ஜெனீவா அமர்வு நடைபெறவுள்ள நிலையில்

கிட்டு பூங்கா பிரகடனத்தோடும் 13 ஐ கோரும் கடிதத்துடனும் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் மௌனம்

ஆனால் இலங்கை தீவிரமாக முன்னெடுக்கும் இராஜதந்திர நகர்வு-பீரிஸ் புதுடில்லியில்
பதிப்பு: 2022 பெப். 06 22:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 10 02:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பிய தமிழ்த் தேசியக் கட்சிகளும், அதற்கு எதிராகவும் கண்டித்தும் பேரணி நடத்தி யாழ் கிட்டு பூங்காவில் பிரகடனம் நிறைவேற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமைதியாக இருக்கும் நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையைக் கையாளும் உத்திகளை இலங்கை மிக நுட்பமாக மேற்கொண்டு வருகின்றது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி சென்றடைந்த அமைச்சர் பீரிஸை இந்திய வெளியுறவு அமைச்சின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வரவேற்றார்.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியையும் கோட்டாபாய சொன்ன "அர்ப்பணிப்பு" பற்றியும் ஆணையாளர், கடந்த செப்ரெம்பர் மாத அறிக்கையில் விபரித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் வெளிவரவுள்ள ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கையும் அமைய வேண்டுமென்ற நோக்கில் சிங்கள இராஜதந்திரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

செவ்வாய்க்கிழமை வரை புதுடில்லியில் தங்கியிருக்கும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய முதலீட்டாளர்களையும் சந்திக்கவுள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுருத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதமர் நரேந்திரமோடிக்குச் சென்ற பதின்மூன்றாம் ஆம் திகதி கடிதம் அனுப்பியபோது, அதனைக் கண்டித்திருந்த இலங்கை அமைச்சர்கள் பலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனேயே தமிழ்த் தேசியக் கட்சிகள் பேச வேண்டுமென்ற தொனியில் கருத்து வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக எந்தவிடயமாக இருந்தாலும் இலங்கை அரசாங்கத்துடன் மாத்திரமே தமிழ்த் தேசியக் கட்சிகள் பேச வேண்டுமென்றும் இந்தியாவுடன் அல்ல எனவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதுடில்லிக்குச் சென்றுள்ள அமைச்சர் பேராசியர் பீரிஸ், பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கவுள்ளார். ஆனால் இலங்கைக்குக் கடன் வழங்குவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்த பேச்சுக்களில் மாத்திரமே பேராசிரியர் பீரிஸ் ஈடுபடுவாரென கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.

இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாகவே அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் புதுடில்லியில் கலந்துரையாடுவாரென இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபை தொடர்பான விடயங்கள் குறிப்பாக இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கை தொடர்பாகவும் பேசுவாரென கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த பேராசிரியர் பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் பிரதமர் மோடிக்கு அனுப்பியிருந்த கடிதம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் யாழ்ப்பாணத்தில் வெளியிடவில்லை.

அதேநேரம் இலங்கை நீதியமைச்சர் அலி சப்ரியும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று, இலங்கை நீதித்துறையின் முக்கியத்துவம் தொடர்பாகப் பேசியிருந்தார். இலங்கை அரசாங்கத்துடன்தான் தமிழ்த்தேசியக் கட்சிகள் பேச்சு நடத்த வேண்டுமெனவும் கூறியிருந்தார். அரசாங்கம் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாகவும் அமைச்சார் அலி சப்ரி கூறியிருந்தார்.

ஆகவே ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வை மையமாகக் கொண்டு இலங்கை அரசாங்கம், இலங்கை தொடர்பான ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கையின் வீச்சைக் குறைக்கும் நோக்குடன் செயற்படுவதையே அவதானிக்க முடிகின்றது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன்னதாக, 46/1 தீர்மானம் போடப்படுவதற்க்கும் முன்னதாக, ஜனவரியில் தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளும் சிவில் மற்றும் மதத் தலைவர்களும் இணைந்து ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA), தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி (TMTK), மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஆகிய மூன்று கூட்டுகளும் இன அழிப்புக் கெதிரான சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தன.

ஆனாலும் ஆணையாளரின் அறிக்கையில் எதிர்பார்த்தளவு மாற்றங்கள் இருக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே 13 ஐ தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரியுள்ளன.

அதுவும் 2015 ஆம் ஆண்டு முதல் மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் 13 தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்தவொரு நிலையில், இந்த ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் தாமாகவே 13 ஐ கோரியுள்ளன.

இந்த நிலையில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் புதுடில்லிக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்காவும் இம்முறை ஜெனீவா மனித உரிமைச் சபைக்குள் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்க- இந்திய அரசுகளின் ஆதரவைப் பெறும் நோக்கில் இலங்கை இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் 13 ஐ கோரும் கடிதத்தை அனுப்பிவிட்டு அமைதியாக இருக்கின்றனர். அதற்கு எதிராகப் போராட்டம் நடத்திப் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்ட பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமைதியாகவுள்ளது.

ஆனால் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவோ, கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளில் இலங்கை அரச கட்டமைப்பு எவ்வாறான ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டது என்பது பற்றியோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள் எந்தவொரு ஆவணங்களையும் தயாரிக்கவில்லை.

அத்துடன் இன அழிப்பு விசாரணை குறித்துத் தொடர்ச்சியான அழுத்தங்களையும் அதற்கான ஆதாரங்களைத் திரட்டியும் ஜெனீவாவுக்கு அனுப்பும் செயற்பாடுகளிலும் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒழுங்காக ஈடுபடவில்லை.

இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் ஆட்சி முறைக்காகவே தமிழ் இன அழிப்பு இடம்பெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிக் கொண்டு மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்க- இந்திய அரசுகள் மற்றும் பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகள், இலங்கை ஒற்றையாட்சியை மேலும் சீர்ப்படுத்தும் பொறிமுறைகளையே தமது பரிந்துரைகளில் முன்மொழிந்து வருகின்றன.

அதனையே ஆணையாளரின் கடந்த செப்ரெம்பர் மாத வாய்மொழி மூல அறிக்கையும் எடுத்தியம்பியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் இன்றுவரை அதற்குப் பதிலடி கொடுக்கக்கூடிய எந்தவொரு செயன்முறைகளிலும் ஈடுபடவில்லை.

இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் ஆட்சி முறைக்காகவே தமிழ் இன அழிப்பு இடம்பெற்றது. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிக் கொண்டு மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்க- இந்திய அரசுகள் மற்றும் பிரித்தானியா, ஜேர்மனி போன்ற நாடுகள், இலங்கை ஒற்றையாட்சியை மேலும் சீர்ப்படுத்தும் பொறிமுறைகளையே தமது பரிந்துரைகளில் முன்மொழிந்து வருகின்றன

கடந்த செப்ரெம்பர் மாதம் அமர்வில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ். 13 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இலங்கையின் உள்ளகப் பொறிமுறையை நியாயப்படுத்தியே 13 பக்க அறிக்கை அமைந்திருந்தது.

அதனை ஏற்றுக் கொண்டதொரு முறையிலேயே மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையும் அமைந்திருந்தது.

அதாவது தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற காணி அபகரிப்புகள், பௌத்த மயமாக்கல், மரபுரிமைப் பண்பாட்டு அழிப்புப் போன்ற இன அழிப்புக் குறித்த எதனையுமே ஆணையாளர் தனது அறிக்கையில் கூறியிருக்கவில்லை.

மாறாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியையும் கோட்டாபாய சொன்ன "அர்ப்பணிப்பு" பற்றியும் ஆணையாளர் தனது அறிக்கையில் விபரித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் மார்ச் மாதம் வெளிவரவுள்ள ஆணையாளரின் எழுத்து மொழிமூல அறிக்கையும் அமைய வேண்டுமென்ற நோக்கில் இலங்கை ஒற்றையாட்சி அரசும், அதன் உயர்மட்ட சிங்கள இராஜதந்திரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் கிட்டு பூங்கா பிரகடனத்தோடும் 13 ஐ கோரும் கடிதத்துடனும் தமிழ்த் தேசியக் கட்சிகள் அமைதியாகிவிட்டதாக அவதானிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளனர்.