பெளத்த இனவாதிகளையும் இணைத்து

இலங்கை ஒற்றையாட்சியை பலப்படுத்த அமெரிக்க- இந்திய அரசுகள் முயற்சி

பௌத்த தேசியவாதம் இடம்மாறத் துடிப்பதைச் சாதகமாக்கிப் புவிசார் நலன்களைப் பெறவும் திட்டம்
பதிப்பு: 2022 பெப். 02 08:04
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 03 21:43
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கைத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்றபடுத்தப்பட வேண்டுமானால் அமெரிக்க- இந்திய அரசுகளும் அதனோடு இணைந்த உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் கூட்டுச்சேர்ந்தே முன்னர் செயற்பட்டிருந்தன. இருந்தாலும் 2015 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை உருவாக்கி அதனால் ஏற்பட்ட தோல்வியின் பின்னரான சூழலில், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதானால், வேறு வழிமுறைகளைக் கையாளும் உத்திகள் குறித்து மேற்கத்தைய நாடுகள் சிந்திக்க ஆரம்பித்துள்ளனபோல் தெரிகின்றது. சிங்கள மக்களும் சிங்கள ஆட்சியாளர்களும் விரும்புகின்ற இலங்கை ஒற்றையாட்சியைப் பலப்படுத்தித் தமது புவிசார் நலன்களைப் பெறுவதிலும் அமெரிக்க- இந்திய அரசுகள் கவனம் செலுத்துகின்றன. இதுவே இலங்கை விவகாரம் குறித்த தற்போதைய சர்வதேச அரசியல் வியூகமாகவுள்ளது.
 
2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஏற்றவாறு சிங்களத் தேசிய கட்சிகளும் சிங்களச் சிவில் சமூக மற்றும் பௌத்த அமைப்புகளும் எவ்வாறு தம்மைத் தயார்படுத்த ஆரம்பித்துள்ளதோ, அதேபோன்று தமிழர்களும் ஒரு தேசமாக மீண்டெழுவதற்கான நகர்வுகளே உடனடித் தேவை

எதிர்வரும் மார்ச்- செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுகளும் அதற்குரியவாறு களம் அமைத்துக் கொடுக்கலாம். அதற்கேற்றவாறே 13 ஐ தமிழ்த் தேசியக் கட்சிகளும் கோரியிருக்கின்றன.

தமக்குரிய புவிசார் நலன் அடிப்படையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தற்போது நகர்ந்து கொண்டிருக்கும் பல விவகாரங்களில் ராஜபக்ச அரசாங்கம் இணங்கத் தயக்கம் காண்பிக்கும் சூழல் தென்படுமானால், பாட்டாளி சம்பிக்க ரணவக்கவை மையப்படுத்திய ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு அமெரிக்க- இந்திய அரசுகள் தயாராகும் சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன.

2015 இல் திருகோணமலையை மையப்படுத்திய அமெரிக்க மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தை நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த, சம்பிக்க ரணவக்க முன் நின்று செயற்படுத்தியிருந்தமையே அதற்குப் பிரதான காரணம்.

ஆட்சி மாற்றம் ஒன்றே இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்குமென்ற பொய்மைக்குள் 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் உட்பட பலரும் நம்பியதொரு காலம் இருந்தது.

17 ஆண்டுகால ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்ததால், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பிரச்சினைகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளும் தீர்ந்து வடக்குக் கிழக்கு அடங்கலாக இலங்கைத்தீவு சுபீட்சமடையுமென்ற பிரச்சாரமும் அன்று பண்டாரநாயக்கா குடும்பத்தினால் கவர்ச்சிகரமாக முன்மொழியப்பட்டிருந்தன.

ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க பதவியேற்றுச் சில மாதங்களிலேயே மீண்டும் போர் மூண்டது.

அவ்வாறே 1999 ஆம் ஆண்டும் ஆட்சி மாற்றம் வரும் என்ற மற்றுமொரு பொய்யான நம்பிக்கை ஊட்டப்பட்டது. ஆனாலும் மீண்டும் சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய அரசாங்கம் பதவியேற்றது. இருந்தாலும் 113 என்ற சாதாரண பெரும்பான்மைகூட கிடைக்காததால், முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்து இறுதியில் சந்திரிகா அரசாங்கம் பதவி கவிழ்ந்தது. இதனால் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

இங்குதான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் விரும்பிய ஆட்சி மலர்ந்தது. அதாவது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைத்தது. 1978 ஆம் ஆண்டில் இருந்து 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை 17 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2001 ஆம் ஆண்டு புனிதப்படுத்தப்பட்டது.

இந்தவொரு நிலையில், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டோடு சமாதானப் பேச்சுக்களும் ஆரம்பித்தன. சந்திரிகா ஜனாதிபதியாகத் தொடர்ந்தும் பதவி வகித்திருந்த நிலையில், ஒப்பாசாரத்துக்காகவே சமாதான முயற்சிகளை அவர் ஆதரித்திருந்தார்.

இருந்தாலும் ரணில் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுப்பதால் அந்தச் சமாதானப் பேச்சுக்களின் முன்னேற்றங்கள் மற்றும் வடக்குக் கிழக்கில் செயற்படுத்தப்பட வேண்டிய உடனடி வேலைத்திட்டங்களுக்குச் சந்திரிகா இடையூறு விளைவித்துக் கொண்டிருந்தார்.

இதனை ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் ஒரு சாக்குப்போக்காக எடுத்து தமிழர்களின் அரசியல்தீர்வு மற்றும் இயல்பு நிலைமைகளை ஏற்படுத்தும் விடயத்திலும் இழுத்தடிப்புச் செய்தது.

இந்த இழுபறியின் உச்சமே 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட மூன்று அமைச்சுக்களின் பொறுப்புகளைச் சந்திரிகா ஜனாதிபதி என்ற முறையில் ரணில் அரசாங்கத்திடம் இருந்து பறித்தெடுத்தார்.

மார்ச்- செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுகளும் அதற்குரியவாறு களம் அமைத்துக் கொடுக்கலாம். அதற்கேற்றவாறே 13 ஐ தமிழ்த் தேசியக் கட்சிகளும் கோரியிருக்கின்றன

இதனால் அன்று கொழும்பில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றுமொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிசமைத்தது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய உள்ளிட்ட பெளத்த சிங்கள இனவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தன.

நோர்வேயின் சமாதானப் பேச்சுக்களை நிறுத்தப் போவதாகச் சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சியும் முழுமையாகக் கைப்பற்றப்படடது.

இதனால் மேற்குலகம் விரும்பியிருந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி கவிழ்ந்தது. ஆனாலும் மீண்டும் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டார். அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவுடனான பெரும் இழுபறிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார். (மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அப்போது சந்திரிகா விரும்பியிருக்கவில்லை)

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வேண்டுமென்பதில் அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் விரும்பியிருந்தன. ஆனால் துரதிஸ்டவசமாக மகிந்த ராஜபக்ச மயிரிழையில் ஜனாதிபதியாகத் தெரிவானார்.

இதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேலும் பலம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து கரு ஜயசூரிய தலைமையில் 17 உறுப்பினர்கள் மகிந்த தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றனர். போரை வெற்றிகொள்ளவே மகிந்தவுடன் இணைந்துள்ளதாக கரு ஜயசூரிய அன்று விளக்கமளித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு மீண்டும் போர் ஆரம்பித்தவொரு நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து மேலும் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தனர். இதனால் மேலும் பலம்பெற்ற மகிந்த அரசாங்கம் துணிவோடு போரை நடத்தியது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் போர்க்குற்றங்கள், இன அழிப்பு என்ற குற்றச்சாட்டுக்களை ஈழத்தமிழர்கள் சர்வதேச அரங்கில் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காது, மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக அதிகாரத் துஸ்பிரயோகம், மனித உரிமை மீறல் என்ற பொதுவான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஜே.வி.பி மற்றும் சில சிறிய சிங்களக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சியோடு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தன.

இதனால் போரை வெற்றிகரமாக நடத்தி முடித்தவரென அப்போது சிங்கள மக்கள் மத்தியில் புகழ்பாடப்பட்டு ஓய்வுபெற்றிருந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறக்கினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு ஆதரவு வழங்கியமைதான் அன்று ஆச்சரியமாக இருந்தது.

இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இதனை மறைமுகமாக வரவேற்று ஆதரவு வழங்கியிருந்தன. ஆனால் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் நிகழவில்லை.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் பிளவுகள் எழுந்தன. இலங்கையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் ஏற்பட்டுள்ள மனித உரிமைப் பிரச்சனைகளைத் தீர்க்க உரிய தலைமை அவசியம் என்ற அடிப்படையிலேயே பிளவுகளும் ஏற்பட்டிருந்தனவே தவிர. மாறாக ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் கருத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழச் சமூகத்துக்கு உடனடியாகத் தேவைப்படும் அடிப்படை உதவிகள் மற்றும் நிரந்த அரசியல்தீர்வு பற்றியதாக அந்தப் பிளவு இருக்கவேயில்லை. போரின் பக்க விளைவுகளான மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணிக் கையளிப்பு போன்ற விடயங்களில் கூட ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி அக்கறை செலுத்தியிருக்கவுமில்லை.

பாட்டாலி சம்பிக்க ரணவக்கவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சஜித் பிரேமதாசா, சம்பிக்க ரணவக்கவுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்தார். இருந்தாலும் கடந்த சில வாரங்களாக சஜித்- சம்பிக்க முறுகல் மேலும் இறுக்கமடைந்து வருகின்றன

ஆனாலும் 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சு நடைபெற்றபோது ரணில் விக்கிரமசிங்க புலிகள் இயக்கத்துக்குள் ஏற்படுத்திய பிளவுகள்தான் போரை வெற்றிகொள்ள இலகுவாக இருந்ததென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையைக் காப்பாற்ற முற்பட்டனர். இவ்வாறான இழுபறிகளுக்கு மத்தியில் மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்கு மேற்குலகம் தயாராகியது.

அதன் பெறுபேறுதான் மைத்திரிபால சிறிசேனா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக 2014 இல் களமிறக்கப்பட்டார். மேற்குலக நாடுகளின் அழுத்தங்களினால் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கு விட்டுக் கொடுத்திருந்தார்.

அன்று மகிந்தவுக்கு ஆதரவு வழங்கிப் பின்னர் முரண்பட்ட ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற சிங்கள இனவாதக் கட்சிகளும் முரண்பாடுகளில் உடன்பாடாக மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தன.

இதனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மூன்று மாதங்களில் மைத்திரி- ரணில் மோதல் ஆரம்பித்தது. அதனைப் பயன்படுத்திய ராஜபக்ச குடும்பம் 2016 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியை ஆரம்பித்து 2018 ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 214 சபைகளைக் கைப்பற்றி மீண்டும் தங்கள் அரசியல் செல்வாக்கைக் காண்பித்தது.

அன்றில் இருந்து கோட்டாபாயவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்துக்கள் கசிய ஆரம்பித்தன. 2018 ஆம் ஆண்டு அந்தப் பிரச்சாரம் உச்சம் தொட்டது. இதன் பயனாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோட்டாபய தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார். 2020 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனிப் பெரும்பான்மையோடு சிறிய கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன ஆட்சியமைத்தது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் நிறைவில் ராஜபக்ச அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றுமொரு ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. அத்தோடு தொடர்ச்சியாகப் பதவியை இழந்து வந்த ரணில் விக்கிரமசிங்க மீதும் அனுதாப அலையொன்றும் தற்போது வீச ஆரம்பித்திருக்கிறது.

2002இல் ரணில் சமாதானப் பேச்சை ஆரம்பித்த அன்றைய நாளே ஈழப்போருக்கும் முடிவுகட்டப்பட்டது என்றதொரு உணர்வு இன்றுவரை சிங்கள மக்கள் மத்தியில் இல்லாமலில்லை.

ரணிலுக்கு ஆதரவான சிங்கள நாளேடுகளில் வெளிவரும் அரசியல் கட்டுரைகள் அதனைப் புடம்போட்டுக் காண்பிக்கின்றன. 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றாத நிலையில் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் என்ற முறையில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.

சஜித் தலைமையிலான 54 உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியாகச் செயற்பட்டாலும், அங்கு ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலை போன்ற காரணிகள், ரணில் விக்கிரமசிங்கவுக்குச் சாதகமானதொரு சூழலை உருவாக்கியுள்ளதெனலாம்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தனித்துச் சுதந்திரமாக ஆட்சியமைத்தால் தமக்கும் வசதியாக இருக்கும் என்றவொரு கனவு அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கும் உண்டு. எவ்வாறாயினும் தேர்தல் வெற்றிக்கு இனவாதமே பிரதான முதலீடாக இருக்க வேண்டும் என்பது சிங்கள அரசியலின் பொதுவிதி.

அதனால்தான் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவையும் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சஜித் பிரேமதாசா, சம்பிக்க ரணவக்கவுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முயற்சித்தார். இருந்தாலும் கடந்த சில வாரங்களாக சஜித்- சம்பிக்க முறுகல் மேலும் இறுக்கமடைந்து வருகின்றன.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க சம்பிக்க ரணவக்க விரும்புகின்றார். ஆனால் சஜித் அதற்கு உடன்படவில்லை. இதனாலேயே எதிர்க்கட்சிகளின் கூட்டில் முரண்பாடு முற்றியுள்ளது. ரணிலைப் போன்றே சம்பிக்க ரணவக்கவின் பின்னாலும் அமெரிக்கா செயற்படுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

ஏனெனில் திருகோணமலையை மையப்படுத்திய அமெரிக்காவின் புவிசார் நலனில் சம்பிக்க ரணவக்கவுக்கு அக்கறையுண்டு. இதனால் இவர் தீவிர பௌத்த தேசியவாதியாக இருந்தாலும், அமெரிக்கப் பின்புலம் இருக்க வாய்ப்புண்டு.

இதனால் முடிந்தவரை ரணில் விக்கிரமசிங்கவோடு சம்பிக்க ரணவக்கவை இணைத்துச் செயற்பட வைக்கும் முயற்சிகளில் அமெரிக்க ஈடுபடும் சந்தர்ப்பங்களும் வெளிப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் ஈழத்தமிழர்களுக்கும் மேற்குலகத்துக்கும் நல்ல பிள்ளையாகத் தன்னை உருவகப்படுத்த ஆரம்பித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க. அத்துடன் 2002 இல் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களே 2009 இல் போரை முடிவுறுத்தியதெனச் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லப் பல புனை கதைகளும் ரணிலிடம் உண்டு.

ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழர்களுக்கும் மேற்குலகத்துக்கும் நல்ல பிள்ளையாகத் தன்னை உருவகப்படுத்த ஆரம்பித்துள்ளார். 2002 இல் தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களே 2009 இல் போரை முடிவுறுத்தியதெனச் சிங்கள மக்கள் மத்தியில் சொல்லப் பல புனை கதைகளும் ரணிலிடம் உண்டு

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லாதிக்க நாடுகளும் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளும் ஈழத்தமிழர்களை அரவணைத்துக் கொண்டு கதை சொல்லி மீண்டும் மூளையைக் கழுவும். அதனைத் தமிழரசுக் கட்சியும் புலம்பெயர் நாடுகளில் உள்ள சில அமைப்புகளும் ஏற்றுக்கொண்டு பிரச்சாரங்களை ஆரம்பிக்க வாய்ப்புகளும் இல்லாமலில்லை.

ஆனால் ஆட்சி மாற்றங்களின்போது இனவாதம் வெவ்வேறு வடிவங்களில் தேவைக்கு ஏற்ப இடம்மாறுவது மாத்திரமே இலங்கை அரசாங்க முறையில் காணமுடிகின்றது என்ற வரலாற்று உண்மையைத் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இனியாவது உணர வேண்டும்.

அத்துடன் இலங்கை அரசு என்ற கட்டமைப்பே கடந்த எழுபது ஆண்டுகால இன அழிப்புக்குக் காரணம் என்பதைத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் நிறுவுவதற்கான உறுதியான செயல்த் திட்டங்களை முன்னெடுப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு ஏற்றவாறு சிங்களத் தேசிய கட்சிகளும் சிங்களச் சிவில் சமூக மற்றும் பௌத்த அமைப்புகளும் எவ்வாறு தம்மைத் தயார்படுத்தி வருகின்றதோ, அதேபோன்று தமிழர்களும் ஒரு தேசமாக மீண்டெழுவதற்கான நகர்வுகளே உடனடித் தேவையாகவுமுள்ளது.

ஆகவே 2024 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்ற சிங்களக் கட்சிகளின் தயார்படுத்தலில் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஈடுபட முற்படுவதை முற்றாக நிறுத்த வேண்டும்.

சஜித் வந்தால் என்ன, சம்பிக்க வந்தால் என்ன, ரணில் வந்தால் என்ன எல்லோருமே இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்பைப் பாதுகாக்கும் சிங்களத் தரைலவர்கள் என்பதை தமிழர்கள் இனிமேலாவது புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இனவாதம் இடம் மாறத் துடிக்கிறது.

பசில் ராஜபக்சவைப் பிரதானப்படுத்தி மற்றுமொரு அணியும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளன. அதற்கான மேற்குலகப் பின்புலம் எவ்வாறு, எந்த அடிப்படையில், எவ்வாறானதொரு சூழலில் பசில் ராஜபக்சவுக்குக் கிடைக்குமெனத் தற்போதைக்குக் கூற முடியாது.

ஆகவே இலங்கைத்தீவில் பௌத்த தேசியவாத செல்வாக்குள்ள அரசியல் தலைவர்களின் தேல்தல் வெற்றிக்குரிய சமகால அறிகுறிகளையும் அவதானித்தே இந்தியா, மற்றும் பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் இயங்கி வருகின்றன.

தேர்தல் காலத்தில் பலமுள்ள கட்சிகளைப் பற்றிப் பிடித்துத் தமது புவிசார் நலன்களைப் பெறுவது மாத்திரமே இந்த வல்லாதிக்க நாடுகளின் இராஜதந்திரம். மாறாகப் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களோ அல்லது முஸ்லிம் மக்களோ அல்ல.