சமஷ்டியைக் கீழே தள்ளி, பதின்மூன்று மேலெழுவதை

எதிர்ப்பது சரி, ஆனால் முன்னணியின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் ஆரோக்கியமானதல்ல

தமிழர் தரப்புக்கான சுயாதீன அரங்கம் சொந்தக் காலில் உருவாக்கப்படவேண்டும்
பதிப்பு: 2022 ஜன. 30 03:07
புதுப்பிப்பு: பெப். 06 22:51
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை ஆரம்பப்புள்ளியாகக் கொண்டு தீர்வு நோக்கிப் பயணிப்பதற்கு எதிராகச் செய்யும் போராட்டம் வரவேற்கக் கூடியதே, ஆனால் இந்தியாவைப் பகைப்பது போல, அவர்களின் போராட்ட முறை அமைந்திருப்பது மூலோபாயத் தவறு என்பதை ஞாயிறு போராட்டம் நடைபெற ஒரு நாள் முன்பதாக, கூர்மை தொடர்பு கொண்டு வினவியபோது, அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தனது விமர்சனமாக முன்வைத்தார். அதேவேளை, இந்தியப் பிரதமருக்குக் கடிதம் வரைந்த தமிழர் தரப்புக்கான சுயாதீன அரங்கத்தை சொந்தக் காலில் நின்று உருவாக்காமல், இன்னுமொருவர் உருவாக்கியதில் இருந்து செயற்படுவதென்றால் முகவர் அரசியல் செய்யலாமே தவிர இந்தியா போன்ற சக்திகளைக் கையாளும் அரசியலைத் தமிழர்கள் ஒருபோதும் செய்ய முடியாது எனவும் அவர் விளக்கினார்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தப் புரிதலின் அடிப்படையில், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பிற்குள் உருவாக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தை, இலங்கை ஒற்றையாட்சி அரசு முதலாவதாக, முழுமையாகவும் உடனடியாகவும் அமுல்படுத்தி, இரண்டாவதாக, 13 இற்கும் அப்பால் அதிகாரப் பரவலாக்கத்தை எடுத்துச் செல்லலாம் என்று 1987 இன் பின் இலங்கையின் அரசு பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதியளித்து நிறைவேற்றாது விட்டவற்றையும் நிறைவேற்ற வைத்து, இறுதியாகச் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்டு கண்ணியத்துடன் வாழும் தீர்வொன்றை 'ஒன்றிணைந்த பிரிக்கப்படாத இலங்கைக்குள்' அடைவதற்கு இலங்கை அரசு மீது இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றே தமிழர் தரப்புகள் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் இறைஞ்சியுள்ளது.

ஒன்று, இரண்டு என இலக்கமிட்டு, 13ஐ முழுதாக நிறைவேற்றவேண்டும் என்பதை முதலாவதாகவும், அப்பாற்பட்டவற்றையும் செய்யவேண்டும் என்பதை இரண்டாவதாகவும் குறிப்பிடும் கடிதம், சமஷ்டி என்று மூன்றாவது இலக்கமிட்டுக் கூறத் தவறிவிட்டது.

பதிலாக, மறைமுகமாகவே அதை சுயநிர்ணயம், சமத்துவம் என்ற சொற்களினாலும் கோடி காட்டியுள்ளது.

அதேவேளை, பிரிவினை என்று சுயநிர்ணயம் அர்த்தப்படாமல் இருக்க, பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த இலங்கை என்றும் சொல்லி, இறுதி அரசியல் தீர்வை கோட்பாட்டு ரீதியாக முன்வைக்கிறது.

வழங்கப்பட்ட கடிதத்தில் சுயநிர்ணய உரிமை என்று குறிப்பிடும் இடத்தில் சம்ஷடி என்றும் முதலில் குறிப்பிட்டு, பின்னர் அது அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இனி அந்தப் பகுதிகளை, ஆங்கிலத்திலும் தமிழிலும், பார்ப்போம்:

தமிழ் மொழிபெயர்ப்பு

"இந்த நிலைமையில், இலங்கை அரசாங்கத்தை தனது பின்வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி வலியுறுத்த வேண்டும் என மாண்புமிகு தங்களிடம் கோருகிறோம்.

(i). பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தல்.

(ii). 1987 முதல் அரசாங்கத்தின் சகல தரப்புகளாலும் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துதல்.

அத்துடன் தமிழ் பேசும் மக்கள் தமது சுய நிர்ணய உரிமையைப் பயன்படுத்தும் வகையில், தம் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் கண்ணியத்துடனும், சுய கௌரவத்துடனும், அமைதியாகவும் பாதுகாப்பாகவும் ஒன்றிணைந்த பிரிக்கப்படாத நாட்டிற்குள் ஏற்படுத்தப்படும் அமைப்பில் வாழ்வதற்கு வழி செய்யவேண்டும்."

ஆங்கில மூலம்

"In this situation, we appeal to Your Excellency to urge the Government of Sri Lanka to keep its promises to:

(i). fully implement the provisions of the Thirteenth Amendment to the Constitution

(ii). implement the clear commitments made by all sections of government from 1987 onwards

and enable the Tamil speaking peoples to live with dignity, self-respect, peace and security in the areas of their historic habitation, exercising their right to self-determination within the framework of a united, undivided country."

நிறைவாக, தேசம் என்ற சொல்லையும், சமஷ்டி என்ற சொல்லையும் காணவில்லை.

பதின்மூன்றில் இருந்து ஆரம்பிப்பதா, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பதா என்ற பிரச்சனை சிலருக்குள்.

இரண்டில் இருந்தும் ஆரம்பிக்கலாகாது, ஒற்றையாட்சி இல்லாத ஒரு சூழலை வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஓரலகு ஆக்கி, அதிலிருந்து ஆரம்பித்து சமஷ்டி நோக்கி பயணிக்க வேண்டும் என்பது சிலருக்குப் பிரச்சனை.

ஆனால், பலருக்கு என்ன சிக்கல் தெரியுமா? இலங்கை அரசு சமஷ்டியே கேட்கமுடியாது என்பது போன்ற ஒரு புதிய அரசியலமைப்பை மார்ச் மாத இறுதிக்குள், மாகாண சபை முறையையும் முற்றாக நீக்கிய ஒரு வரைபின் ஊடாகப் பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் என்பதே.

ஆகவே, ஆய்வாளர் ஜோதிலிங்கம் சொன்னது போல, எமக்கு என்ன தேவை என்பதை நாமே சுயமாகச் சிந்தித்து முன்வைப்பது ஒன்றே.

அது ஏன் நடக்கவில்லை?

தேர்தல் அரசியலும், போட்டி அரசியலும் அனைவரின் கண்களையும் மூடிவிட்டது.