13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆதரித்து

குழப்பமான கருத்துக்களை முன்வைக்கும் சிவாஜிலிங்கம் தமிழ் நாட்டில் என்ன சொல்லப் போகின்றார்?

தமிழக அமைப்புகள் கவனத்தில் எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை
பதிப்பு: 2022 மார்ச் 20 15:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 22 21:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
ஈழத்தமிழர் அரசியல் விடுதலை தொடர்பான கருத்துக்களில் அவ்வப்போது குழப்பமான நிலைப்பாட்டோடு செயற்பட்டு வரும் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் நாட்டில் எவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போகின்றார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரானவர் என்று கூறிக்கொண்டு, தற்போது தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ள சிவாஜிலிங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நியாயப்படுத்தி பேசவுள்ளதாகவே அவரது கூட்டமைப்பின் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளரான சிவாஜிலிங்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஆரம்பப் புள்ளியாக ஏற்று அதிகாரப்பரவலக்கம் குறித்துப் பேச முடியுமென கூறியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சமீபத்தில் தமிழ் நாட்டுக்குச் சென்று தி.மு.க. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜா மற்றும் தி.மு.க. மூத்த உறுப்பினர்களையும் சந்தித்திருந்தவொரு நிலையில் சிவாஜிலிங்கமும் தமிழ் நாட்டுக்குச் சென்றிருக்கிறர்.

பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலமான 13 பிளஸ் என்றும் ஒஸ்லோ தீர்மானத்தின் படி சமஸ்டியை கோருவதெனவும் சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ரெலோ 13 மாத்திரம் போதுமானதெனக் கூறியிருந்தது.

சிவாஜிலிங்கத்தின் கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் அதே நிலைப்பாட்டில் இருந்தார். இந்தவொரு நிலையில் சுமந்திரனின் செயற்பாடுகளையே கண்டித்து விமர்சிக்கும்போது, 13 மாத்திரம் போதுமானதெனக் கருத்திட்ட கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கத்தை தமிழகத்தில் எப்படி ஆதரிக்கிறார்கள் என்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது மாத்திரமல்ல, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் எனக் கூறப்பட்டிருப்பதாகத் திரிபுபடுத்தப்பட்ட கருத்தையும் கடந்த வருட இறுதியில் சிவாஜிலிங்கம் வெளிப்படுத்தியிந்தார்.

ஆனால் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடங்கள் என்றே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறப்பட்டிருப்பதாகத் தவறாகச் கூறியதைப் பின்னர் உணர்ந்து கொண்ட சிவாஜிலிங்கம், அது தொடர்பாகத் திருத்தம் செய்து கருத்தை வெளியிடுவதாகக் கூறியிருந்தபோதும், இதுவரை அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட கருத்தை அவர் வெளியிடவேயில்லை.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது தமிழ் நாட்டுக்குச் சென்றுள்ள சிவாஜிலிங்கம், அங்குள்ள ஈழவிடுதலைச் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து, சுமந்திரனின் செயற்பாடுகளுக்கு எதிரான கருத்துடையவர் என்ற அடிப்படையில், அங்கு அமெரிக்க- இந்திய அரசுகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிடவுள்ளதாக தமிழ் நாடு குறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையில் நடத்தவுள்ள பத்திரிகையாளர் மாநாட்டில், பிரதமர் நரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பிய செயற்பாடுகள் பற்றியும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை மையமாகக் கொண்டு அதிகாரப்பரவலாக்கம் பற்றித் தொடர்ச்சியாகப் பேச முடியுமெனவும் சிவாஜிலிங்கம் கூற இருக்கின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மோடிக்குக் கடிதம் அனுப்பிய ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளில் சிவாஜிலிங்கத்தின் தமிழ் மக்கள் தேசியக் கட்சியும் கைச்சாத்திட்டுள்ளது. கட்சியின் தலைவர் எஸ்.சிறிகாந்தா கடிதத்தில் கைச்சாத்திட்டிருக்கிறார்.

ஆகவே மோடிக்கு அனுப்பிய கடிதத்திற்குத் தமிழ் நாடு அரசும் தமிழ் நாட்டில் உள்ள ஈழவிடுதலைச் செயற்பாட்டாளர்களிடமும் சிவாஜிலிங்கம் ஆதரவு கோரவுள்ளாரா என்ற கேள்வியும் இல்லாமலில்லை.

சிவாஜிலிங்கம் அவ்வப்போது தேவைக்கு ஏற்பத் தனது கொள்கையை மாற்றிச் செயற்படுபவர் என்பது பற்றி தமிழ் நாட்டில் உள்ள ஈழவிடுதலைச் செயற்பாட்டாளர்களுக்குத் தெரியாதவொரு நிலையிலேயே நாளைய பத்திரிகையாளர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

சிவாஜிலிங்கம் முன்னொரு காலத்தில் குறிப்பாக 2009 காலத்தில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தமிழ் நாட்டில் பல செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்பது உண்மையே.

சிவாஜிவலிங்கத்துக்குத் தமிழ் நாட்டில் நல்ல செல்வாக்கும் இருந்தது.

ஆனால் அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தித் தற்போது குழப்பமான அரசியல், குறிப்பாகப் 13 பற்றிய செயற்பாடுகளுக்காகத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. தமிழ் நாட்டு அமைப்புகள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

13 ஐ முழுயாக நிராகரித்தோ அல்லது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிகரித்தோ, சிவாஜிலிங்கம் இதுவரை கருத்துக்களைப் பகிரங்கமாகக் கூறவேயில்லை.

செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரொலோ இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று செயற்பட்ட சிவாஜலிங்கமும் சிறிகாந்தாவும் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை உருவாக்கிச் செயற்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் ரெலோ இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான முயற்சிகளும் இடம்பெறுகின்றன.

13 ஐ கேட்டு மோடிக்குக் கடிதம் அனுப்பும் வேலைத் திட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்தது ரெலோ இயக்கமே. எனவே இதன் பின்னணியில் சிவாஜலிங்கம், தமிழ் நாட்டில் தனக்கு முன்பிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி 13 இற்கான ஆதரவை கோரவுள்ளாரா என்ற சந்தேகமே தற்போது எழுந்துள்ளது.

ஆகவே வடக்குக் கிழக்கில் இருந்து தமிழ் நாட்டுக்குச் செல்லும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிச் சரியான புரிதலோடு. தமிழ் நாட்டில் செயற்படும் ஈழ விடுதலைச் செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலும், அமெரிக்க- இந்திய அரசுகளின் தேவைக்கு ஏற்பவும் அவ்வப்போது தமிழ்த்தேசியம் தொடர்பான கருத்துக்களை மாற்றி மாற்றிச் செயற்பட்டு வரும் தமிழ்த்தேசியக் கட்சிகள் பற்றித் தமிழ் நாட்டில் உள்ள செயற்பாட்டாளர்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

சுமந்திரனின் செயற்பாடுகளைக் கண்டித்து விமர்சிக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஏனைய உறுப்பினர்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை உரிய முறையில் முன்னெடுப்பவர்கள் என்பது அர்த்தமல்ல.

தமிழ்த் தேசியத்துக்கான நேர்மையான அர்ப்பணிப்பு சுமந்திரன் எதிர்ப்பாளர்களிடம் இருக்கும் என்று நம்பவும்கூடாது.

ஆகவே குழப்பமான நிலைப்பாடுகளுடன் கருத்துக்களைக் கூறித் தமிழ் நாட்டில் ஈழவிடுதலைக்காக நீதியாகச் செயற்பட்டு வரும் அமைப்புகளையும் குழப்பும் வகையில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் சில உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதைத் தமிழ் நாட்டுச் செயற்பாட்டாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தி.மு.கவின் கே.எஸ். இராதாகிருஷ்னண் சமீபத்தில் இலங்கைக்கு வந்தபோது யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களுக்கும் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது. சிவாஜிலிங்கத்தை இராதாகிருஸ்னண் சந்தித்திருந்தார். சிவாஜிலிங்கத்துடன் சட்டத்தரணி கரிகாலனும் கூட இருந்தார்.

அப்படியானால் தி.மு.க.வும் ரெலோவுடன் இணைந்து 13 பற்றி மோடிக்கு அனுப்பிய கடிதத்திற்கு ஆதரவாகச் செயற்படவுள்ளதா என்ற கேள்வியை ஈழத்தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் முன்வைக்கின்றனர்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன் அண்மையில் இலங்கை வந்திருந்தபோது சிவாஜிலிங்கத்தையும் சட்டத்தரணி கரிகாலனையும் சந்தித்தபோது
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினர் கே. எஸ். இராதாகிருஷ்ணன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது சிவாஜிலிங்கத்தையும் சட்டத்தரணி கரிகாலனையும் கடந்தமாதம் சந்தித்தபோது