான காலம் இது.
 
உண்மை விவகாரம் என்னவென்றால் இலங்கை ஒற்றையாட்சி அரசு இந்தியா குறித்த அச்சம் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவையோ, பிரித்தானியாவையோ ஏய்ப்பது சுலபம் என்று இலங்கை அரசுக்கு, குறிப்பாக ராஜபக்ஷாக்களுக்கு நன்கு தெரியும்.

இந்தியா தொடர்பாகவே அவர்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

இதே பயம் 2009 இன் முன்னர் இன அழிப்புப் போர் நோக்கிப் பயணிக்கும் போதும் இலங்கை அரசுக்கு இருந்தது என்பதை ஒரு முறை அல்ல, பல முறை, கோட்டபாய ராஜபக்ஷ (அப்போது அமெரிக்கப் பிரஜை) சொல்லியிருந்தார். அவரைப் போலவே மகிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களைச் சேர்ந்தவர்களும் இதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தமிழ் நாட்டின் அழுத்தம் மேலெழுந்தால், அதன் காரணமாக எந்த நேரத்திலும் இந்தியா தன் நிலைப்பாட்டை மாற்றிப் போரை நிறுத்திவிடலாம் என்று தமக்கு அச்சம் இருந்தது என்றும், அமெரிக்கா தொடர்பாகவோ வேறு மேற்கு நாடுகள் தொடர்பாகவோ தமக்கு அத்தகைய அச்சம் இருக்கவில்லை என்றும் கோத்தபாய ராஜபக்ஷா 2010 இல் தெரிவித்திருந்தார்.

அவரைப் போலவே, முன்னை நாள் ஜனாதிபதியின் நிரந்தர செயலாளரான லலித் வீரதுங்க, ராஜபக்ஷ அரசு வகுத்திருந்த "முக்கூட்டுக் குழு" (troika) உத்தி பற்றி 2018 ஜூன் மாதம் விபரமாக எழுதியிருந்தார். (பார்க்க: How crucial relations with India were managed in the last phase of the separatist war)

அண்மையில் இதே பயம் மீண்டு ஏற்பட்டதாலேயே மிலிந்த மொராகொட, ஜி.எல். பீரிஸ் மற்றும் பசில் ராஜபக்ஷா போன்றோர் முன்னிலைப்படுத்தப்பட்டு புதிய முறையில் இந்தியாவை மீண்டும் கையாளுகின்றனர்.

இந்த வகையில், இந்தியாவைக் கையாளும் இராஜதந்திரம் ஈழத் தமிழர்களுக்குத் தேவை. அதற்கு கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தடையாக இருந்தால், அது குறித்த ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டிய காலம் ஏற்பட்டு விட்டது என்ற பார்வை இன்றைய நாள் முதல் வலுக்க ஆரம்பித்துள்ளது.

அண்மையில் ராஜபக்ஷ அரசுக்கு ஏற்பட்ட பயம் என்னவென்றால், மோடி அரசு இலங்கை ஒற்றையாட்சி அரசு மீது சமஷ்டி பற்றிய அழுத்தத்தைக் கொடுக்கலாம் என்பதே. இதற்கான ஆதாரத்தை, மோடியின் 2015 இலங்கைப் பாராளுமன்ற உரையில் காணமுடியும்.

சமஷ்டி என்று எடுத்தெறிந்தவாக்கில் இந்தியா ஒருமுறையாவது சொல்லிவிட்டால் என்ன ஆவது?

குஜராத்தின் முதலமைச்சராக இருந்து, பின்னர் ஒரு வருடமளவாகவே இந்தியப் பிரதமராக அப்போது இருந்திருந்த நரேந்திர மோடி 13 மார்ச் 2015 இல் இலங்கைப் பாராளுமன்றில் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையில் அவர் இலங்கைக்குக் கொடுத்த அறிவுரை "கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவம்" என்பதாகும்.

(ஒன்பது நிமிடம், 14 செக்கனில் இருந்து பார்க்கவும்)

தனது அதி கூடிய திறமைசாலியும் அமெரிக்காவை நன்கு கையாளத் தெரிந்தவருமான மிலிந்த மொராகொடாவை கோட்டாபய ராஜபக்ஷ இதனாலேயே அமெரிக்காவுக்கு அனுப்பாமல் இந்தியாவுக்கான தூதுவராக நியமித்தார்.

மொராகொட மாகாண சபை முறைமையை முற்றாக ஒழித்துவிடுவதையே தனது இலக்காகக் கொண்டு இயங்குபவர். வடக்கு கிழக்கின் பிரச்சனையை அபிவிருத்தி மூலம் தீர்த்துவிடலாம் என்று வாதிடுபவர்.

அதேவேளை, மாகாணசபைகளை இலங்கை அரசு நிராகரித்தால், இது குறித்த எதிர்ப்பு மேற்கில் இருந்து வராது பார்க்கும் திறமை கொண்ட ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பலரும் எதிர்பார்ப்பதைப் போல மாகாண சபை தேர்தல் நடவாது போகும் நிலையும் எறபடலாம். மாகாண சபைத் தேர்தலை நடாத்தாமலே, இலங்கை அரசு ஒற்றையாட்சி அரசியல் யாப்பை மாற்றவும் முயற்சிக்கலாம். அல்லது, குறைந்த பட்சம் அப்படியான யாப்பொன்றின் வரைபை பாராளுமன்றத்துக்குள் நிரலிட்டு இந்தியாவின் அழுத்தம் எவ்வளவு தூரம் பாயத் தயாராய் இருக்கும் என்று பரிசோதிக்கவும் கோட்டபாயா தயாராகவே இருப்பார். இது எதிர்வரும் ஒரு சில கிழமைகளுக்குள்ளும் நடந்தேறலாம்.

ஆக, இந்தியாவை மட்டும் நோவதில் பயனில்லை. இந்தியாவைப் பகைத்துக் கொள்ளும் தோரணையில் நடப்பதும் நல்லதல்ல.

குரோதப் பார்வை ஊடாக மட்டுமே தொடர்ச்சியாக எமது உட்கட்சி மற்றும் தேர்தல் அரசியலைக் கையாண்டு அவ்வாறான நகர்வுகளை மேற்கொள்ள இயலாது.

இதில் எதைத் தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சரியாகச் செய்கிறது?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அப்பாலான தமிழ்த் தேசிய வெளி ஒன்று உருவாக்கப்படவேண்டியது காலத்தின் தேவையாகிறது.

இந்தியாவையோ, மேற்கையோ தனித்தனியே எதிர்பார்த்துக் காத்திருக்கும் செல்லப்பிள்ளைகளாக அன்றி, விஞ்ஞானபூர்வமாகத இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் திறனாற்றலோடு தமிழ்த் தேசிய அரசியலைக் கையாளும் அறிவு நிலையுடன் செயற்படவேண்டும்.